70-களில் சிவாஜிக்கு தொடர் வெற்றிகள் தந்த ரீமேக் படங்கள் !

தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களுக்கு என்று தனி இடம் எப்போதுமே உண்டு.

Update: 2023-10-02 18:30 GMT
Click the Play button to listen to article

காலங்காலமாக தமிழ் சினிமாவில் ரீமேக் படங்களுக்கு என்று தனி இடம் எப்போதுமே உண்டு. அது அன்றைய எம்.ஜி.ஆர், சிவாஜி துவங்கி இன்றைய விஜய், அஜித் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் ரீமேக் படங்கள் எடுப்பதில் சில சிரமங்களும் உள்ளன. அது என்னவேனில் நல்ல திரைப்படங்களை பார்க்க மொழி ஒரு தடையில்லை என்றாலும், அந்தந்த படத்தை அந்தந்த மொழிகளில் பார்த்தால்தான் அதில் ஒளிந்திருக்கும் நுணுக்கங்கள் புரியும் என்பார்கள். அந்த வகையில் ரீமேக் படங்கள் அதனை சாத்தியப்படுத்துவதில் பலமுறை தவறிவிடுவதோடு, ஏற்கனவே ஒரு மொழியில் ஹிட் ஆனதையும் மீறி தமிழுக்கு ஏற்றபடி அதனை மாற்றியமைத்து ஜெயித்துக்காட்டுவது என்பது அவ்வளவு சுலபமும் அல்ல. ஆனால் அந்த சவாலையும் சாதனையாக மாற்றிக்காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். குறிப்பாக, 70-களில் அவர் நடிப்பில் வெளிவந்த பல ரீமேக் படங்கள் வசூல் சாதனைப் படைத்ததோடு, ஒரிஜினல் படத்தையே மிஞ்சிய படியான வரவேற்பையும் மக்களிடம் பெற்றது. அப்படி அந்த காலகட்டத்தில் சரித்திரம் படைத்த சிவாஜி திரைப்படங்கள் என்னென்ன என்ற தகவலை கீழே காணலாம் வாருங்கள்...

எங்க மாமா (1970)

1968ம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் 'பிரம்மச்சாரி'. பாப்பி சோனே இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷம்மி கபூர், ராஜ்ஸ்ரீ, பிரான், மும்தாஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திய அளவில் வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை தமிழில் 'எங்க மாமா' என்ற பெயரில் ரீமேக் செய்தபோது ஷம்மி கபூர் கதாபாத்திரத்தில் சிவாஜியும், ராஜ்ஸ்ரீ கதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும், மும்தாஜ் கதாபாத்திரத்தில் வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடித்திருந்தனர். படத்தின் கதை என்று பார்த்தால் கோடீஸ்வரரான சிவாஜி ஏழை குழந்தைகள் மீது பாசம் கொண்டு அவர்களுக்கென்று பாதுகாப்பு இல்லம் கட்டி நடத்தி வருகிறார். அப்போது ஏதோ ஒரு சூழ்நிலையால் தற்கொலைக்கு முயலும் ஜெயலலிதாவை காப்பற்றும் சிவாஜி தன்னுடனேயே அழைத்து செல்வதோடு, இருவரும் காதலிக்கவும் துவங்குகின்றனர். இந்த நேரத்தில் என் வயிற்றில் வளர்வது சிவாஜியின் குழந்தை என்று கூறி இல்லத்துக்குள் வருகிறார் வெண்ணிற ஆடை நிர்மலா. இதற்கு பின் சிவாஜி எப்படி தனக்கு எதிராக திரிக்கப்பட்ட சூழ்ச்சிகளை வீழ்த்தி ஜெயலிதாவை மீண்டும் கை பிடிக்கிறார் என்பது தான் கதை. கேட்பதற்கு மிகவும் சாதாரண கதையாக தோன்றினாலும் ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் அன்று 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை ஈட்டி தந்தது.


