ரஜினியுடன் நேருக்குநேர் மோதும் சிவகார்த்திகேயன்? - கலக்கல் அப்டேட்ஸ்!

நயன்தாரா இனிமேல் யாரும் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தன்னை எளிமையாக காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறாரோ என்னவோ என கமெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.;

Update:2025-03-11 00:00 IST
Click the Play button to listen to article

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் சாமி படம் என்ற பெருமையை பெறுகிறது ‘மூக்குத்தி அம்மன்’ பாகம் இரண்டு. அறிவித்தது போன்றே பூஜையும் சிறப்பாக நடைபெற்றிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் குறித்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருந்தாலும் இந்த வாரத்தில் நிறைய சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதுபோக, அடுத்து ரஜினியும், சிவகார்த்திகேயனும் நேருக்கு நேர் மோதப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கோலிவுட் டூ பாலிவுட் முழுக்க இந்த வாரம் கலக்கல் அப்டேட்ஸ் காத்திருக்கின்றன.

பிரம்மாண்ட பூஜையுடன் ‘மூக்குத்தி அம்மன் 2’

நயன்தாரா - சுந்தர் சி காம்போவில் உருவாகவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜையானது வெகு பிரம்மாண்டமாக நடைபெற்றது. கோயில் செட்டப்பில் நடந்த பூஜைக்கு பிறகு நயன்தாராவின் முதல் ஷாட்டை எடுத்திருக்கிறார் சுந்தர் சி. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் மாஸ் காட்டலாம் என ரூ. 100 கோடி பட்ஜெட்டை இறக்கியிருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தை ஐசரி கணேசுடன், நயன்தாரா மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு வெயிட்டான வில்லன் வேண்டுமென கேட்டதால் முதலில் அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு

அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்க, தற்போது கன்னட ஹீரோ துனியா விஜய்யை நயனுக்கு வில்லனாக நடிக்கவைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. ‘மூக்குத்தி அம்மன்’ முதல் பாகத்தில் நடித்தபோதே விரதம் இருந்த நயன்தாரா தற்போது இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் விரதம் இருந்து வருகிறாராம். கூடவே அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் இரட்டைக்குழந்தைகளும்கூட விரதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்குவதற்கு முன்பே நயன்தாரா இனிமேல் யாரும் தன்னை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கவேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த படத்திற்கு பிறகு தன்னை எளிமையாக காட்டிக்கொள்ள விருப்பப்படுகிறாரோ என்னவோ என கமெண்ட் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

புதிய கதையுடன் ஐஸ்வர்யா!

‘3’ படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக கால் பதித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் திருமணம் மற்றும் குழந்தைகளுக்குப் பிறகு இயக்கத்தில் ஈடுபடாமல் தவிர்த்துவந்த இவர், ‘வை ராஜா வை’ திரைப்படம் மற்றும் கணவர் தனுஷை பிரிந்தபிறகு தனது அப்பாவை வைத்தே ‘லால் சலாம்’ போன்ற படங்களை இயக்கினார். அந்த படங்கள் மாபெரும் வெற்றிபெறும் என எதிர்பார்த்த நிலையில், வசூல்ரீதியாக பலத்த அடிவாங்கின.


தனது படத்தின் கதையை திருத்தணி முருகன் பாதத்தில் வைத்து பூஜித்த ஐஸ்வர்யா

இதனால் தனது அடுத்த படத்தை சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்போவதாகவும், அதை தானே தயாரிக்கப்போவதாகவும் ஐஸ்வர்யா கூறிவருவதாக சொல்லப்பட்டது. அதற்காக கதையும் எழுதிவருகிறார் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால் படத்தை தயாரிக்கும் முடிவை கைவிடுமாறு அவருக்கு நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்துவருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை திருத்தணி முருகன் கோயிலுக்கு கொண்டுசென்று சாமி பாதத்தில் வைத்து பூஜித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மீண்டும் இணையுமா ஆதிக் - அஜித் காம்போ?

இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்விதமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் கமிட்டாகி இடையிடையே ஷூட்டிங்கிற்கும் போய்வந்தார் அஜித். இந்த படத்தின் ரிலீஸ் தேதியும், ‘விடாமுயற்சி’யின் ரிலீஸ் தேதியும் மாற்றி மாற்றி வைக்கப்பட்டதில், ஒருவழியாக ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக்கே இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெறும் ஆதிக் ரவிச்சந்திரன்

ஆனால் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வசூல் வேட்டையை பொருத்து ஆதிக்குடனான கூட்டணியை உறுதிசெய்துகொள்ளலாம் என்று அஜித் கூறிவிட்டதாகவும், இதனால் ஆதிக் மீண்டும் அஜித்துடன் இணையும் வாய்ப்பை பெறுவாரா? இல்லையா? என்பது கூடிய சீக்கிரத்தில் தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கிடையே அஜித்துக்காக ஆதிக் ஒரு கதையை தயார்செய்துவருகிறார் என்று கூறுகின்றனர் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

ரஜினியுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ என்ற உண்மைக்கதையை தழுவி உருவாகும் படத்தில் நடித்துவரும் அவர், இடையே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் நடித்துவருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கமிட்டான இப்படத்திற்கு பெயர் சூட்டப்படாமலேயே இருந்தது. இடையே சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க, இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, பாலிவுட் பக்கம் சென்றிருந்தார் முருகதாஸ். தற்போது அப்படம் வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை கையிலெடுத்திருக்கிறார்.


ஒரே நாளில் மோதும் என எதிர்பார்க்கப்படும் மதராஸி மற்றும் கூலி

அந்த படத்திற்கு ‘மதராஸி’ என பெயரிடப்பட்டிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்டிலேயே படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் - ரஜினி கூட்டணியில் உருவாகிவரும் ‘கூலி’ திரைப்படமும் ஆகஸ்ட்டில்தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருப்பதால் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தமன்னாவுக்கு பிரேக்கப்பா?

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் தமன்னா, ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ என்ற வெப் தொடரில் நடித்தபோது தன்னுடன் ரொமான்ஸ் செய்த விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்தார். அதுகுறித்து அரசல்புரசலாக பேசப்பட்ட நிலையில், அவரே தங்களுடைய காதல் குறித்து பொதுவெளியில் அறிவித்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாகவே கலந்துகொண்டனர்.


திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட தமன்னா - விஜய் வர்மா ஜோடி பிரிவு

தனது காதலர் தன்னை நன்கு புரிந்து வைத்திருப்பதாகவும், இந்த உறவு விரைவில் திருமணத்தில் முடியுமென்றும் அவர் ஒருசில பேட்டிகளில் கூறியதையடுத்து இவர்களுடைய திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்துவந்த இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக சமீபத்திய செய்திகள் கூறுகின்றன. காதலில் பிரிந்துவிட்டாலும் இருவருக்குமிடையேயான நட்பை தொடரவிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இவர்களுடைய திருமண அறிவிப்பை எதிர்பார்த்திருந்த தமன்னாவின் ரசிகர்கள் இப்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த ஆண்டின் முதல் ரூ.500 கோடி படம்!

விக்கி கௌஷால் - ராஷ்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவுடைய கதைதான் இப்படம். இந்த படத்தில் மராட்டிய படைக்கும், முகலாயப் படைக்குமிடையேயான போர் குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது.


இந்த ஆண்டின் முதல் ரூ. 500 கோடி வசூல் சாதனை படத்தை சாவா

ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்திற்கு கோவாவில் சிறப்பு சலுகைகள்கூட வழங்கப்பட்டன. வட இந்தியாவில் பெரும்பாலான தியேட்டர்களை ஆக்கிரமித்திருக்கும் இப்படம் கிட்டத்தட்ட ரூ. 500 கோடி வசூலித்திருக்கிறது. இந்த ஆண்டில் ரூ. 500 கோடியை தாண்டிய முதல் திரைப்படம் என்ற பாராட்டை பெறுகிறது ‘சாவா’. 

Tags:    

மேலும் செய்திகள்