சேலை கட்டினால் என் அழகு குறைந்து விடுமா, என்ன? - நடிகை உஷா நந்தினி

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு நட்சத்திரமானவர் உஷா நந்தினி!

Update:2024-01-09 00:00 IST
Click the Play button to listen to article

(09.01.1972 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)

‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்து, ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு நட்சத்திரமானவர் உஷா நந்தினி!

புதுமுகம் என்றாலும், கச்சிதமாக நடித்து, உஷாநந்தினி புகழ் பெற்றார். இளமையும், அழகும் வெற்றிக்கு துணை செய்தன. துடிப்பான நடிப்பின் மூலம் ஒரே படத்தில் நட்சத்திரம் ஆகிவிட்டார்.

“பணத்துக்கு ஆசைப்பட்டு, நான் ஆபாசமாக நடிக்கமாட்டேன். இதை ரசிகர்கள் விரும்பவில்லை” என்று உஷாநந்தினி கூறுகிறார்.

ரசிகர்களின் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் உஷாநந்தினியை ரசிகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமா? இதோ, அறிமுகப்படுத்தி வைக்கிறோம்:

நிருபர்: உங்கள் சொந்த ஊர் எது?

உஷாநந்தினி: திருவனந்தபுரம்.

நிருபர்: உங்கள் பெற்றோரைப் பற்றி கொஞ்சம் சொல்லலாமா?

உஷா: என் அப்பா பெயர் ராமன் பிள்ளை. என் அம்மா பெயர் சரஸ்வதி அம்மாள். எனக்கு ஒரு தங்கையும், மூன்று தம்பிகளும் இருக்கிறார்கள். நான்தான் மூத்தவள்.

நிருபர்: எதுவரை படித்து இருக்கிறீர்கள்?

உஷா: பி.ஏ. இரண்டு ஆண்டு படித்தேன். சினிமாவில் நடித்துக் கொண்டு தொடர்ந்து படிக்க முடியவில்லை. படிப்பதா, நடிப்பதா என்ற பிரச்சினை ஏற்பட்டது. சினிமா உலகில் காற்றுள்ளபொழுதே தூற்றிக் கொள்ள வேண்டும்! அதோடு, நான் படித்து கலெக்டர் வேலையா பார்க்கப் போகிறேன்? எனவே, படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நடிப்பில் முழு கவனமும் செலுத்தினேன்.


‘வீட்டுக்கு ஒரு பிள்ளை” படத்தில் உஷாநந்தினி

நிருபர்: படிக்கும் பொழுதே உங்களுக்கு நடிப்பில் ஆசை வந்துவிட்டதா?

உஷா: ஆமாம். சினிமாப் படங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாமும் நடிக்க வேண்டும் பெரிய நட்சத்திரம் ஆகவேண்டும் என்ற ஆசை ஏற்படும். பள்ளிக்கூட நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். நடனமும் ஆடத் தெரியும். எனது ஆசையை என் தந்தையிடம் சொன்னேன். அவரும் ஆதரவு தெரிவித்தார். மலையாளப்பட அதிபர்களைப் பார்த்து, எனக்கு வாய்ப்பு கேட்டார். அதன் காரணமாக மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நிருபர்: நீங்கள் நடித்த முதல் தமிழ்ப்படம் எது?

உஷா: ‘மாலதி.’ அதில் என்னைப் பார்த்ததாகவே ரசிகர்களுக்கு நினைவு இருக்காது. அந்தப் படம் எனக்கு வெற்றி அளிக்கவில்லை. ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை’ தான் எனக்கு வெற்றி தேடித் தந்தது.

நிருபர்: இந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?

உஷா: எனது படத்தை பத்திரிகைகளில் டி.ஆர்.ராஜகுமாரி பார்த்து இருக்கிறார். என்னைப்பற்றி டி.ஆர்.ராமண்ணாவிடம் சிபாரிசும் செய்திருக்கிறார். ராமண்ணா என்னை அழைத்து, ‘மேக்கப்’ சோதனைகள் செய்தார். அதன்பின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.

நிருபர்: தமிழ்ப் படத்துக்கும், மலையாளப் படத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

உஷா: நிறைய இருக்கிறது. தமிழ்ப்பட உலகுக்கு நான் புது நடிகை. எனவே, அதைப்பற்றி நான் குறைக்கூற கூடாது. அப்படி உண்மையைச் சொன்னால், என் மார்க்கெட்டு சரிந்து விடும்!

நிருபர்: பொதுப்படையாக சொல்லலாமே?

உஷா: அன்றாட வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ, அதை, அப்படியே மலையாளத்தில் படம் ஆக்குகிறார்கள். தமிழில் அதை மிகைப்படுத்தி சுவைப்படுத்தி, முழுக்க முழுக்க வியாபார நோக்கத்துடன் படம் தயாரிக்கிறார்கள்.


இருமாறுபட்ட காட்சிகளில் உஷாநந்தினி

நிருபர்: கதை என்பதே எதையும் மிகைப்படுத்தி காட்டுவதுதானே?

உஷா: என்னை வீண் பிரச்சினைகளில் இழுத்து விடாதீர்கள்! நான் தயாரிப்பாளர் அல்ல; நடிகை! எந்தப் படத்திலும் நடிப்பதுடன் என் வேலை முடிந்துவிடுகிறது.

நிருபர்: நீங்கள் எத்தகைய பாத்திரங்களை விரும்புகிறீர்கள்?

உஷா: எனக்கு ரசிகர்களிடம் இருந்து நிறைய கடிதங்கள் வருகின்றன. பணத்துக்கு ஆசைப்பட்டு, ஆபாசமாக நடிக்காதீர்கள் என்று ரசிகர்கள் எழுதுகிறார்கள். அவர்களின் விருப்பமே எனது விருப்பம். நான் ஆபாசமாக நடிக்கமாட்டேன்.

நிருபர்: கவர்ச்சியாக நடிக்க மாட்டீர்களா?

உஷா: கவர்ச்சி வேறு ஆபாசம் வேறு. நடிப்புத் தொழிலுக்கு கவர்ச்சி மிகவும் முக்கியம்.

நிருபர்: ரசிகர்களுக்கு நீங்கள் பதில் கடிதம் எழுதுவது உண்டா?

உஷா: எல்லோருக்கும் எழுத முடியுமா? தேவை ஏற்படும்பொழுது மட்டும் எழுதுவேன்.

நிருபர்: ரசிகர்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?

உஷா: நான் புதுமுகம். என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்த வேண்டியது ரசிகர்களின் பொறுப்பு.

Tags:    

மேலும் செய்திகள்