திரை உலகின் நம்பிக்கை நட்சத்திரம் ஹலிதா சமீம்!

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார் ஹலிதா.

Update:2023-08-22 00:00 IST
Click the Play button to listen to article

ஹலிதா சமீம் தமிழ் திரையுலகில் இயங்கி வரும் பெண் இயக்குநர்களுள் ஒருவர். திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் பகுதியை சேர்ந்த ஹலிதா சமீம் கொடைக்கானல் கான்வென்ட்டில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர். பள்ளிப்பருவத்திலேயே ஆசிரியர்களிடையே சிறந்த மாணவியாக கருதப்பட்டவர். பொதுவாக கான்வென்ட் பள்ளிகளில் தமிழில் பேசுவது என்பதே அரிதினும் அரிது. ஆனால். பள்ளி முதல்வர் தமிழில் எழுத வேண்டிய கடிதங்களை தான் எழுதிக் கொடுக்கும் அளவுக்கு தமிழில் ஆர்வமும் திறமையும் கொண்டு விளங்கினார். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார் ஹலிதா. பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தார். அங்கே இங்கே என்று சில இடங்களில் சினிமா வாய்ப்புகளைத் தேடியலைந்த ஹலிதா உதவி இயக்குநரானார். அதோடுகூட எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.


படப்பிடிப்பில் ஹலிதா சமீம்

திரைப்பயணம்

ஹலிதா திரைத்துறையில் தனது பாதையை அமைத்துக் கொள்ள உதவியாக இருந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. அவர்களிடம் ஹலிதா உதவி இயக்குநராக பணிபுரிந்தார். குறுகிய காலத்துக்குள் தம் பணி சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தார். அடுத்த கட்டமாக இயக்குநர் மிஸ்கினிடமும் உதவி இயக்குனராக இணைந்து பணியாற்றினார்.

முதல் படம்

2014-ஆம் ஆண்டு வெளிவந்த `பூவரசம் பீப்பீ’ திரைப்படம் மூலம் இயக்குநராக ஆனார் ஹலிதா. `பூவரசம் பீப்பீ’ திரைப்படத்தை விறுவிறுப்பான கதையம்சத்துடன் இயக்கியிருந்தார். கோடை விடுமுறையை ஒன்றாக கழிக்கும் மூன்று சிறுவர்கள், ஒரு குற்றத்திற்கு சாட்சியாகி விடுகிறார்கள். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் சூழலை விவரிக்கும் கதையாக இப்படத்தை இயக்கியிருந்தார். பலரது வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம், ஹலிதா தன்னை ஒரு சிறந்த இயக்குநராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வழிவகுத்தது.


பூவரம் பீப்பி திரைப்படத்தில் ஒரு காட்சி

அடுத்த கட்டம்

முதல் படத்தைத் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு `சில்லுக் கருப்பட்டி’ என்ற திரைப்படத்தை இயக்கினார் ஹலிதா. இத்திரைப்படத்தில் நான்கு துண்டுக்கதைகளை இணைத்து ஒரு படமாக இயக்கியிருந்தார். குப்பைகளைப் பொறுக்கியெடுத்து குப்பத்தில் வாழ்ந்தாலும் நேர்மை காக்கும் சிறுவன், நோயாளியானதால் கைவிட்ட வருங்கால மனைவி, அதை அன்பாக மாற்றும் 'கார் ஷேரிங்' தோழி, காதலை நிரூபிக்க கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் வயதான யசோதா, பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனைவி மற்றும் குழந்தைகளை மறக்கும் தனபால்; அதை உணர்த்தும் அமுதினி என யதார்த்தம் நிறைந்த நான்கு கதைகளையும் இணைத்து உருவாக்கியதுதான் `சில்லுக் கருப்பட்டி’. சமுத்திரகனி, சுனைனா, நிவேதிதா சதுஷ், லீலா சாம்சன் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த இந்தப் படத்தை நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.


‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படக் காட்சி பின்புலத்தில் ஹலிதா சமீம்

ஏலே

கிராமத்துப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹலிதாவின் மூன்றாவது திரைப்படமான `ஏலே’ கோவிட் தொற்று காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் 2021-ஆம் ஆண்டு நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. கிராமத்து பாணி நகைச்சுவையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் நல்ல பாராட்டினைப் பெற்றது. இறந்துபோன தந்தையின் இறுதிச் சடங்குக்காக நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரும் மகன், அந்த சாவு வீட்டில் நிகழும் எதிர்பாரா சூழலை எப்படி கையாள்கிறார் என்பதைக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதையில் இயக்குநர் தன் முழுத்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்தக் கதையின் பாத்திரப்படைப்புகள் அத்தனையும் நமக்கு மிகவும் நெருக்கமானதாக தோன்றும்படி அமைத்திருந்தது அவரது திறமைக்குச் சான்று. தொலைக்காட்சியில் வெளியானதைத் தொடர்ந்த இந்தப் படம் ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பானது.


‘ஏலே’ படப்பிடிப்பில் ஹலிதா சமீம்

மின்மினி

இவரது முந்தைய படங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் இவருடைய நான்காவது படைப்பான `மின்மினி’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த சிறுவர்கள் வளர்ந்த பிறகு எடுக்க வேண்டிய பகுதிக்காக ஒன்பது வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார் ஹலிதா. ஆனாலும் இப்படம் எப்போது முடியும் என்று இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் ‘மின்மினி’ படத்திற்கு இசையமைக்கிறார்.

கிராமத்துச் சூழலிலிருந்து வந்த ஹலிதா சமீம் தனியொரு பெண்ணாக போராடி திரைத்துறையில் சாதனைகளை படைத்து வருகிறார். விரைவில் அவர் தன் படைப்புத்திறன் வழியாக தமிழ்த்திரையின் சிறந்த இயக்குநர் இடத்தை நிச்சயம் பிடிப்பார் என்று நம்புவோம்.

Tags:    

மேலும் செய்திகள்