'பிரம்மச்சாரி' மற்றும் 'எங்கள் மாமா' திரைப்படம்  

எங்கிருந்தோ வந்தாள் (1970)

'குல்ஷன் நந்தா' எனும் எழுத்தாளர் எழுதிய 'பத்தர் கே ஹோந்த்' என்ற நாவல் 1963-ம் ஆண்டு தெலுங்கில் 'புனர்ஜென்மா' எனும் பெயரில் படமாக எடுக்கப்பட்டு மிக பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ஏழு வருட இடைவேளைக்கு பிறகு தமிழில் 'எங்கிருந்தோ வந்தாள்' என்ற பெயரில் அப்படம் ரீமேக் செய்யப்பட்டது. நாகேஸ்வர ராவ் கதாபத்திரத்தில் சிவாஜிகணேசனும், கிருஷ்ண குமாரி காதாபாத்திரத்தில் ஜெயலலிதாவும் நடித்திருந்தனர். கே. பாலாஜி தயாரிப்பில், ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் கதை என்று பார்த்தால் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மேஜர் சுந்தர்ராஜன். இவரது மகன்களில் ஒருவரான சிவாஜி ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் சிலரின் சூழ்ச்சியால் சிவாஜியின் காதலி இறந்துவிடவே, சித்தபிரமை பிடித்தவராக மாறிவிடுகிறார். இந்த சமயம் நடன பெண்ணான ஜெயலலிதாவை சிவாஜியைப் பார்த்துக்கொள்வதற்காக மேஜர் சுந்தர்ராஜன் அழைத்து வர, அதன் பின் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. இதில் விரக்தி, உருக்கம், பச்சாதாபம் என்று பல விதமான உணர்வுகளையும் ஜெயலலிதா மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததால், படத்தில் சிவாஜிதான் கதாநாயகன் என்ற போதும் அவருக்கு நிகரான பாராட்டு ஜெயலலிதாவிற்கும் கிடைத்தது. குறிப்பாக, படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் அன்று பட்டிதொட்டியேல்லாம் கலக்கியதோடு படமும் வெள்ளிவிழா கொண்டாடியது.


தெலுங்கில் 'புனர்ஜென்மா' மற்றும் தமிழில் 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படம் 

பாபு (1971)

மலையாளத்தில் பிரேம் நசீர் நடிப்பில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டான படம் 'ஓடயில் நின்னு'. நன்றியுணர்வை மைய்யக் கருவாக வைத்து வெளிவந்த இந்த படத்தை தமிழில் 'பாபு' என்ற பேரில் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் ரீமேக் செய்தபோது, பாபுவாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார். தன் உழைப்பாலும் அன்பாலும் பாதுகாப்பாலும் ஒரு குடும்பத்துக்கு நன்றியைச் செலுத்தி, இறுதியில் எல்லாவற்றையும் செய்துவிட்ட மனநிறைவுடன் மரணத்தைத் தழுவும் ஒரு ஏழை கூலி தொழிலாளியின் வாழ்க்கை கதைதான் இந்த பாபு. ஒருமுறை பசியாற்றியதற்காக நொடித்துப் போன சௌகார் ஜானகியின் குடும்பத்துக்குக் காவலனாகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் சிவாஜியின் நடிப்பு இப்படத்தில் பாராட்டும் படியாக இருக்கும். குறிப்பாக, ரிக்‌ஷாவின் கைப்பிடியைக் காலால் உதைத்து, லாகவமாகக் கையில் பிடித்துக்கொண்டு, துள்ளி ஓடும் இளமைத் துடிப்புள்ள ரிக்‌ஷாக்காரனாகத் தோன்றுவது முதல், கூனிக் குறுகி முதுமையடைந்து, ரிக்‌ஷாவைத் தூக்க முடியாத முதுமை வரை, ஒவ்வொரு நிலையிலும் சிவாஜியின் நடிப்பு இந்த படத்தில் அருமையாக இருக்கும். இதனாலேயே இப்படம் அன்று சிவாஜி ரசிகர்களால் பெரியளவில் கொண்டாடப்பட்டதோடு, 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியும் பெற்றது.


