தயாரிப்பாளர்களுக்கு பிடித்த ஹீரோயின் - பிரியா பவானி சங்கர்!

சினிமாவில் யாருடன் லிப்-லாக் காட்சியில் நடிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, தனக்கு பிடித்த அல்லு-அர்ஜூனுடன் என்று பதிலளித்திருந்தார் பிரியா. அதுவும் சினிமாவில் ரொமான்ஸ் காட்சி தேவைப்படும் என்றால் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்கத் தயார் என்று கூறியிருந்தார்.

Update:2024-04-02 00:00 IST
Click the Play button to listen to article

நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் பலருக்கே வாய்ப்பு என்பது எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் நினைக்காத நேரத்தில் எதிர்பாராத வாய்ப்பு என்பது தேடிவந்தால் அதனை பயன்படுத்திக்கொள்வதுதானே புத்திசாலித்தனம். அப்படித்தான் செய்தி வாசிப்பாளராக இருந்த ஒரு பெண்ணுக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. அதனை திறம்பட பயன்படுத்தியதால் அடுத்து பெரிய திரை வாய்ப்பும் தேடிவந்தது. கிடைத்த வாய்ப்புகளை சவாலாக எடுத்துக்கொண்டு சரியாக பயன்படுத்தியதால் ஓரிரு ஆண்டுகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராகிவிட்டார் அப்பெண். குறிப்பாக, 2023ஆம் ஆண்டில் அதிக தமிழ்ப்படங்களில் நடித்த ஹீரோயின் என்ற பெயரையும் பெற்றுவிட்டார். அவர் வேறு யாருமல்ல; செய்தி வாசிப்பாளர் டூ தொகுப்பாளர் - தொகுப்பாளர் டூ சீரியல் நடிகை - சீரியல் நடிகை டூ சினிமா ஹீரோயின் என முன்னேறி வலம்வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர்தான். சமீபத்தில் இவர் குறித்த பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இவருடைய பின்னணி, காதல் மற்றும் குறுகிய காலத்தில் திரைத்துறையில் பெற்ற அசுர வளர்ச்சி குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம். 


பிரியா செய்தி வாசிப்பாளராக இருந்தபோது - ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தபோது

நியூஸ் டூ சீரியல்

தமிழ்நாட்டின் மாயவரத்தில் பிறந்தவர் பிரியா பாவனி சங்கர். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே திரைத்துறை சம்பந்தப்பட்ட படிப்பைத்தான் படிக்கவேண்டும் என ஆர்வமாக இருந்த இவர், பெற்றோரின் கட்டாயத்தால் பொறியியல் துறையில் சேர்ந்து படித்திருக்கிறார். ஆனால் மீடியாத்துறையின்மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்தே டிவி தொடர்பான வேலையில் சேர முயற்சித்து வந்துள்ளார். அதன் பலனாக, புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்திலேயே 2011ஆம் ஆண்டு அங்கு செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார் பிரியா பவானி சங்கர். வேலையில் இருந்துகொண்டே எம்.பி.ஏ படிப்பையும் முடித்துள்ளார். செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தியாவில் சமூக ஊடகங்கள் அதீத வளர்ச்சியடைந்து கொண்டிருந்த சமயம் அது என்பதால், பிரியாவை அவை கைதூக்கிவிட்டன. தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது. 2014ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் ஹீரோயினாக கமிட் ஆனார். அதுவரை சீரியல் பார்க்காத பல இளைஞர்களும் பிரியாவிற்காகவே சீரியல் பார்க்கத் தொடங்கியதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். தனது முதல் சீரியல் அனுபவம் குறித்து பிரியா ஒரு நேர்க்காணலில் பேசியபோது, முதல் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கின்போது நிறைய டேக்குகள் எடுத்ததால் நடிப்பு குறித்து பயமாக இருந்ததாகவும், அதனால் சீரியலிலிருந்து விலகி மீண்டும் செய்தி வாசிப்பாளராகவே சென்றுவிடலாம் என யோசித்ததாகவும், ஆனால் டைரக்டர்தான் தன்னை சமாதானப்படுத்தி நடிக்கவைத்ததாகவும் கூறியிருந்தார். அப்படி ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் நடிப்பில் தன்னை மெருகேற்றிக்கொண்டதால் சீரியல் மூலமே தனக்கென ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார் பிரியா.


பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படங்களில் அவருடைய சில கதாபாத்திரங்கள்

முன்னணி நடிகையாக உருவாகிவரும் பிரியா

அதன்பிறகு 2017ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ என்ற திரைப்படத்தின்மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் முதல் படத்திலேயே எஸ். மதுமிதா என்ற கேரக்டர்மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனாலேயே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் என்பது இவரைத் தேடிவந்தன. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘மாபியா சாப்டர் 1’ போன்ற படங்களில் நடித்தார். 2021இல் மட்டும் இவர் நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசட தபற’ மற்றும் ‘ஓ மன பெண்ணே’ என 3 படங்கள் வெளியாகின. தொடர்ந்து 2022இல் ‘ஹாஸ்டல்’, ‘யானை’, ‘குருதி ஆட்டம்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். அதேபோல் 2023லும் ‘அகிலன்’, ‘பத்து தல’, ‘ருத்ரன்’ மற்றும் ‘பொம்மை’ என 4 தமிழ்ப்படங்களில் நடித்து அதிக படங்கள் நடித்த தமிழ் ஹீரோயின் என்ற பெயரையும் பெற்றார். இதனிடையே கடந்த ஆண்டே ‘கல்யாணம் கமநீயம்’ என்ற படத்தின்மூலம் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமனார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அனில் குமார் ஆல்லா எழுதி இயக்கியிருந்தார். சீனியர் ஹீரோயின்களுக்கே, பேசப்படும் அளவில் படங்கள் கிடைக்காத நிலையில் பிரியாவிற்கு மட்டும் எப்படி வாய்ப்புகள் தேடிவருகின்றன என பரவலாக பேசப்பட்ட நிலையில், அவர் பேரம் பேசாமல் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை அப்படியே வாங்கிக்கொள்வதுதான் காரணம் என்கின்றன சினிமா வட்டாரங்கள். அடுத்தடுத்து நிறைய படங்களை கைவசம் வைத்திருந்தாலும் பிற நடிகைகளைப் போல சம்பளத்தை பிரியா கணிசமாக உயர்த்துவதில்லையாம். பெரும்பாலும் தனது சம்பளத்தை ரூ. 30 லட்சத்திற்குள்தான் வைத்திருக்கிறாராம். அதனாலேயே தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் என்றாகிவிட்டார். தற்போது ‘டிமான்ட்டி காலனி 2’, ‘இந்தியன் 2’ போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில் ‘ஜிப்ரா’, ‘ரத்னம்’, ‘பீமா’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரியா. இவை ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக இருப்பதாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பிரியாவே தெரிவித்திருக்கிறார்.


சீரியல் அனுபவம் குறித்து நேர்க்காணலில் பகிர்ந்த பிரியா

பொதுவாக நடிகைகள் என்றாலே கொஞ்சம் க்ளாமரை திரையுலகம் எதிர்பார்க்கும். இதுகுறித்து சில நடிகைகள் ஓப்பனாகவே பேசியும் இருக்கின்றனர். க்ளாமர் நடனம் மற்றும் காட்சிகளுக்கு ஓகே சொல்லாததாலேயே பட வாய்ப்புக்களை நழுவவிட்டதாக கூறியிருக்கின்றனர் சிலர். ஆனால் எந்தவித க்ளாமரும் காட்டாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது நடிப்பை வைத்து மட்டுமே பிரியா பெற்றிருக்கிறார் என திரையுலகினரே பாராட்டி வருகின்றனர்.

சீரியலில் நடித்தது அந்த அளவிற்கு பிடிக்கவில்லை

தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர், சீரியல் நடிகை மற்றும் சினிமா ஹீரோயின் என பல நிலைகளை கடந்து வந்திருந்தாலும் தனக்கு செய்தி வாசிப்பாளர் பணிதான் மிகவும் பிடித்திருந்ததாக சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்க்காணலில் தெரிவித்திருக்கிறார் பிரியா. தனது செய்தி வாசிப்பு அனுபவம் குறித்து பகிர்கையில், “நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தேன். அந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த தொழிலில் போலியாக இருக்கத் தேவையில்லை. ஆனால் சீரியலுக்கு வந்தபிறகு அந்த அளவிற்கு பிடிக்கவில்லை. என்னை பொருத்தவரை சினிமா நடிகரைவிட டெலிவிஷன் நடிகராக இருப்பதற்கு கடினமான உழைப்புத் தேவைப்படும். நம்மை நாமே பராமரித்துக்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் சினிமாவில் அப்படியல்ல. எல்லாரும் என்னை பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு டெலிவிஷன் திறந்துகொடுத்த வழிவாசலுக்கு நன்றிகெட்டவளாக இருக்க விரும்பவில்லை. ஆனால் உண்மையில் அங்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் நான் அதை என்ஜாய் செய்யவில்லை. அதனால்தான் சீரியலிலிருந்து விலகி 6 மாதங்கள் இந்த ஊரைவிட்டே சென்றுவிட்டேன். சினிமாவில் நடிப்பதற்காக சீரியலை விடவில்லை என்பதுதான் உண்மை. சினிமாவைப் பொருத்தவரை கிட்டத்தட்ட 45 நாட்கள் ஒரு கதையில் நடிப்போம். அடுத்து வேறு கதைக்கு சென்றுவிடுவோம். அதனால் எமோஷன்ஸ் மாறிவிடும். ஆனால் சீரியல் அப்படியல்ல. அங்குள்ள நடிகர் நடிகைகள் தங்களது ஹேர், காஸ்டியூம் மற்றும் மேக்கப் என நிறைய பராமரிக்கவேண்டி இருப்பதால் நிச்சயம் அவர்களை பாராட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தனது தெலுங்கு பட அனுபவம் குறித்து பேசுகையில், “நான் எனது முதல் தமிழ்ப்படம் ‘மேயாத மான்’ முடிந்தபோதே ‘கல்யாணம் கமநீயம்’ என்ற தெலுங்குப் படத்தில் கமிட் ஆனேன். ஆனால் அந்தப் படம் ரிலீஸாக தாமதமாகிவிட்டது. இப்போது ‘பீமா’ படத்தில் நடித்திருக்கிறேன். இன்னும் பல தெலுங்குப் படங்களில் நடிக்கும் விருப்பம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். திரைப்படங்களுக்கிடையே வெப் சீரிஸிலும் அவ்வப்போது நடித்துவருகிறார் பிரியா பவானி சங்கர்.


