பாலிவுட் பிரபலத்துக்கு கத்திக்குத்து... அதிருப்தியில் ஷங்கர் - சினி டாக்ஸ்!
கேம் சேஞ்சர் படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம் எனவும், படத்தில் வெளியீட்டில் தான் முழுமையாக திருப்தியடையவில்லை எனவும் கூறியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். மேலும் படத்தின் வசூல் குறைந்திருப்பது தனது ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும், படம் மொத்தம் 5 மணிநேரம் இருந்ததாகவும், நேரத்தை குறைக்க நல்ல காட்சிகளை வெட்டி நீக்கவேண்டி இருந்தது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு வெளியான படங்களில் எந்தெந்த படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகின்றன? எவை அதிக வசூல் சாதனை புரிந்திருக்கின்றன? என்பது குறித்த அப்டேட்ஸ் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம், புதுப்படங்களின் போஸ்டர்கள், க்ளிம்ஸ் வீடியோக்கள் மற்றும் ட்ரெய்லர்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. அதுபோக, பெரிய படங்களை ஓடிடி நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கி வருகின்றன. படங்கள் குறித்த அப்டேட்ஸ் ஒருபுறம் இருந்தாலும், நடிகர் நடிகைகள் குறித்த செய்திகளும் இதனிடையே உலாவருகின்றன. இந்த வாரம் இந்திய சினிமாவின் சில ஹாட் டாப்பிக்ஸை ஷார்ட்டாக பார்க்கலாம்.
காரணம் இதுதான்!
கடந்த ஆண்டு விவாகரத்து பெற்ற ஜோடிகளில் அதிகப்படியான கவனம் ஈர்த்தவர்கள் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி. இவர்கள் இருவரும் விவாகரத்துக்கு பிறகும் திரைப்படங்களில் ஒன்றாக பாடுவதையும், மேடை நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வதையும் பார்த்த பலரும் ஆச்சர்யமடைந்து இவர்களைப்போல் மற்ற பிரிந்த தம்பதிகளும் நடந்துகொள்ள வேண்டுமென பாராட்டினர்.
சைந்தவியுடன் பணியாற்றுவது குறித்து ஜி.வி. பிரகாஷ் விளக்கம்
இப்படியிருக்கையில், இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான காரணத்தை ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்திருக்கிறார். இருவருமே ரொம்ப ப்ரொஃபஷனலாக இருப்பவர்கள் எனவும், ஒருவர்மீது ஒருவருக்கு மரியாதை இருப்பதகாவும், அந்த மரியாதை நிமித்தமாகவே இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாகவும் கூறியிருக்கிறார்.
காதல் பற்றி அனுபமா!
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அனுபமா பரமேஸ்வரன், தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் சேர்ந்து ‘டிராகன்’ படத்தில் நடித்துவருகிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் காதல் பற்றிய உங்களுடைய கருத்து என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எப்போதுமே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்வதே உலகத்திலேயே மிகப்பெரிய பொய் எனவும், அப்படி ஒருபோதும் நடக்காது எனவும் கூறினார்.
காதல் குறித்து கருத்து தெரிவித்த அனுபமா பரமேஸ்வரன்
தொடர்ந்து எனது உயிரே நீதான், நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்கிற டாக்ஸிக் காதலில் மாட்டிக்கொண்டிருப்பவர்கள் உடனடியாக அதைவிட்டு ஓடிவிடுங்கள் என்பதே என்னுடைய அட்வைஸ் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்ட ரசிகர்கள் அனுபமாவிற்கு ஒருவேளை காதல் தோல்வியோ? எதனால் இப்படி பேசுகிறார்? என கேட்டு வருகின்றனர்.
எனக்கு திருப்தியில்லை!
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. ‘இந்தியன் 2’ திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றதையடுத்து ‘கேம் சேஞ்சரின் மீது ஷங்கர் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும், அதற்காக தனது கடுமையான உழைப்பை போட்டுவருவதாகவும் படம் வெளியாவதற்கு முன்புவரை சொல்லப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுவருவதால், இப்படத்தை இன்னும் சிறப்பாக பண்ணியிருக்கலாம் எனவும், பட வெளியீட்டில் தான் முழுமையாக திருப்தியடையவில்லை எனவும் கூறியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து இயக்குநர் ஷங்கர் கவலை
மேலும் படத்தின் வசூல் குறைந்திருப்பது தனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் படத்தின் ஹீரோவான ராம் சரண், ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் எப்போதும் தனது இதயத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்குமென மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
வெளியான ‘விடாமுயற்சி’ டிரெய்லர்!
ஒருவழியாக பொங்கலை முன்னிட்டு அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதியை மாற்றிவைத்து ஏமாற்றமளித்தது படக்குழு. இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவிவந்தன.
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் போஸ்டர்
அதன்படி ஜனவரி 16ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு டிரெய்லர் வெளியானது. மேலும் வருகிற 23ஆம் தேதி திரைப்படம் ரிலீஸாகவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசன்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் ‘காத்தி’ திரைப்படத்தின் முதல் க்ளிம்ஸ் வீடியோ அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது. கதாநாயகியை மையப்படுத்திய அப்படத்தில் ஒரு ஆணின் கழுத்தை அறுத்து கையில் பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக அவர் நடந்துவரும் வீடியோவைப் பார்த்த பலரும் மிரண்டுபோயினர்.
‘காத்தி’ திரைப்படத்தில் விக்ரம் பிரபுவின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு
இந்நிலையில் அந்த படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக புதிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியிருக்கும் அந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
பாலிவுட் பிரபலத்துக்கு கத்திக்குத்து!
பிரபல பாலிவுட் நடிகர் சையிஃப் அலிகான் நடிகை கரீனா கபூரை 2வது திருமணம் செய்துகொண்டு மும்பை பாந்த்ரா பகுதியிலிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் இவருடைய வீட்டிற்குள் திருடன் புகுந்துள்ளான். அவனை பிடிக்க முயன்றபோது சையிஃபை கத்தியால் பலமுறை குத்தியதில் கழுத்து, முதுகு தண்டுவடத்திற்கு அருகே மற்றும் கை உள்ளிட்ட 6 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
வீட்டுக்குள் புகுந்த திருடனால் நடிகர் சையிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், 2 இடங்களில் காயம் ஆழமாக இருந்ததால் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சையிஃப் அலிகானின் வீட்டை சோதனையிட்ட போலீசார் தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுவாகவே நடிகர் நடிகைகளின் வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்பை தாண்டி திருடன் நுழைந்தது எப்படி? என்ற கோணத்திலும் வீட்டிலிருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.