 'ஓடயில் நின்னு' மலையாளப் படம் மற்றும் சிவாஜிகணேசனின் 'பாபு' திரைப்படம்  

ராஜா (1972)

கே.பாலாஜி தயாரிப்பில், சி.வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் 'ராஜா'. சிவாஜி, ஜெயலலிதா, மேஜர் சுந்தரராஜன், சந்திரபாபு உட்பட பலரது நடிப்பில் உருவாகியிருந்த இந்த படமானது, ஹிந்தியில் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடி 'ஜானி மேரா நாம்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இதில் ஹிந்தியில் தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முறையே சிவாஜி, ஜெயலலிதா நடித்திருந்தனர். குறிப்பாக திருடன், போலீஸ் என இரண்டு கேரக்டர்களில் வரும் சிவாஜி கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்ததோடு, இப்படத்திற்க்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக தோன்றி பலரை ஆச்சரியப்படவும் வைத்திருந்தார். முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படத்தில் எம்.எஸ்.வி. இசையில் வந்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் ஆன நிலையில், தொடர்ந்து நடிப்பு சார்ந்த படங்களிலேயே நடித்து வந்த சிவாஜிக்கு ஒரு மாஸ் வெற்றியையும் வசூல் ரீதியாக இப்படம் பெற்று தந்தது.


 'ஜானி மேரா நாம்' மற்றும் 'ராஜா' திரைப்படங்கள் 

வசந்த மாளிகை (1972)

இயக்குனர் கே.எஸ் பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் 'வசந்த மாளிகை'. 1971ம் ஆண்டு நாகேஸ்வர ராவ் நடிப்பில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட 'பிரேம் நகர்' படத்தின் ரீமேக் ஆன இதில், கதாநாயகியாக நடிக்க துவக்கத்தில் ஜெயலலிதா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவரது தாயார் மறைவு காரணமாக நடிக்க இயலாமல் போக, தெலுங்கில் கதாநாயகியாக நடித்திருந்த வாணிஸ்ரீயே தமிழிலும் நடித்தார். காதலுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் அன்று பலரையும் கவர்ந்ததோடு, கே.வி.மகாதேவன் இசையில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி காலத்தால் அழிக்க முடியாத காவியப் படமாக மாறி போனது. குறிப்பாக இத்திரைப்படத்தில் வரும் கண்ணாடி அறை அந்தக்காலத்தில் பலரையும் பிரமிக்க வைத்த அதே வேளையில், கதாநாயகி வாணிஸ்ரீயின் சிகை அலங்காரமும் அன்று பெரிதும் கவனிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குளில் 200 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்த இத்திரைப்படம், இலங்கையிலும் 200 நாட்களை கடந்து வெள்ளிவிழா கண்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பெற்றது.


 'பிரேம் நகர்' மற்றும் 'வசந்த மாளிகை' திரைப்படம் 

அவன் தான் மனிதன் (1975)

இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியான இந்த படம், நட்பின் ஆழத்தை வலியுறுத்திய மிக சிறந்த படைப்பு. சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்ததோடு, கவியரசு கண்ணதாசன் பாடல்களையும் எழுதி இருந்தார். சிவாஜிகணேசனின் 175 -வது வெற்றிகவியமாக அமைந்த இந்த படம் 100-நாட்களை கடந்து ஓடி, சிவாஜி அவர்களின் திரைவரிசை வெற்றி படங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக மாறிப்போனது. துவக்கத்தில் ''அவன்தான் மனிதன்'' படத்தை தமிழில் எடுக்க எண்ணி சிவாஜி அவர்களை தயாரிப்பாளர் அணுகிய போது படத்தின் முடிவில் கதாநாயகன் இறக்கும் படி கட்சி இருந்ததால் சிவாஜி இந்த படத்தில் நடிக்கச் சம்மதிக்கவில்லையாம். அதனால் இந்த படம் முதலில் ''கஸ்தூரி நிவாச'' என்ற பெயரில் ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியானது. பிறகு இப்படம் மாபெரும் வெற்றி படமாக ராஜ்குமாருக்கு அமைந்ததையடுத்து, மீண்டும் இந்தக் கதையை சிவாஜி கணேசன் தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கி நடித்துள்ளார்.