தனது காதலர் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர்

காதலும் திருமணமும்

காதல் மற்றும் திருமணத்தைப் பொருத்தவரை எப்போதும் வெளிப்படையாகவே பேசக்கூடியவர் பிரியா பவானி சங்கர். கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்தே தன்னுடன் படித்த ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் இவர். செய்தி தொகுப்பாளராக இருந்தபோதிருந்தே தனது காதலனுடனான புகைப்படங்களை சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். பல ஆண்டுகளாக காதலில் இருந்துவரும் பிரியா இன்னும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? என்ற கேள்வியை நெட்டிசன்கள் அவ்வப்போது முன்வைத்து வந்தனர். இதுகுறித்து பழைய நேர்க்காணல் ஒன்றில் மனம்திறந்த பிரியா, காலேஜ் முடித்ததும் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிடலாம் என நினைத்திருந்ததாகவும், ஆனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போகவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது காதலரும் தன்னுடைய கேரியரில் முன்னேற பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘பொம்மை’ எனத் தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் நடித்ததால் இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது என கிசுகிசுக்கப்பட்டது. இப்படி அவ்வப்போது பிரியா தனது காதலரை ப்ரேக்-அப் செய்துவிட்டதாகவும், சில நேரங்களில் திருமணம் நடந்துவிட்டது எனவும் ஊடகங்களில் வதந்திகள் வருவது சகஜமாகிவிட்டது. இருப்பினும் இதுபோன்ற வதந்திகள் குறித்தெல்லாம் பிரியா கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மீண்டும் திருமணம் குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது “திருமணம் பண்ணும்போது பண்ணுவேன். சுதந்திரமான பெண் என்றால் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று எந்த அர்த்தமும் இல்லை. சுதந்திரமான பெண் என்பதால் அப்பா, அம்மா இல்லாமலா இருக்கிறோம்? அதேபோல் திருமணத்திற்கு பிறகும் கணவருடன் சுதந்திரமாக இருக்கமுடியும்” என நச் பதில் கொடுத்தார் பிரியா.


வைரலான பிரியாவின் சமீபத்திய புகைப்படம் - நடிகர் அல்லு அர்ஜூன்

சமீபத்தில் வைரலான பிரியா குறித்த டாக்ஸ்!

சமீபத்தில் பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? என்ற செய்தி வைரலானது. குறுகிய காலத்தில் நிறையப்படங்களில் நடித்திருக்கும் பிரியா பவானி சங்கரின் சொத்து மதிப்பு ரூ. 8 கோடி முதல் ரூ. 10 கோடிவரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அழகிய பீச் ஹவுஸ், BMW மற்றும் காண்டோ என இரண்டு கார்களை தனக்கென வைத்திருக்கிறாராம். முடிந்தவரை தனது காதலனுடன் வெளிநாடுகளுக்கு வகேஷனுக்கு செல்லும் பிரியா, சமீபத்திய வெளிநாட்டு பயணத்தின்போது மதுவை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்கு ஹோம்லி கேர்ள் பிரியாவா இது! என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்திய பேட்டியில் சினிமாவில் யாருடன் லிப்-லாக் காட்சியில் நடிப்பீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, தனக்கு பிடித்த அல்லு-அர்ஜூனுடன் என்று பதிலளித்திருந்தார் பிரியா. அதுவும் சினிமாவில் ரொமான்ஸ் காட்சி தேவைப்படும் என்றால் அவருடன் முத்தக்காட்சியில் நடிக்கத் தயார் என்று கூறியிருந்தார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை அந்தப் பக்கம் போகாமல் இருந்த பிரியாவை அடுத்து ரொமான்ஸ் காட்சிகளிலும் எதிர்பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்