‘இதயம் முரளி’களுக்கு சமர்ப்பணம் - கொண்டாடப்படுமா ஒருதலை காதல்!

ஒரு சிறிய கிராமத்திலிருந்து திடீரென பலதரப்பட்ட மக்கள் ஒரே இடத்தில் வாழுகின்ற சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கே இருக்கும் குணங்களான கூச்ச சுபாவம், பேசவே பயப்படுதல் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற அனைத்தையும் தனது உடல்மொழி மற்றும் பாவனைகளால் அனைவரின் கவனத்தையும் கட்டி போட்டிருப்பார் முரளி.

Update:2025-03-04 00:00 IST
Click the Play button to listen to article

காலம் மாற மாற, டெக்னாலஜியும் வளர்ந்துகொண்டே போகிறது. இதனால் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் நம்மால் உலகின் எந்த மூலையிலிருக்கும் யாரையும் நினைத்த நேரத்தில் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. மனதில் உள்ள எண்ணங்களை நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் சமூக ஊடகங்களில் ஒரு போஸ்ட் அல்லது ஸ்டோரி மூலம் வெளிப்படுத்திவிட முடிகிறது. ஆனால் அப்படியே 80 மற்றும் 90களின் காலகட்டத்தை திரும்பி பார்த்தால் இதற்கு எதிர்மாறாகவே இருந்தது. நகர்ப்புறங்களில் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் கிராமங்களில் படிப்பு என்பதே பெரும் சவாலாக பார்க்கப்பட்டது. அதற்கிடையே காதல் என்றால் சொல்லவே தேவையில்லை. ஜாதி பிரச்சினை, பெற்றோர் எதிர்ப்பு மற்றும் அதனால் ஆணவக்கொலைகள் அல்லது தற்கொலைகள் போன்றவைதான் சினிமாக்களிலும் அதிகம் காட்டப்பட்டன. இதனாலேயே பெரும்பாலான இளைஞர்கள் தங்களது காதலை வெளியில் சொல்லாமலேயே ஒருதலையாகவே குழிதோண்டி புதைத்தனர். இப்படி குடும்பம், சமூகம் என்பதைத் தாண்டி தனக்கு பிடித்த ஒரு பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ காதலைச் சொல்ல பயந்து தயங்கி அதை அப்படியே விட்டுவிட்டவர்கள் ஏராளம். இதுபோன்றோரின் மனதை பிரதிபலிக்கும்விதமாக 1991ஆம் ஆண்டு வெளியானது ‘இதயம்’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் காதலை வெளியே சொல்ல தயங்கும், தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒரு கிராமத்து இளைஞனை நம் கண்முன் நிறுத்தினார் நடிகர் முரளி. அன்று முதல் இன்றுவரை பல இளைஞர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான படங்களில் ஒன்றாக இருக்கும் இத்திரைப்படம் வெளியாகி 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தனது அப்பாவின் நினைவாக ‘இதயம் முரளி’ என்ற பெயரிலேயே புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார் அதர்வா. ‘இதயம்’ முரளி vs ‘இதயம் முரளி’ ஒரு பார்வை!

இதயங்களை தொட்ட ‘இதயம்’!

சொன்னால் மட்டும்தான் காதலா! சொல்லாமல் மனதுக்குள்ளேயே பூட்டிவைப்பதும் காதல்தான் என்ற கருத்தை ஆழமாக சொன்ன திரைப்படம்தான் ‘இதயம்’. 80களின் இறுதி மற்றும் 90களில் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த முரளி மற்றும் ஹீரா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பர். படத்தின் கதை என்று பார்த்தோமானால் கிராமத்தில் பிறந்து வளர்ந்த முரளி, சென்னை மருத்துவ கல்லூரியில் சேருகிறார். அங்கு தன்னுடன் படிக்கும் ஹீரா மீது அவருக்கு காதல் ஏற்படுகிறது. ஹீராவோ சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பணக்கார வீட்டுப்பெண். அதனால் அவரிடம் தனது காதலை சொல்லவே முரளி மிகவும் பயப்படுகிறார். ஒவ்வொரு முறையும், தைரியத்தை வரவைத்துக்கொண்டு காதலை சொல்ல செல்லும்போதெல்லாம், ஏதேனும் ஒரு தடை ஏற்படுகிறது. மேலும் தனது சகோதரியின் காதலனுடன் ஹீரா பேசுவதை பார்க்கும் முரளி, அவர்கள் இருவரும் காதலிப்பதாக தவறாக புரிந்துகொள்கிறார். இதனால் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் முரளிக்கு தன்மீது காதல் இருப்பது ஹீராவுக்கு தெரியவர, அவருக்கும் பிடித்திருக்கிறது என்பதை சொல்ல முயற்சிக்கிறார். அப்போதுதான் முரளிக்கு இதய நோய் இருப்பதும், அவரால் மகிழ்ச்சி, துக்கம், அதிர்ச்சி போன்ற எந்தவொரு உணர்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதும் ஹீராவுக்கு தெரியவருகிறது. இதனால் அவரும் மனமுடைகிறார். படத்தின் கதை இது என்றாலும் ஒவ்வொரு காட்சியையும் திரையில் அழகாக செதுக்கியிருப்பார் அறிமுக இயக்குநர் கதிர்.