'கஸ்தூரி நிவாச' படத்தில் ராஜ்குமார் மற்றும் 'அவன்தான் மனிதன்' படத்தில் சிவாஜி கணேசன் 

அண்ணன் ஒரு கோவில் (1977)

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் கே.விஜயன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அண்ணன் ஒரு கோவில்’. கன்னடத்தில் 1975 ஆம் ஆண்டு நடிகர் லோகேஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன 'தேவார கண்ணு' படத்தின் தமிழ் ரீமேக் ஆன இதில் சிவாஜி, சுஜாதா, சுமித்ரா, ஜெய்கணேஷ் முதலானோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அண்ணன் - தங்கைக் பாசத்துடன் திரில்லரையும் சேர்த்து சஸ்பென்ஸும் செண்டிமெண்டுமாகக் கலந்து கொடுத்த இந்தப் படம் அன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் வெளிவந்த எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின. குறிப்பாக இந்த படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு மிக சிறப்பாக இருக்கும். அதிலும் தங்கையை அவர் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் காட்சியிலும், நீதிமன்ற காட்சியிலும் அவர் வெளிப்படுத்தும் மௌனமும், கண்ணீருமான நடிப்பு அன்று பலரால் பாராட்டப்பட்டது. பாசமலர் படத்திற்கு பிறகு அண்ணன், தங்கை பாசத்தை மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்திய இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனையும் படைத்தது.


கன்னடத்தில் 'தேவார கண்ணு' மற்றும் தமிழில் 'அண்ணன் ஒரு கோவில்' 

திரிசூலம் (1979)

கன்னடத்தில் 1978 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் ‘சங்கர் குரு'. இந்த படம் மிகப்பெரிய அளவில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்றுக்கொண்டார். அதன் பிறகு ''திரிசூலம்'' என்ற பெயரில் இந்த படத்தை இயக்குனர் கே.விஜயன் ரீமேக் செய்தபோது கன்னடத்தில் இருந்த காட்சிகளை அப்படியே தமிழில் ஒன்று கூட மாற்றாமல் படமாக்கி இருந்தார். சிவாஜி கணேசனின் 200வது படமான இதில் கே.ஆர்.விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா, எம்.என்.நம்பியார் உட்பட பலர் நடித்திருந்ததோடு, படமும் கன்னடத்தை விட இங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதற்கு காரணம் கன்னடத்தில் ராஜ்குமார் மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் காட்டிய வித்தியாசங்களை விட, சிவாஜி கணேசன் பாடி லாங்குவேஜ் உட்பட பல விதங்களில் அந்த மூன்று காதாபாத்திரங்களை வேறுபடுத்திக்காட்டி மிக சிறப்பாக நடித்திருந்த்தால் தான். இதனால் இப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கையிலும் 200 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.


கன்னடத்தில் ‘சங்கர் குரு' மற்றும் தமிழில் திரிசூலம் பட போஸ்டர்கள்  

இதுதவிர குலமா குணமா, நீதி, என் மகன், சுமதி என் சுந்தரி, சிவகாமியின் செல்வன், வாணி ராணி, உத்தமன், நான் வாழவைப்பேன், தீபம், தியாகம் போன்ற படங்களும் இதே காலகட்டத்தில் சிவாஜி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன ரீமேக் படங்கள் தான். இவை அனைத்துமே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெற்றி மகுடத்தில் மிளிரும் வைரங்களாக இன்றுவரை ஜொலித்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்