தமிழ் சினிமாவில் ரீசண்ட் சென்சேஷனல் நாயகி! - கயாடு லோஹர்!
தென்னிந்திய படங்களிலேயே தொடர்ந்து வாய்ப்பு தேடிவந்த கயாடு, மீண்டும் மலையாளத்தில் ‘ஒரு ஜாதி ஜாதகம்’ படத்தில் நடித்தார். பெரும்பாலும் தெலுங்கு, மலையாள படங்களில் அறிமுகமாகவும் வட மாநில நடிகைகளுக்கு தமிழ் வாய்ப்பும் கட்டாயம் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
தமிழ் சினிமாவில் இளம்நடிகர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும், அந்த இடத்தை ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் ஒரு இளைஞர் பட்டாளத்தையே இறக்கி தனுஷ் நிரப்பிவிட்டார் எனவும் பாராட்டியிருந்தார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. இப்படி அந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின்கள் குறித்த செய்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்த சமயத்தில் மற்றொரு நடிகையும் அவர்களைவிட ட்ரெண்டானார். அவர்தான் ‘டிராகன்’ பட நாயகிகளில் ஒருவரான கயாடு லோஹர். பட ரிலீஸுக்கு முன்பிருந்தே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனுடன் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு சென்று அங்கு தனது சுட்டித்தனமான, அதேசமயம் எதார்த்தமான பேச்சால் 2கே கிட்ஸ்களின் மனதை கொள்ளையடித்தார். பட ரிலீஸுக்கு பிறகு சொல்லவே தேவையில்லை. அவருடைய பழைய வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட்களை மீண்டும் ட்ரெண்டாக்கி அவரை, தற்போதைய சோஷியல் மீடியா சென்சேஷனலாகவே மாற்றிவிட்டனர். தனது அரைகுறையான தமிழால் ரசிகர்களை கிறங்கடித்துவரும் கயாடு வட மாநிலத்தவர் என்றாலும் தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை தனக்கென உருவாக்கி வருகிறார். தமிழில் ஒரே படத்தில் ஃபேமஸாகிவிட்டாலும் இந்த வரவேற்பு அவருக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. சமூக ஊடகங்களில் ட்ரெண்டான பிறகு யார் இந்த கயாடு லோஹர்? என்று தேடிவருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
மாடலிங் டூ ஆக்டிங்!
அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் நகரத்தைச் சேர்ந்தவர் கயாடு லோஹர். குடும்பத்துடன் பூனேவில் வசித்துவரும் இவர் பி.காம் பட்டப்படிப்பு படித்திருக்கிறார். படித்துமுடித்த கையோடு மாடலிங்கில் இறங்கிய இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், பலபேரின் வாழ்க்கைப்பாதையையே மாற்றியமைத்த எவர்யூத் ஃப்ரஷ் ஃபேஸ் 12வது சீசனின் டைட்டில் வெல்லும் வாய்ப்பும் கிடைத்தது. 2021ஆம் ஆண்டு இந்த போட்டியில் வெற்றிபெற்றபிறகு, அதே ஆண்டு ‘முகில் பேடே’ என்ற கன்னட படத்தில் கதாநாயகியாகும் வாய்ப்பை பெற்றார். கன்னட கிரேஸி ஸ்டாரான ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, தனது தந்தையின் சில ஐகானிக் சீன்களை நினைவுபடுத்தும்விதமாக இடம்பெற்ற சீன்கள் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தன.
கயாடு லோஹர் நடிகையாக அறிமுகமான ‘முகில்பேடே’ படத்திலிருந்து...
இந்த படத்தின்மூலம் கிடைத்த புகழால் அடுத்தடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கில் அறிமுகமானார் கயாடு. 2022ஆம் ஆண்டு மலையாளத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ திரைப்படத்தில் அறிமுகமான கையோடு, அதனைத் தொடர்ந்து ‘அல்லூரி’ படத்தின்மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் ஓரளவு வெற்றிபெற்ற போதிலும் தனது திறமைக்கான அங்கீகாரத்துக்காக பல்வேறு மொழிகளிலும் பட வாய்ப்புகளை தேடிவந்தார். அப்படி கிடைத்ததுதான் ‘ஐ பிரேம் யூ’ என்ற மராத்தி பட வாய்ப்பு. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் தென்னிந்திய படங்களிலேயே தொடர்ந்து வாய்ப்பு தேடிவந்த கயாடு, மீண்டும் மலையாளத்தில் ‘ஒரு ஜாதி ஜாதகம்’ படத்தில் நடித்தார். பெரும்பாலும் தெலுங்கு, மலையாள படங்களில் அறிமுகமாகும் வட மாநில நடிகைகளுக்கு தமிழ் வாய்ப்பும் கட்டாயம் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும் கோலிவுட்!
