மார்க்கெட்டில் உச்சம் - திருமண தேதியை அறிவித்த ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு என மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது ‘அயலான்’, ‘இந்தியன் - 2’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார்.

Update:2024-01-09 00:00 IST
Click the Play button to listen to article

‘சும்மா சொல்லக்கூடாது... நல்லாத்தான் இருக்கா..!” என்று என்.ஜி.கே படத்தில் சாய் பல்லவி தோரணையுடன் கூறுவார். அந்த அளவிற்கு அழகாகவும், ஃபிட்டாகவும் இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவருக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். திரை பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் சினிமாவில் கால் பதித்தது எப்படி மற்றும் அவருடைய வளர்ச்சி குறித்து இத்தொகுப்பில் காணலாம்.

ரகுல் ப்ரீத் சிங் - ஓர் அறிமுகம் 

ஒரு பஞ்சாபிய சீக்கிய குடும்பத்தின் மூத்த மகளாக 1990ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார் ரகுல் ப்ரீத் சிங். இவருடைய அப்பா ஓர் ராணுவ அதிகாரி. டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே மாடலிங் மீது நாட்டம் ஏற்பட்டிருக்கிறது. அதன்மூலம் 2019ஆம் ஆண்டு ‘கில்லி’ என்ற கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ‘கேரட்டம்’ மற்றும் 2012ஆம் ஆண்டு ‘தடையற தாக்க’ ஆகிய படங்களின்மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். 


ரகுலின் குழந்தைப்பருவம் - குடும்பத்தினருடன் ரகுல் ப்ரீத் சிங்

இருப்பினும் தெலுங்கில் அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடிவர, 4 ஆண்டுகளில் அல்லு அர்ஜூன், ராம் சரண், கோபி சந்த், நாக சைதன்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவரானார். சிறந்த நடிகைக்கான 6-வது தென்னிந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.

அதன்பிறகு, மீண்டும் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன்மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். இதுதவிர ‘யாரியன்’, ‘தே தே ப்யார் தே’, ‘ரன்வே 34’ மற்றும் ‘டாக்டர் ஜி’ போன்ற இந்தி படங்களால் தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் இந்தி திரையுலகிலும் ரசிகர்களை பெற்றிருந்தார். தெலுங்கு திரைப்படங்களில் இடைவெளியின்றி நடித்துக்கொண்டிருந்த இவர், 2018ஆம் ஆண்டு சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘ஐயாரே’ திரைப்படத்தில் தோன்றினார். அதன்பிறகு, மீண்டும் கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என மாறி மாறி பிஸியானார்.


கில்லி - கேரட்டம் - தீரன் அதிகாரம் ஒன்று - ஐயாரே திரைப்படங்களில் ரகுல்

காதல் மன்னன் ராணாவுடன் கிசுகிசு 

‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருந்த பிரபாஸ் - அனுஷ்கா ஷெட்டி ஜோடி காதலிப்பதாக தகவல்கள் பரவிவந்த நிலையில், அதே படத்தில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அசரவைத்த ராணா டகுபதியும், ரகுலும் காதலிப்பதாகவும், இருவரும் அடிக்கடி வெளியே ஊர் சுற்றுவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. அதற்கு முன்பே ராணாவும் திரிஷாவும் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் உலா வந்துகொண்டிருந்தன. மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வைரலாக பரவின. ஆனால், அந்த தகவல் பொய்யெனவும், இருவரும் நட்புரீதியாக பழகி வருவதாகவும் கூறி அந்த டாக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திரிஷா. அடுத்து ராணாவுடன் இணைத்து பேசப்பட்டவர் தமன்னா. அவரும் நைஸாக நழுவிட, அடுத்து லிஸ்ட்டில் வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

2018ஆம் ஆண்டு இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவ, “நான் ராணாவை காதலிக்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருடைய வீடும் பக்கத்தில்தான் இருக்கிறது. நான் திரையுலகில் நுழைந்தபோதே ராணாவை எனக்கு நன்றாக தெரியும். அப்போதிருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். தற்போதைய சூழலில் நான் பிஸியாக இருக்கிறேன். காதலிக்க நேரமில்லை. நான் இதுவரை சிங்கிளாகத்தான் இருக்கிறேன்” என்று கூறி கைவிரித்து விட்டார் ரகுல்.


ராணா டகுபதி - ரகுல் ப்ரீத் சிங்

காதலிக்க நேரம் வந்தது

ராணா குறித்த வதந்திகள் பரவியபோது காதலிக்க நேரமில்லை என்று கூறிய ரகுல், 2021ஆம் ஆண்டு ஜாக்கி பாக்னானியை தனது காதலர் எனக்கூறி அனைவருக்கும் அறிமுகம் செய்தார். அவரும் பாலிவுட்டில் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளர். அதன்பிறகு திரை விருது விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் ஜோடியாக பங்கேற்று வந்த இவர்கள் பாலிவுட்டில் ஹாட் டாக் ஜோடிகளில் ஒன்றாகினர். மேலும் அவ்வப்போது தங்களுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் ரொமான்டிக் போட்டோக்களை பகிர்ந்து குஷிப்படுத்தி வந்தனர். ஹிருத்திக் ரோஷன் - சபா அசாத், ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பாக்னானி, அர்ஜூன் கபூர் - மலைக்கா அரோரா, தமன்னா - விஜய் வர்மா, சிதார்த் - அதிதி ராவ் ஜோடிகளில் 2024ஆம் ஆண்டு எந்த ஜோடி முதலில் திருமணம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியிருந்த நிலையில் தற்போது ரகுல் - பாக்னானி ஜோடி தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


காதலரும், வருங்கால கணவருமான ஜாக்கி பாக்னானியுடன் ரகுல் 

வருகிற பிப்ரவரி 20, 21ஆம் தேதிகளில் கோவாவில் வைத்து திருமணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறு விதமான கொண்டாட்டங்களுடன் பாரம்பரிய முறையில் இவர்களது திருமணம் நடக்கவிருப்பதாக கூறுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள். வெளிநாட்டில் திருமணத்தை முடிக்க லொகேஷன் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது கோவாவில் நெருங்கிய வட்டாரங்களின் முன்னிலையில் தங்களது திருமணத்தை நடத்தவுள்ளனர். 2024ஆம் ஆண்டு புத்தாண்டை தாய்லாந்தில் நண்பர்களுடன் இருவரும் கொண்டாடிய நிலையில் திருமணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கின்றனர். ஒருபுறம் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, மற்றொருபுறம் திரைப்படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் ரகுல். தமிழ், தெலுங்கு என மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது ‘அயலான்’, ‘இந்தியன் - 2’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி காட்டுவதில் சற்றும் குறைச்சலில்லாத ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்ந்தெடுப்பார்? அழகிய சிரிப்பால் கிறங்கடிப்பாரா? என்ற ஏக்கத்தில் உள்ளனர் அவருடைய ரசிகர்கள். 

Tags:    

மேலும் செய்திகள்