திரைத்துறையில் சுதந்திர கீதங்கள்!

சுதந்திரத்திற்கு முன்பு நாடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வந்த தேசபக்திப் பாடல்கள் அதற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தமிழ்த் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

Update:2023-08-08 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தாறு ஆண்டுகள் நிறைவடைகிறது. நமது நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு போராடிய வீரர்கள் தங்களது விடுதலைப்போராட்டத்தை அறவழியில் நின்று போராடினர். அதற்கு நடனம், இசை, நாடகம் போன்ற பல தளங்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் மனிதனின் உள்ளார்ந்த நாட்டுப்பற்றை வெளிக்கொணர உதவியதில் இசைக்கு மிகமுக்கிய பங்கு உண்டு. சுதந்திரத்திற்கு முன்பு நாடகங்களின் வாயிலாக பரப்பப்பட்டு வந்த தேசபக்திப் பாடல்கள் அதற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தமிழ்த் திரைப்படங்களிலும் பயன்படுத்தப்பட்டது. அவ்விதமாய் நமது தமிழ்த் திரைத்துறையில் சுதந்திர உணர்வைத் தூண்டும் வகையில் பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பாடல்கள் பற்றிய சில தகவல்களை இப்பதிவில் காண்போம்.

“வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம்”

‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும். இந்தப் பாடல் பாரதியாரின் வரிகளுக்கு ஜி.ராமநாதனின் இசையமைப்பில் உருவானது. அந்தப் பாடலைப் பற்றி இங்கு காண்போம்.

“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல்விடுவோம்

பள்ளி தலமனைத்தும் கோயில்செய்கு வோம் எங்கள்

பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்”


‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தில் பாரதி மற்றும் வ.உ.சி. 

இந்திய நாட்டின் வடக்கெல்லையாக அமைந்திருக்கும் பிரமாண்ட இமயமலை மீது உலா வருவோம். மேற்கு திசை கடல் முழுவதுமாக இந்திய நாட்டுக் கப்பல்களை மிதக்க விட வேண்டும். பள்ளிக்கூடங்களை எல்லாம் கோயில் போன்று பராமரித்து கல்வித் தரத்தை உயர்த்தி அனைவருக்கும் கல்வியறிவு அளிக்க வேண்டும். இது எங்கள் பாரத தேசம் என்று பெருமையோடு தோள் தட்டி கூற வேண்டும் என்று பாரத தேசத்தின் வளர்ச்சியோடு பெருமையைப் பறை சாற்றும் விதமாக பாரதியார் இப்பாடல் வரிகளை அமைத்திருக்கிறார். மேலும் இந்தப் பாடலில் எதிர்கால பாரதம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்; அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற தம் லட்சியக் கனவுகளை பாரதி பதிவு செய்திருக்கிறார்.

“சிந்து நதியின்மிசை நிலவினிலே”

“கை கொடுத்த தெய்வம்” என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மகாகவி பாரதியார் பாடலாகும். இதற்கு மெல்லிசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, ஜெ.வி.ராகவுலு ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.

“சிந்து நதியின் மிசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடனே

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத்

தோணிகள் ஓட்டிவிளை யாடிவருவோம்”

நிலவொளி வீசும் ரம்மியமான இரவுப் பொழுதில் சிந்து நதியின் மீது, சிறந்த கேரள மாநிலத்தின் கன்னியர்களுடன் இணைந்து, அழகிய தெலுங்கு மொழியில் கானம் பாடிக்கொண்டு, படகுகளை செலுத்திக் குதூகலமாய் பொழுதுபோக்கி விளையாடுவோம் என்ற வரிகளால் இந்திய நாட்டின் நிலவளம், அழகு மற்றும் மொழித்திறன்களைப் பற்றி சிலாகிக்கிறார் பாரதியார். இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்குள்ளும் இணக்கமான போக்கு இருக்க வேண்டும்; வடநாடு – தென்நாடு என்ற பேதமோ, மொழிக் காழ்ப்புணர்ச்சியோ இருக்கக் கூடாது என்னும் கருத்தை இப்பாடலில் கவிநயத்துடன் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் பாரதி.

“பாரத சமுதாயம் வாழ்கவே”

“பாரதி” திரைப்படத்தில் இடம்பெற்ற பாரதியின் வரிகளில் அமைந்த இப்பாடலை இளையராஜவின் இசையில் கே.ஜே. ஜேசுதாஸ் உணர்ச்சிப் பொங்க கணீர் குரலில் பாடியிருப்பார்.

“பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய (பாரத)

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொது உடைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத் துக்கொரு புதுமை – வாழ்க! (பாரத)”

இப்பாடலில் பாரத நாடு முப்பது கோடி மக்களைக் கொண்ட மொத்த சமூகத்திற்கும் உரிய பொதுச் சொத்து. இது உலகில் ஒப்பிட முடியாத ஒரு சமுதாயமாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி வளங்கள் நிறைந்த நாடு நமது பாரதம். எனவே இங்கு ஒருவர் உணவை மற்றவர் பறிக்கும் நிலைமைத் தேவையில்லை என்று தீவிரமாக சுட்டுகிறார் பாரதி.

“தமிழா தமிழா”

‘ரோஜா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தமிழா தமிழா நாளை நம் நாளே” என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட பிரபலமானப் பாடல். இது முழுக்க முழுக்க தேச ஒற்றுமையை குறித்து விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாடலாகும். இப்பாடல் திரைப்படத்தின் இறுதி உச்சக்கட்ட காட்சிக்காக எழுதப்பட்டது.


ரோஜா படத்தில் அரவிந்த்சாமி

“தமிழா தமிழா நாளை நம் நாளே

என் வீடு தாய் தமிழ் நாடு

என்றே சொல்லடா

என் நாமம் இந்தியன் என்றே

என்றும் நில்லடா

நிறம் மாறலாம் குணம் ஒன்றுதான்

இடம் மாறலாம் நிலம் ஒன்றுதான்

மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்

கழி மாறலாம் கொடி ஒன்றுதான்

திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்

இசை மாறலாம் மொழி ஒன்றுதான்

நம் இந்தியா அது ஒன்றுதான் வா”

என்ற பாடல் வரிகளால் நிறம், இனம், மொழி என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் இந்தியா ஒன்றுதான் என்று ஒற்றுமையை வலியுறுத்துகிறது இப்பாடல். பிரிவினைக்கு உட்படாமல் நாம் அனைவரும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்தியாவை துண்டாட நினைப்பவரை உறுதியோடு எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற காட்சியமைப்புக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டிருந்தது.

“இந்திய நாடு என் வீடு”

சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த “பாரத விலாஸ்” படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியுள்ளனர். இப்பாடல் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவிஞர் வாலியின் பாடல் வரிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

“இந்திய நாடு என் வீடு

இந்தியன் என்பது என் பேரு

எல்லா மக்களும் என் உறவு

எல்லோர் மொழியும் என் பேச்சு

திசை தொழும் துருக்கர் என் தோழர்

தேவன் இயேசுவும் என் கடவுள்”

என்று தொடங்கும் இந்தப் பாடல் மூலம் இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை உணர்த்தப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மொழியினர், மதத்தினர், இனத்தவர் இருந்தாலும் அனைவரும் ஒன்றே; எல்லோரும் இந்தியரே!

Tags:    

மேலும் செய்திகள்