"அம்மாக்கள் சும்மா இருப்பது இல்லை" என்கிறார் நடிகை ராதிகா அம்மா கீதா!
ராதிகாவின் அம்மா கீதா. இலங்கையைச் சேர்ந்தவர். ஆனால். ராதிகா பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
(03.05.1981 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
ராதிகாவின் அம்மா கீதா, இலங்கையைச் சேர்ந்தவர். ஆனால் ராதிகா பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஓட்டல் தொழிலில் பயிற்சி பெற லண்டனுக்குப் போனார் ராதிகா. அங்கு இருந்து திரும்பியதும் எதிர்பாராத அதிர்ஷ்டம் அடித்தது! ராதிகா நடிகை ஆனார். இன்னும் சொன்னால், ராதிகாவை நட்சத்திரமாக உருவாக்கியதே அம்மா கீதாதான். ராதிகாவுக்கு அம்மாவாக, அப்பாவாக, தோழியாக, துணையாக கீதா விளக்குகிறார். அணைக்க வேண்டிய நேரத்தில் அணைக்கிறார். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கத் தவறுவதும் இல்லை.
கீதா சொன்னார், ராதிகா நடிகை ஆனது ஒரு திடீர் நிகழ்ச்சிதான்! முதல் படம் (கிழக்கே போகும் ரெயில்) பெரும் வெற்றி பெற்றதால், தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்தாள். நானும் சம்மதித்தேன். நான், தொடக்கத்தில் ராதிகாவுக்கு அம்மாவாக மட்டும் இருந்தேன். ராதிகாவுக்கு படம் குவியக் குவிய, செகரட்டரி பொறுப்பும் எனக்கு வந்துவிட்டது. முன்பு ராதிகாவுக்கு எல்லாமே சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தை போல அடம்பிடிப்பாள். ஆனால் இப்பொழுது, பொறுப்போடு நடந்து கொள்கிறாள்.
அம்மா கீதா மற்றும் தங்கை நிரோஷாவுடன் நடிகை ராதிகா
ஓட்டம்
நான் காலை 5 மணிக்கு எல்லாம் எழுந்து, டேப்-ரிக்கார்டர் வைப்பேன். பாட்டு சத்தம் காதில் விழுந்ததும், ராதிகா எழுந்து விடுவாள். அப்படி எழாவிட்டால், முதுகில் இரண்டு தட்டு தட்டுவேன். ராதிகா எழுந்ததும், முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு, காரை எடுத்துக் கொண்டு, கடற்கரைக்குப் போவாள். புனித தோமையர் கோவில் அருகே இருந்து அண்ணா சமாதி வரை ஓடுவாள். உடம்பு கட்டோடு இருக்க இந்த பயிற்சி.
கோபம் வரும்
ஓட்டம் முடிந்து வீட்டுக்கு வந்ததும், குளியல். பிறகு காபி. படப்பிடிப்பு இல்லை என்றால், படுக்கைக்குப்போய் ஒரு மணி நேரம் உருளுவாள். படப்பிடிப்பு இருந்தால், அதற்கான வேலையில் இறங்கிவிடுவாள். படப்பிடிப்புக்குப் போகும்பொழுது, அவளுக்கான டிரஸ், விக், மேக்கப் சாமான்களை சரியாக எடுத்து வைக்காவிட்டால், ராதிகாவுக்குக் கோபம் வந்துவிடும். மற்றவர்களுக்குப் புரியாதவாறு என்னை சிங்கள மொழியில் திட்டுவாள். அதனால் கூடுமானவரை அவள் "மூடு" மாறாமல் நடந்து கொள்வேன்.
பாடல் காட்சி ஒன்றில் ராதிகா
ஒரு வாரத்துக்கு முன்பே, அடுத்த வாரம் என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதை ராதிகாவுக்கு எழுதிக் கொடுத்துவிடுவேன். அதன்படி, சரியாக நடந்துகொள்வாள். சில நாள் இரண்டு கம்பெனிகளின் கால்ஷீட் இருக்கும். அதை அவளே பேசி சமாளித்துக் கொள்வாள்! எந்த நேரத்திலும், தயாரிப்பாளருக்கோ, டைரக்டருக்கோ தொல்லை கொடுக்க மாட்டாள். ஆனால், அவள் சரியாக நடந்து கொள்வது போல, மற்றவர்களும் அவளிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். ஏமாற்றுகிறவர்கள் என்று தெரிந்தால், பேசவே மாட்டாள். வகை வகையாக, மாடர்ன் ஆக உடுத்திக் கொள்வதிலும், ராதிகாவுக்கு அதிக விருப்பம் உண்டு.
கால்ஷீட்
ராதிகாவின் கால்ஷீட் விவகாரங்களை கவனிப்பதும் நான்தான்! படக் கம்பெனிகளில் பணம் விஷயமாக பேசி முடிவு செய்வதும் நான்தான். தொடக்கத்தில், ராதிகாவை கேட்காமலே புதுப் படங்களை ஒப்புக் கொண்டேன். தெரிந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக, கண்ட கண்ட படங்களையும் நான் ஒப்புக் கொண்டதால், கடந்த ஆண்டு ராதிகாவுக்கு ஒரு படமும் நல்ல படமாக அமையவில்லை. அதனால், என் மகளுக்கு கெட்ட பெயர். இப்பொழுது நான் பேசினாலும், நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வது ராதிகாதான்.
ராதிகாவின் ரீசென்ட் கிளிக்
அல்லி ஆட்சி
எங்கள் வீட்டில் அல்லி ராஜ்ஜியம்தான். என் மகளும் அம்மா பிள்ளைதான்! அதற்காக அவள் எப்பொழுதும், அம்மா மடியில் இருக்க விரும்பமாட்டாள். அவளுக்கு நல்லது, கெட்டது எல்லாம் தெரியும். அதனால், நானும் அவளை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவது இல்லை. படப்பிடிப்பு இல்லாத போது, ராதிகா என்னோடு சேர்ந்து சமைப்பாள். மாலையில் டி.வி. பார்ப்பாள். அல்லது, நல்ல படம் நடந்தால், எல்லோரும் தியேட்டருக்குப் படம் பார்க்கச் செல்வோம்.
(அடுத்த வாரம்: நடிகை வனிதாவின் அம்மாவை சந்தியுங்கள்.)