அவமானங்களை வென்று "ராயன்" படத்தில் மிரட்ட வரும் துஷாரா விஜயன்! - சினிமாவிலிருந்து விலகல்!
இன்றைய தமிழ் சினிமாவில் பெண்களை தைரியமிக்கவர்களாக காண்பிக்கும் ஒருசில இயக்குநர்களில் முதன்மையானவராக இருப்பது பா.ரஞ்சித்தான்.
இன்றைய தமிழ் சினிமாவில் பெண்களை தைரியமிக்கவர்களாக காண்பிக்கும் ஒருசில இயக்குநர்களில் முதன்மையானவராக இருப்பது பா.ரஞ்சித்தான். ‘அட்டகத்தி’ திரைப்படம் துவங்கி ‘நட்சத்திரம் நகர்கிறது’ வரை அவரின் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானதாக காட்டப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றார் போன்று அவரின் பெண் கதாபாத்திர தேர்வும் ஆச்சரியப்படும்படியான ஒரு தோற்றத்தைத்தான் நமக்கு ஏற்படுத்தும். அப்படி பா.ரஞ்சித்தின் கண்டுபிடிப்பு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் மாரியம்மா என்ற பெயரில் துணிச்சல்மிக்க பெண்ணாக நமக்கெல்லாம் பரிட்சயமானவர்தான் துஷாரா விஜயன். இவர் பா.ரஞ்சித்தின் மனதிற்கு மிகவும் பிடித்த விருப்ப நாயகியாம். அதனால்தான் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்துள்ளார். பார்ப்பதற்கு வேறு மாநில பெண் போன்று மிகவும் மாடனாக இருந்தாலும், பக்கா தமிழ் பெண் இவர். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வர தொடங்கியிருக்கும் துஷாரா, தற்போது தனுஷின் 50-வது படமான 'ராயன்' திரைப்படத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். வருகிற 26-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் துஷாராவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், விரைவில் சினிமாவிலிருந்து விலகுவதாக அவர் அதிர்ச்சி அளித்துள்ளார். துஷாரா விஜயனின் திரைப்பயணம் மற்றும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
யார் இந்த துஷாரா விஜயன்?
அப்பா, அம்மாவுடன் துஷாரா விஜயன்
தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் எதார்த்தமாக நடிக்கும் நடிகையான துஷாரா விஜயன், திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டிக்கு அருகே உள்ள கன்னியா புரம் என்ற கிராமத்தில் 1997-ஆம் ஆண்டு, அக்டோபர் 14-ஆம் தேதி, கே.விஜயன் என்பவருக்கு மகளாக பிறந்தார். இவர் தந்தை திமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் சாணார்பட்டி விஜயன் என்றால் அவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்களாம். அந்த அளவுக்கு கட்சியில் மிகவும் பிரபலமான விஜயன், அமைச்சர் ஐ. பெரியசாமியின் நெருக்கத்திற்குரியவர் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி நன்கு வசதி வாய்ப்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்த துஷாரா, தனது 3-ஆம் வகுப்பு வரை திண்டுக்கல்லிலேயே படித்துவந்துள்ளார். திடீரென்று ஒருநாள் குடும்பம் மொத்தமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு குடிபெயர பிறகு தனது பள்ளி கல்வி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயே தொடர்ந்துள்ளார். படிப்பில் படு கெட்டிக்காரரான துஷாரா, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் அவரது பெற்றோர்கள் அவரை பொறியியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்க சொல்லி கல்லூரியில் சேர்த்துவிட்டார்களாம். பெற்றோர்களின் விருப்பத்திற்காக பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவருக்கு பெரிதாக அப்படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் போனதால், பாதியிலேயே கல்லூரியில் இருந்து விலகியுள்ளார். அதற்கு முன்பாக தனது அப்பா - அம்மா இருவரிடமும் சென்று தனக்கு இன்ஜினியரிங் படிப்பு சுத்தமாக வரவில்லை. அதில் பெரிதாக ஈடுபாடும் இல்லை. எனவே மாடலிங் துறையில் பயணிக்க ஆசைப்படுகிறேன். அதுதொடர்பான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சொல்லவும், உடனே அவரின் அம்மா அதற்கு முழு சம்மதம் தெரிவித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருவேறு அழகிய தோற்றங்களில் துஷாரா