‘ஓ மை கடவுளே’ படத்தின்மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்து என்ன மாதிரியான கதையை இயக்கப்போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்டை கொடுத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்குப்பிறகு அடுத்து என்ன மாதிரியான கதையை கையில் எடுக்கப்போகிறார் என காத்திருந்தனர் 2கே கிட்ஸ். அவர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டுசெல்லும்விதமாக கைகோர்த்தனர் அஸ்வத் மற்றும் பிரதீப். இப்படி உருவானதுதான் ‘டிராகன்’ திரைப்படம். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஒரு கதாநாயகியாக நடிக்க, பல்லவி என்ற கதாபாத்திரத்தை ஏற்றார் கயாடு. கே.எஸ் ரவிக்குமாரின் மகளாக இந்த படத்தில் நடித்திருக்கும் இவர் மாடர்ன் பெண்ணாக வலம்வருகிறார். மொழி தெரியாவிட்டாலும் கதையை உள்வாங்கி சிறப்பாக தனது கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார். உண்மையில் தமிழில் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன்...
குறிப்பாக, இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே யார் இந்த பெண்? என சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்ட நிலையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து பழைய புகைப்படங்களையெல்லாம் எடுத்து சமூக ஊடகங்களில் ட்ரெண்டாக்கினர். கயாடுவும் தமிழில் நடிக்க கமிட்டானதிலிருந்தே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க, பழைய தமிழ்ப்பாடல்களுக்கு வீடியோக்கள் மற்றும் போஸ்ட்களை போட்டுவந்தார். அந்த உழைப்பு எதுவும் வீண்போகவில்லை என்பதற்கு படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பே பதிலாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிரதீப் மற்றும் அஸ்வத்துடன் தொடர்ந்து பங்கேற்று வரும் கயாடு, பேட்டிகளின்போது தனது சுட்டித்தனமான பேச்சு மற்றும் சைகைகளால் பலரின் மனதையும் கொள்ளையடித்தார். எதிர்பார்த்தது போன்றே படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது. இப்படி சமூக ஊடகங்களில் சென்சேஷனல் நாயகியாக வலம்வரும் கயாடு, படத்தைவிட, பேட்டிகள் மூலம்தான் தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறார். குறிப்பாக, தனக்கு குட் பாய்ஸ் பிடிக்காது என்றும், பேட் பாய்ஸ்தான் பிடிக்குமென்றும் இவர் கூறிய வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து ‘நானும் பேட் பாய்தான்’ என கமெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ் ரசிகர்களுக்கு நன்றி!
எல்லா நடிகர், நடிகைகளுக்குமே தங்களுடைய கெரியரில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டுமென்ற ஆசை இருக்கும். அந்த வகையில் பல மொழிகளில் ஒவ்வொரு படங்களில் நடித்திருக்கும் கயாடுவிற்கு தமிழில் நடித்த முதல் படமே மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடிவரும் நிலையில், தனக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் கயாடு. அந்த வீடியோவில், “எனக்கு எங்கே ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. எனக்கும் டிராகனுக்கும் பல்லவிக்கும் கிடைக்கிற இந்த அன்பும் ஆதரவும் மிகையான உணர்வு. தியேட்டர்ல எனக்கு நீங்க அடிக்கிற விசிலா இருக்கட்டும், இன்ஸ்டால என்னோட டேக்ஸ், ஷேர்ஸ், ஸ்டோரீஸா இருக்கட்டும், அழகான கமெண்ட்ஸா இருக்கட்டும்... இதெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் தமிழ்ப்பொண்ணு இல்ல. எனக்கு தமிழ் சரியா பேசவராது. ஆனா நீங்க எனக்கு கொடுக்குற அன்பு விலைமதிப்பற்றது.
இந்த அன்பை என் படங்கள்மூலமா நான் உங்களுக்கு திருப்பித் தருவேன்னு நான் நம்புறேன் மற்றும் உங்கள பெருமைப்படுத்துவேன்” என்று உடைந்த தமிழில் அழகாக பேசியுள்ளார். தொடர்ந்து தனது தெலுங்கு ரசிகர்களுக்கும் தெலுங்கிலேயே நன்றி தெரிவித்திருக்கும் கயாடு, தென்னிந்திய மொழிகளை இப்போதுதான் கற்றுவருவதாக தெரிவித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு, அடிக்கடி கிளாமர் போட்டோஷூட்களையும் நடத்தி அவற்றையும் சமூக ஊடகங்களில் பதிவிடும் இவருக்கு 2கே ரசிகர்கள்தான் அதிகமாக இருக்கின்றனர்.
2கே கிட்ஸ்களை தனது போட்டோஷூட்ஸ் மூலம் கிறங்கடிக்கும் கயாடு
‘டிராகன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ திரைப்படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் கயாடு. சொல்லப்போனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பே அதர்வா ஜோடியாக கமிட்டாகிவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தில் பிரீத்தி முகுந்தன், நட்டி நடராஜன், நிஹாரிகா உள்ளிட்ட பலர் இடம்பெறுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது பரபரப்பாக நடந்துவரும் நிலையில் 50% முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்துவரும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யமாட்டேன் என்று கூறியிருக்கும் கயாடு, இந்த படம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்துவந்த இவர், இனிமேல் ஒரே ஆண்டில் பல மொழிகளில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.