வெற்றிப்பாதைக்கு திரும்புவாரா ரவி மோகன் (ஜெயம் ரவி)? வெற்றிமாறன், கௌதம் மேனனுடனான கூட்டணி எடுபடுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் சமீபகாலமாக தனது படங்களின் வெற்றி, தோல்விகளால் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் சமீபகாலமாக தனது படங்களின் வெற்றி, தோல்விகளால் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். ‘சைரன்’, ‘இறைவன்’, ‘பிரதர்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படமும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த சூழலில், ரவி மோகன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் இணைந்து உருவாக்கும் புதிய படத்தில் ரவி மோகன் நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவரின் கூட்டணியில் உருவாகும் படம் எப்படி இருக்கும்? இது ரவி மோகனின் திரைப்பயணத்தில் புதிய தொடக்கமாக மாறுமா? இவை குறித்து இங்கு அலசலாம்.
பெயர் மாற்றம் கைகொடுக்குமா?
ரவி மோகன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, தனது திறமையான நடிப்பால் பலரின் மனதை கவர்ந்த நடிகர். 2022ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களிலும் நடித்து மிகப்பெரிய வெற்றியை சாதித்தார். அதன் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்திய அவர், அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்புகளை அதிகரித்தார்.ஆனால், 'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு பின்னர் வெளியான 'இறைவன்' மற்றும் 'சைரன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இதனால், ரவி மோகன் மீண்டும் ஒரு வெற்றி படத்தை அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் சிக்கினார். இந்த சூழலில், எம். ராஜேஷ் இயக்கிய 'பிரதர்' படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பே பெரும் வரவேற்பைப் பெற்றன. ஆனால், படம் திரைக்கு வந்த பிறகு எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து நடித்தார் ரவி. இந்த படமும் கலவையான விமர்சனங்களை சந்தித்ததால், ரவி மோகனின் ரசிகர்கள் மேலும் சோர்வடைந்துள்ளனர்.
'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடிகை நித்யா மேனனுடன் நடிகர் ரவி மோகன்
சமீப காலமாக குடும்பப் பிரச்சினைகளால் சிரமப்பட்டு வந்த ரவி மோகன், தொடர்ந்து அடிக்கடி தோல்விகளை சந்தித்தாலும், மனமுடைந்து விடாமல் திரைப்பயணத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரவி மோகன் பல புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இயக்குநர் ஷங்கரின் உதவியாளர் ஒருவர் இயக்கும் படம், ‘தனி ஓருவன்2’, ‘ஜீனி’ டாடா பட இயக்குநரின் படம் போன்ற படங்களில் நடித்து வரும் ரவி, இதோடு, சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த நேரம் வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் ஒரு திரைப்படத்திலும் ரவி மோகன் நடிக்க இருக்கிறார் என வெளியாகியுள்ள தகவல் அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த ரவி மோகன், அதில், இனிமேல் தன்னை ரவி அல்லது ரவி மோகன் என்று அழைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் யாரும் அழைக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொண்டுள்ள அவர், இந்த பெயர் மாற்றம் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
மீண்டும் இயக்குநராக கெளதம் மேனன்
மகிழ்ச்சியான தோற்றத்தில் நடிகர் ரவி மோகன்