சென்னைக்கு வந்தவர் இங்கு அடையாறுக்கு அருகே உள்ள மத்திய கைலாஷில் செயல்பட்டு வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) சேர்ந்து படித்துள்ளார். அங்கு பட்ட படிப்பை முடித்த துஷாரா, அதே துறையில் பயணிக்க முடிவு செய்து ஃபேஷன் டிசைனராக தனது பணியை தொடங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மாடலிங் துறைக்குள் நுழைந்து விளம்பரம், சினிமாவுக்கான வாய்ப்பை தேடும்போது நிறைய அவமானங்களை சந்திக்க நேர்ந்துள்ளது. அதிலும் நீ உன்னோட முகத்தை கண்ணாடியில் பார்த்து இருக்கியா? இந்த பொண்ணு ஹீரோயின் மெட்டீரியலே இல்லை… ஏதாவது ஹீரோயினுக்கு சைடு ரோல் கெடச்சா பண்ணு என பல கேளிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இருந்தும் விடாமல் முயற்சி செய்துகொண்டே மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தவர், 2017-ஆம் ஆண்டு மிஸ் ஃபேஸ் ஆஃப் சென்னை என்ற அழகி போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு போட்டியிலும் கலந்துகொண்டார். ஆனால், மிஸ் தமிழ்நாடு பட்டம் அவருக்கு கிடைத்ததோ என்னவோ அதே ஆண்டில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். இதற்கு பிறகுதான் பட வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் என தேடிவர ஆரம்பித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்து அறிமுகமான முதல் படம்தான் தமிழில் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ என்ற திரைப்படம். இப்படத்திற்கு பிறகு ‘ஏஞ்சலினா’, ‘கண்ணம்மா’ என்ற குறும்படங்களிலும், 3 ரோசஸ் விளம்பர படத்திலும் நடித்தார். இந்த அறிமுகங்கள்தான் பா.ரஞ்சித் என்ற வெற்றி இயக்குநரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.
பா.ரஞ்சித்தின் விருப்ப நாயகி
பா.ரஞ்சித் இயக்கத்தில் 'சார்பட்டா பரம்பரை'யில் மாரியம்மாவாக துஷாரா
தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ஒன்றிரண்டு படங்கள், குறும்படங்கள் என நடித்திருந்தாலும் துஷாராவுக்கு பெரியதாக வெற்றி கிடைக்கவில்லை. இருந்தும் எப்போதும் பாசிட்டிவ் எனர்ஜியையும், விடா முயற்சியையும் கொண்ட துஷாரா தன் முயற்சிகளில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தன்னை ஒரு சிறந்த நாயகியாக நிரூபிக்க போராடிக்கொண்டிருந்தார். அந்நேரம் சோஷியல் மீடியாவில் துஷாராவின் புகைப்படத்தை பார்த்த பா.ரஞ்சித் தனது உதவியாளரை அழைத்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் ஆடிஷனுக்கு துஷாராவை வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். முதலில் வந்த அழைப்பை பொய் என்று நினைத்துக்கொண்ட துஷாரா, மீண்டும் அடுத்த நாள் வந்த அழைப்பை வைத்து ரஞ்சித் சார் அழைத்துள்ளது உண்மைதான் போல என்று உடனே கிளம்பி சென்று ஆடிஷனில் கலந்துகொண்டாராம். அங்கு ரஞ்சித் கூறியது போன்றே துஷாரா நடித்து காட்டிய விதம் அவருக்கு மிகவும் பிடித்து போகவே ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இப்படி தேடிவந்த அந்த வாய்ப்புதான் ஏழு ஆண்டுகாலம் தான் காத்திருந்த காத்திருப்புக்கு கிடைக்க போகும் வெற்றி என்பது அப்போது துஷாராவுக்கு தெரிந்திருக்காது.
