பாடவும் தெரியும்! நடிக்கவும் தெரியும்!
அடுத்தடுத்த நிகழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமாவில் பின்னணிப் பாடகர்கள் உருவானார்கள்.
திரைப்பட உலகில் ஊமைப் படங்கள் பேசும் படங்களாக மாறிய காலத்தில், ஒரு திரைப்படத்தில் 40-50 பாடல்கள் இடம்பெற்றிருந்தன என்பது இந்தக் காலத் தலைமுறைக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் அப்போதெல்லாம் படத்தில் நடிப்பவர்கள்தான் பாடல்களையும் பாடுவார்கள். அதாவது, பாடிக் கொண்டே நடிப்பார்கள், நடனம் ஆடுவார்கள். அதனால், பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் சினிமாவில் பின்னணிப் பாடகர்கள் உருவானார்கள். இவர்கள் பாடத் தெரியாத நடிகர்களுக்கு பின்னணி பாடினர். அதனால் நடிப்பும் பாட்டும் வெவ்வேறாகப் பிரிந்து போனது. நடிகர்கள் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தினர், பாடகர்கள் பாடல்களைப் பாடி மெருகேற்றினர்.
இருந்தபோதும் சில நடிகர்கள் தங்கள் சொந்தக் குரலில் பாடி நடித்தனர். நடிகை எஸ்.வரலட்சுமி, தான் நடித்த எல்லா படங்களிலுமே தனது சொந்தக் குரலில்தான் பாடியிருந்தார். ‘இதயக்கனி’ படத்தில் இவர் பாடிய ‘பச்சைக்கிளிக்கொரு’ பாடல் இவரது மாஸ்டர் பீஸ் பாடல் என்றே கூறலாம். கந்தன் கருணை, ராஜராஜ சோழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல படங்களில் இவரது கணீர் குரலில் அமைந்த பாடல்களை பலரும் கேட்டு ரசித்தனர். இவர் கடைசியாக நடித்த ‘குணா’ படத்திலும்கூட சொந்தக் குரலிலேயே ஒரு பாட்டு பாடியிருந்தார். அதேபோன்று நடிகை பானுமதியும் தான் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சொந்தக் குரலில் பாடியிருந்தார். ‘அடிமைப்பெண்’ படத்தில் நடிகை ஜெயலலிதா பாடிய ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடல் இன்றுவரை ரசிகர்கள் ரசிக்கும் பாடலாக இருந்து வருகிறது.
எஸ்.வரலட்சுமி, பானுமதி மற்றும் ஜெயலலிதா
இதுவரை நடிகைகள் பாடல்கள் பாடியிருந்தது பற்றிப் பார்த்தோம். இனி பாடகிகள் நடிகைகளானதைப் பற்றிப் பார்ப்போம்.
ஆன்ட்ரியா
ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்த ஆன்ட்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தேவாலயத்தில் தனது பாடல் பயணத்தை தொடங்கிய ஆன்ட்ரியா, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்நியன் படத்தில் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அதற்கடுத்து மீண்டும் ஹாரிஸ் இசையமைப்பில் வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் பாடினார். இந்நிலையில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை ஏற்று நடிகையானார். அதன்பிறகு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, அவள், வடசென்னை என வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். ஒருபுறம் நடிப்பு மற்றொருபுறம் பாடல் என்று இரட்டைக்குதிரை சவாரி செய்கிறார் ஆன்ட்ரியா. ஆதவன் படத்தில் ‘ஏனோ ஏனோ’, கோவா படத்தில் வரும் ‘இதுவரை’, மதராச பட்டினத்தின் ‘பூக்கள் பூக்கும் தருணம்’, வானம் படத்தில் இடம் பெற்ற ‘நோ மணி நோ ஹனி’ போன்றவை ஆன்ட்ரியாவின் ஹிட் பாடல்கள்.
ஆன்ட்ரியா
ஸ்ருதிஹாசன்
‘தேவர் மகன்’ படத்தில் வரும் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடல் மூலம் குழந்தைப் பருவத்திலேயே பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன். ‘உன்னைபோல் ஒருவன்’ திரைப்படத்திற்கு இசையமைத்ததோடு அதில் மூன்று பாடல்களைப் பாடி தன்னை ஒரு பாடகியாக திரையுலகில் அறிமுகப்படுத்திக் கொண்டார் ஸ்ருதி. வாரணம் ஆயிரம் படத்தில் ‘அடியே கொல்லுதே’, ஏழாம் அறிவு படத்தில் ‘எல்லே லமா’ , 3 திரைப்படத்தில் ‘கண்ணழகா’ ஆகிய பாடல்களால் கவனம் ஈர்த்த ஸ்ருதி, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஏழாம் அறிவு படத்தில் நடிகையாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, இந்தி என தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இடையிடையே இசை நிகழ்ச்சி மற்றும் நடிப்பு என்று இயங்கி இரண்டிலும் சமநிலையோடு இயங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி.
ஸ்ருதிஹாசன்
ரம்யா நம்பீசன்
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ரம்யா நம்பீசன் ‘ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை’ பாடல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கிரங்கடிக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட ரம்யா நம்பீசன், பீட்சா, சேதுபதி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், குள்ளநரிக் கூட்டம், சத்யா, மெர்குரி என பல படங்களில் கதாநாயகியாக தமிழ்த்திரையில் வலம் வரத் தொடங்கினார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடிப்பு, பாடல் என்று சுழன்று வருகிறார் ரம்யா. டமால் டுமீல், அருவா சண்டை, சகலகலா வல்லவன், முன்னோடி, மன்னர் வகையறா ஆகிய படங்களில் பாடல்களை பாடியிருக்கும் ரம்யா, டமால் டுமீல் மற்றும் நட்புனா என்னானு தெரியுமா படங்களில் பாடியதோடு நடிக்கவும் செய்திருக்கிறார்.
ரம்யா நம்பீசன்
வசுந்தரா தாஸ்
பெங்களூரை சேர்ந்த வசுந்தரா தாஸ், முதல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘ஷக்கலக பேபி’ என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். ரிதம் படத்தின் ‘ஐயோ பத்திக்கிச்சு’, குஷி படத்தின் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ போன்ற பாடல்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த வசுந்தரா, ‘ஹே ராம்’ படத்தின் மூலம் நாயகியானார். அதற்கடுத்து அவர் தமிழில் நடித்த சிட்டிசன் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அவர் தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சிட்டிசன் படத்தில் ‘பூக்காரி’, ‘ஐ லவ் யூ’, பாய்ஸ் படத்தில் ‘சரிகம’, ‘டேட்டிங்’, மன்மதன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தத்தை தத்தை’, சில்லுனு ஒரு காதல் படத்தின் ‘மச்சக்காரி மச்சக்காரி’ ஆகிய பாடல்களால் பிரபலமடைந்தவர் வசுந்தரா தாஸ்.
வசுந்தரா தாஸ்
இப்படி… பாடகியாகவும் நடிகையாகவும் தனித் திறமையுடன் திரைத்துறையில் வலம் வருபவர்கள் வெகு சிலர் மட்டுமே உள்ளனர்.