குடுமி பிடி சண்டையில் நடிகர்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கம் ஆமை புகுந்த வீடுபோல ஆகிவிட்டது!

Update:2024-01-02 00:00 IST
Click the Play button to listen to article

 (02.01.2005 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

தென்னிந்திய நடிகர் சங்கம் ஆமை புகுந்த வீடுபோல ஆகிவிட்டது!

நடிகர் சங்க செயலாளர் பதவியை சரத்குமார் ராஜினாமா செய்தார். செயற்குழு உறுப்பினராக இருந்த நடிகர் பார்த்திபன் அந்தப் பதவியை விட்டு விலகினார். நடிகர்களுக்குள் புகைந்து கொண்டிருந்த சண்டை இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு என இளவட்டங்கள் ஒரு பக்கம் கட்டிப் புரண்டு கொண்டிருக்க, பெருசுகளின் சண்டையும் இப்போது வீதிக்கு வந்துவிட்டது. மூத்த நடிகர்களான சத்தியராஜ் - விஜயகாந்த் இடையே இவ்வளவு நாள் நடந்துவந்த பனிப்போர் முற்றி நேருக்கு நேர் மோதத் தயாராகி விட்டார்கள் என்பதுதான் நடப்புச் செய்தி!

மகா நடிகன்!

‘மகா நடிகன்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சத்தியராஜ், படத்தில் சக நடிகர்களை வசனம் மூலம் வாருவாரென்று வாரியிருக்கிறார்! ‘நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, மலைகள் இணைப்புத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்காக ஒரு ரூபாய் நன்கொடை அளிக்கிறேன்’ என்பது போன்ற வசனங்கள் சக நடிகர்களை மிகுந்த எரிச்சலடைய வைத்துள்ளது! படத்தைப் பார்த்த நடிகர் - நடிகைகள் மனதுக்குள் தங்கள் புலம்பலை வைத்து குமுறினார்களே தவிர, வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதற்கு ஒருவகையில் காரணம், சத்தியராஜ் மூத்த நடிகர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் அனுதாபியும்கூட!


நடிகர்கள் சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் 

ஆனால், விஜயகாந்த் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்! விஜயகாந்த் கூறும்போது…

“சத்தியராஜை பொருத்தவரை தனி மனிதனாக யாருக்கும் தெரியாது. ஒரு நடிகனாகத்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், என்னையோ ரஜினியையோ பொது வாழ்க்கையில் தொடர்புபடுத்தித்தான் பார்க்கிறாங்க. சினிமாவில் இருந்துகொண்டு சினிமாவை கிண்டல் பண்ற சத்தியராஜ், மல்லாந்து படுத்துக் கொண்டே எச்சில் துப்புகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்!” என்றார் விஜயகாந்த்.

இந்தப் புகைச்சல் குறித்து சில நடிகர் - நடிகைகளிடம் கருத்துக் கேட்டோம்...


மூத்த நடிகை ஆச்சி மனோரமா, இயக்குநர் மற்றும் நடிகர்களான டி.ராஜேந்தர் மற்றும் பார்த்திபன், நடிகை குஷ்பு மற்றும் நடிகர் சிம்பு  

‘ஆச்சி’ மனோரமா: நடிகராக இருந்துகொண்டே நடிகர் - நடிகைகளை கிண்டல் செய்வது என்ன நியாயம்? அதுவும் ரஜினி, விஜயகாந்த் போன்ற மூத்த நடிகர்களை?

இயக்குநர் டி.ராஜேந்தர்: சத்தியராஜ் படம் என்றாலே நக்கலுக்குக் குறைவிருக்காது. அதை இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கிறார் என நினைக்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்காமல் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது.

இயக்குநர், நடிகர் பார்த்திபன்: படத்தைப் பார்த்தேன். படத்தில் சத்தியராஜ் யாரை விமர்சித்து இருக்கிறாரோ, அவர்களே சும்மா இருக்கும் போது நான் அதைப்பற்றி பேசுவது மூக்கை நுழைப்பது போல் ஆகிவிடும்!

குஷ்பு: முன்பு பத்திரிகைக்காரர்கள்தான் நடிகர் - நடிகைகளை கேவலப்படுத்தினார்கள். இப்போது நடிகர்களே தங்களைக் கேவலப்படுத்திக் கொள்ளுவதா? இதைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

நடிகர் தனுஷ்: பெரிய நடிகர்கள் மோதிக்கொள்ளுகிறார்கள். நான் கத்துக்குட்டி! ஆளைவிடுங்கள்!

நடிகர் சிம்பு: தமிழ்த் திரையில் இது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை கிடையாது! அவ்வளவுதான்.

இம்மாதம் 29-ம் தேதி நடிகர் சங்கக் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் இதுபற்றி அலசப்படும்! மோதலுக்குக் குறைச்சல் இருக்காது!!

Tags:    

மேலும் செய்திகள்