இதயம் திரைப்படத்தில் முரளி மற்றும் ஹீரா

காதல் அவ்வளவு சுலபமல்ல!

இப்போது காதலை சொல்வதும், மனங்கள் ஒத்துப்போகவில்லை என்றால் உடனே பிரிந்துவிடுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. மேலும் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு பல பெற்றோர்கள் வந்துவிட்டனர். ஆனால் 90களின் காலகட்டம் அப்படியல்ல. பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதல் தலைமுறையினர் உருவாகிக்கொண்டிருந்த சமயம் என்பதால், மேற்படிப்பை ஊக்குவிக்க பெற்றோர்கள் தயங்கக்கூடாது என்பதற்காகவே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென்று தனித்தனியாக கல்லூரிகள் செயல்பட்டன. அதனாலேயே அப்போதைய காதல்கள் பேருந்து காதல்களாகவே இருந்தன. அப்படியே காதலித்தாலும் அவை திருமணத்தில் முடிவது என்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இப்படியிருக்கையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில்தான் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்க முடிந்தது. அந்த கல்லூரிகளில் பெரிய இடத்து பெண்ணை காதலிப்பதை தாண்டி, அவரிடம் சொல்லவே எத்தனை தயக்கங்கள் இருந்தன என்பதை ‘இதயம்’ படம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியதுதான் அப்போது அந்த படம் கொண்டாடப்பட முக்கிய காரணம். ஒரு சிறிய கிராமத்திலிருந்து திடீரென பலதரப்பட்ட மக்கள் ஒரே இடத்தில் வாழுகின்ற சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கே இருக்கும் குணங்களான கூச்ச சுபாவம், பேசவே பயப்படுதல் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற அனைத்தையும் தனது உடல்மொழி மற்றும் பாவனைகளால் அனைவரின் கவனத்தையும் கட்டி போட்டிருப்பார் முரளி. இதனால் ஒவ்வொரு இளைஞரும் தன்னை முரளியின் இடத்தில் வைத்து பார்த்தனர். கல்லூரி கால காதல் என்றாலே அழகானதுதான். அதிலும் வெளியே சொல்லாத காதல் என்றால் சொல்லவா வேண்டும்?


ஒருதலை காதலர்களின் மனதை என்றும் ஆக்கிரமித்திருக்கும் இதயம் பட பாடல்கள்

நெஞ்சில் நின்ற காதல் வரிகள்!