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக திகழும் கௌதம் மேனன், தனது தனித்துவமான கதை சொல்லல் மற்றும் காதலை மையமாகக் கொண்ட படங்களால் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்டவர். 'மின்னலே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு' போன்ற பல வெற்றி படங்களை தந்தார். கௌதம் மேனனின் படங்களின் சிறப்பம்சமே காதல் காட்சிகள்தான். அவை வெறும் காட்சிகள் மட்டுமல்ல; கவிதைகள் போல, ரசிகர்களின் வாழ்வோடு இணைந்து போகும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சினிமா உலகம் எப்போதும் வெற்றியை மட்டுமே தராது. தயாரிப்பாளராக மாறி சில படங்களை இயக்கி தயாரித்த போது, கௌதம் மேனன் சில தோல்விகளை சந்தித்தார். இதன் காரணமாக பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க நேர்ந்தது. இந்த சவாலான காலகட்டத்தில், கௌதம் மேனன் நடிகராகவும் மாற முடிவு செய்தார். 'கோலிசோடா-2', 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்', 'ருத்ர தாண்டவம்', 'சீதா ராமம்', 'மைக்கேல்', தளபதி விஜய்யின் ‘லியோ', வெற்றிமாறனின் ‘விடுதலை' போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
டோமினிக் திரைப்படத்தின் போது நடிகர் மம்மூட்டியுடன் இயக்குநர் கெளதம் மேனன்
அதே வேளையில், இயக்குநராக ‘வெந்து தணிந்தது காடு’, ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ போன்ற படங்களை இயக்கியவர், கடைசியாக தமிழில் சீயான் விக்ரமை வைத்து ‘துருவ நட்சத்திரம்’ எனும் படத்தை இயக்கி ரிலீசுக்காக காத்திருக்கிறார். தமிழ் சினிமாவை கடந்து, கேரள திரையுலகிலும் தனது தடம் பதித்துள்ள கெளதம் மேனன், மம்மூட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி சமீபத்தில் ரிலீஸ் செய்து வெற்றி கண்டுள்ளார். இப்படி பல படங்களில் பிஸியாக இருக்கும் கெளதம் மேனன், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் எழுதிய கதையை இயக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்திருந்த பேட்டியில் வெற்றிமாறன் கதையை தான் இயக்கவுள்ளதாகவும், அதில் ரவி மோகன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ரவி மோகன் ஏற்கனவே வேல்ஸ் நிறுவனம் மற்றும் பி.டி.ஜி நிறுவனத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ள நிலையில், இந்த படத்தை எந்த நிறுவனம் தயாரிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதிக்குமா மூவர் கூட்டணி?
வெற்றிமாறனின் படங்கள் எப்போதும் தரமான கதைகளுக்காக அறியப்பட்டவை. அவரது கதைகளில் இருக்கும் யதார்த்தம் மற்றும் சமூக சிந்தனை பார்வையாளர்களை எப்போதுமே கவர்ந்துள்ளது. அந்த வகையில் அவரது கதையில் ரவி மோகன் நடிப்பது ரசிகர்களுக்கு ஒரு விருந்துதான். அதேபோல், கௌதம் மேனன், காதல் மற்றும் ஆக்ஷன் கதைகளை மிக அழகாக வடிவமைக்கும் திறமையான இயக்குநர். அவரது படங்களில் காட்சிகளின் பதிவு, இசையின் மேன்மை என அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இப்படிப்பட்ட திறமையான இயக்குநரின் கைவண்ணத்தில் வெற்றிமாறனின் கதை உருவாகும்போது, அது எப்படி இருக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் கௌதம் மேனன் சமீப காலங்களில் நடிகராக மாறி இயக்கிய சில திரைப்படங்களும் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், வெற்றிமாறனின் கதையுடன் களமிறங்க உள்ள கௌதம் மேனனுக்கு இப்படம் மிக முக்கியமான படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் கெளதம் மேனனுடன் இணையும் ரவி மோகன்
ரவி மோகனை பொறுத்தவரை தனது நடிப்பு திறமையை பல படங்களில் நிரூபித்துள்ள மிகச் சிறந்த நடிகர். அப்படிப்பட்டவர் வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் போன்ற மிக சிறந்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது, தமிழ் திரைப்பட உலகிற்கே ஒரு தனித்துவமான அனுபவத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கூட்டணி குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், வெற்றிமாறனின் யதார்த்தமான கதைக்களம், கௌதம் மேனனின் நுட்பமான இயக்கம், மேலும் ரவி மோகனின் தத்ரூபமான நடிப்பு, இம்மூன்றும் ஒருமித்து வருவதனால், அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஒரு மாபெரும் திரைப்படமாக உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.