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ரஞ்சித் சொல்லிக்கொடுத்தது போலவே மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் அசல் கிராமத்து பெண் போன்ற தோற்றத்திலேயே நடித்திருந்த துஷாராவுக்கு இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்து நல்லதொரு அடையாளத்தை கொடுத்தது. 2021-ஆம் ஆண்டு குத்துச்சண்டை விளையாட்டை மையமாக கொண்டு வெளிவந்த இப்படத்தில், நடிகர் ஆர்யாவின் மனைவியாக நடிப்பில் மிரட்டி பா.ரஞ்சித்தின் விருப்ப நாயகியாக மாறினார். மேலும், படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த துஷாராவின் அப்பா விஜயன், இயக்குநர் ரஞ்சித்திடம் “என் மகள் இவ்வளவு நன்றாக நடிப்பால் என்று தெரிந்திருந்தால் ஆரம்பத்தில் இருந்தே நான் அவளுக்கு சப்போர்ட் பண்ணிருப்பேன்” என்று கண்கலங்க பேசிவிட்டு சென்றாராம். இப்படி தன் எதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வியக்க வைத்த துஷாராவை பார்த்து யாரெல்லாம், இதெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை என்று கேவலப்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் பதில் கொடுத்தது போன்ற உணர்வை அவருக்கு கொடுத்ததாம். இதன்பிறகு பல வாய்ப்புகள் அவரை தேடி வர, அதன்படி 2022-ஆம் ஆண்டு ‘அன்புள்ள கில்லி’ படத்தில் நாய் விரும்பியாக நடித்தார். ஆனால், அப்படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. அடுத்ததாக அதே ஆண்டில் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தில் நடித்தார். இதில் மாரியம்மா கதாபாத்திரத்திற்கு நேரெதிராக ஃபெமினிசம் பேசி கவனம் பெற்றதுடன், தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்து மற்றும் ஒரு வெற்றியை பதிவு செய்தார். இதனால் அடுத்தடுத்து அருள்நிதியுடன் ‘கழுவேத்தி மூர்க்கன்’, அர்ஜுன் தாஸுடன் ‘அநீதி’ ஆகிய படங்களில் நடித்து அப்படங்களும் ஓரளவுக்கு வெற்றிப்படங்களாக துஷாராவுக்கு அமைந்தன.
தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரம்
நடிகர் தனுஷ் இயக்கத்தில் 'ராயன்' படத்தில் நடித்துள்ள துஷாராவின் தோற்றம்
சார்பட்டா பரம்பரையில் தொடங்கிய இவரின் வெற்றி பயணம் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி நடிப்பு அசுரன் தனுஷ் வரை முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது நடிகர் தனுஷ் இரண்டாவதாக இயக்கிவரும் அவரின் 50-வது படமான ராயனில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் துஷாரா. இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்தது குறித்து பேசியிருந்த துஷாரா விஜயன் "நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் இணைந்து பணியாற்றியது என்னால் மறக்கவே முடியாது. எனது கனவு நிறைவேறிவிட்டதாக நான் உணர்கிறேன். தனுஷின் நடிப்பையும் அவர் இயக்கும் விதத்தையும் நேரில் பார்த்து அசந்து போய்விட்டேன். இயக்குநராக இருந்து நடிகராக அவர் மாறும் அந்த நொடி எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும். ‘ராயன்’ திரைப்படம் நிச்சயம் எனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேசியிருந்த அவர், தற்போது 26 வயதாகும் நான், என்னுடைய 35-வது வயதில் திரையுலகில் இருந்து முழுமையாக விலகி, இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பயணிக்க முடிவு செய்துள்ளேன். நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை உறுதி செய்யும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றும் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வேட்டையனில் கலக்க காத்திருக்கும் துஷாரா
‘ராயன்’ படத்தை தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அவரின் 171-வது படமான வேட்டையனில் நடித்து வரும் துஷாரா, இன்னொருபுறம் அருண் குமார் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்திலும் முதன்மையான நாயகியாக நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து முன்னணி நடிகையாக பலருடன் கைகோர்த்து நடித்துவரும் துஷாரா, ‘ராயன்’ படத்தில் தனுஷிற்கு தங்கையாக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவரின் இந்த படமும் மற்றொரு சார்ப்பட்டாவாக அமைந்து மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்தலாம்.