என்னதான் காதல் படங்கள் காலங்காலமாக கொண்டாடப்பட்டாலும் ஸ்டீரியோடைப்பை உடைக்க எடுக்கப்படும் ஒவ்வொரு கதையும் திரையில் மக்கள்முன் வருவதற்கு முன்பு பல்வேறு சவால்களை சந்திக்கவேண்டி இருக்கும். ‘இதயம்’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல; இயக்குநர் அவதாரம் எடுக்க நினைக்கும் பலரும் தன்னுடைய கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்வார்கள். அப்படி கதிரும் தனது கதையை பலரிடம் சொல்லியபோது, சேராத காதலுக்கு மக்கள் வரவேற்பு கொடுக்கமாட்டார்கள் எனக் கூறி படத்தை தயாரிக்க மறுத்துவிட்டனர். ஒருவழியாக, சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டது. ஒரு வழியாக படத்தின் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்றது. இப்போதெல்லாம், நிறைய தயாரிப்பாளர்களே விநியோகஸ்தர்களாகவும் செயல்படுவதால் ஒரு படத்தை திரைக்கு கொண்டுவந்து மக்களின் விமர்சனங்களை பெறுவது சற்று சுலபமாகிவிட்டது. ஆனால் முன்பெல்லாம் அப்படியில்லை. ஒரு படம் முடிந்தபிறகு, அதை விநியோகஸ்தர்களுக்கு போட்டுக்காட்ட வேண்டும். அவர்களுக்கு பிடித்து வாங்கினால்தான் படம் தியேட்டர்களுக்கே போகும். அப்படி ‘இதயம்’ படத்தை பார்த்த பல விநியோகஸ்தர்கள் கதை பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், சொல்லப்படாத காதலை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று வாங்க மறுத்துள்ளனர். இந்த படத்தில் அப்போது பிரபலமாக இருந்த முரளி ஹீரோவாக நடித்ததாலும், இளையராஜா இசையமைத்திருந்ததாலுமே படத்தை வாங்க ஒத்துக்கொண்டுள்ளனர். இப்படி ஒருவழியாக தியேட்டருக்கு சென்ற ‘இதய’த்திற்கு மக்கள் மத்தியில் யாரும் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொருவருக்குமே ஒரு கட்டத்தில் யார்மீதாவது காதல் கட்டாயம் வந்திருக்கும். ஆனால் குடும்பம், சமூகம் மற்றும் பொருளாதாரம் போன்றவற்றை மனதில் வைத்து, காதலை வெளியே சொன்னவர்களைவிட சொல்லாமல் தங்களுக்குள்ளேயே மூடி வைத்துக்கொண்டவர்களே இங்கு அதிகம் என்பதால் ஒவ்வொருவரும் தங்களை முரளியாக நினைத்து படத்தை கொண்டாடித்தீர்த்தனர். அந்த படம் 90களைத் தாண்டி 2000களிலும் மக்களின் விருப்பப்படங்களில் ஒன்றாகவே மாறியது. அதனாலேயே இன்றும் காதலை சொல்ல தயங்கும், மறுக்கும் இளைஞர்களை ‘இதயம் முரளி’ என்றே அழைக்கின்றனர். குறிப்பாக, இந்த படத்தில் வாலி மற்றும் பிறைசூடனின் வரிகளில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்!


‘இதயம் முரளி’ என்ற பெயரிலேயே படம் நடிக்கும் அதர்வா

‘இதயம் முரளி’யின் மீதான எதிர்பார்ப்பு!

‘இதயம்’ படத்தின் மவுசே இன்றும் குறையாத நிலையில், படத்தின் நாயகனான முரளியின் மகன் அதர்வா ‘இதயம் முரளி’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார். ஏற்கனவே, என் அப்பா நடிப்பில் எனக்கு இதயம் படம் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்த அதர்வா, தற்போது மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட ‘இதயம் முரளி’ என்ற பெயரிலேயே நடிக்கிறார். ஒரு ஆணின் பார்வையில் காதல் எப்படி? என்பதை மையமாகக் கொண்ட ‘இதயம்’ போன்றே ‘இதயம் முரளி’யும் இருக்குமா? அல்லது இந்த காலத்து இளைஞர்களின் காதலை பிரதிபலிக்கும் கதையா? அல்லது இந்த காலத்திலும் அதுபோன்ற இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்லும் கதையா என்ற எதிர்பார்ப்பானது இந்த படத்தின்மீது மிகவும் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் டீஸர் விழாவில் கலந்துகொண்ட அதர்வா படம் குறித்து பேசியபோது, “உண்மையை சொல்லவேண்டுமானால் இரண்டுபக்க காதலைவிட ஒருதலை காதலில் இருக்கும் மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம் போன்றவற்றை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. அதையெல்லாம் சேர்த்து ஒரு படம் கொடுக்கவேண்டுமென நினைத்தோம். ‘இதயம் முரளி’ என்ற தலைப்பை என் அப்பாவுக்காக வைக்கவில்லை. எனக்குள் ஒரு ஒருதலை காதல்கொண்ட இதயம் முரளி இருக்கிறான். அதேபோல் உங்கள் எல்லாருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான் என்று எனக்கு தெரியும். லைலா - மஜ்னு, ரோமியோ - ஜூலியட்டை தாண்டி நமது ஊரில் ஒருதலை காதலுக்கு அங்கீகாரம் என்றால் அது ‘இதயம் முரளி’ தானே! அந்த விதத்தில் இந்த படத்தை பண்ணியது ரொம்ப சந்தோஷம். இந்த படத்தை எல்லா ஒருதலை காதலர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த படத்தில் அதர்வா உட்பட முக்கிய கதாபாத்திரங்கள் பலரும் 80ஸ் கெட்டப்பில் இருப்பதால் இந்த கதையும் 80களின் காதலுடன் ஒத்திருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நாடராஜன், இசையமைப்பாளர் தமன் மற்றும் நிஹாரிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் முதல் படம் இது என்பதால் இயக்குநர் கதிருக்கு கிடைத்த அறிமுகம் போன்றே ஆகாஷுக்கும் இருக்குமா என்பதை படம் வெளியாகும்வரை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்