‘ஜெயிலர்’ ரஜினிக்கு நிகராக டிரெண்ட் ஆன சிவராஜ்குமார் பற்றித் தெரியுமா?
படத்தில் இரண்டே காட்சிகளில்தான் சிவராஜ்குமார் தோன்றி இருந்தாலும், கன்னட சினிமாவிற்கு நிகராக ஏகோபித்த வரவேற்பு தமிழ் மக்களிடமிருந்தும் அவருக்குக் கிடைத்துள்ளது.
சிவாண்ணா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவராஜ்குமார்: கன்னட திரையுலகில் மந்திரம் போல் உச்சரிக்கபடும் ஒரு பெயர்.... 40 ஆண்டுகளாக யாருமே அசைத்து பார்த்திட முடியாத மாபெரும் ஜாம்பவான்... இன்றுவரை தொடர் வெற்றிகளை மட்டுமே பார்த்துவரும் கதாநாயகன்... கன்னட சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை தன் கட்டுக்குள் பல ஆண்டுகளாக வைத்திருப்பவர்... இப்படி பல சாதனைகளுக்குச் சொந்தகாரரான சிவராஜ்குமார், பெரிதாக வசனமே பேசாமல் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே `ஜெயிலர்’ திரைப்படத்தில் தோன்றி, தற்போது சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி பேசப்பட்டு வருகிறார். யார் இந்த சிவராஜ்குமார்... அவரின் பின்னணி என்ன...? கன்னட திரையுலகில் மட்டுமே சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வந்தவரை இன்று தமிழ் திரையுலகமும் உச்சத்தில் வைத்து கொண்டாட காரணம் என்ன? இதோ…சில சுவாரஸ்யமான தகவல்கள்…
கன்னட மக்களுக்கு மகத்தான சேவை செய்து, அவர்களின் இதயங்களில் என்றென்றும் ராஜாவாக, கடவுளாக இன்றும் வாழ்ந்துவரும் மாபெரும் கலைஞரான டாக்டர் ராஜ்குமார் - பர்வதம்மா தம்பதியருக்கு மூத்த மகனாக 1962 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர்தான் இந்த சிவராஜ்குமார். நாகராஜு சிவா புட்டசுவாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சென்னை தியாகராய நகரில் பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் தந்தை வழியில் சினிமாவில் பயணிக்க முடிவு செய்தார்.
தந்தை ராஜ்குமார், தாய் பர்வத்தம்மாள் உடன் சிவராஜ்குமார், ராகவேந்தர் மற்றும் புனீத் ராஜ்குமார்
சிவராஜ்குமாருக்கு சினிமா ஆர்வம் எங்கிருந்து தொடங்கியது?
அன்றைய சென்னை மாகாணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி சினிமாக்களையும் உருவாக்கும் மையப் புள்ளியாக இருந்தது. ஏவிஎம், ஜெமினி என்று மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களின் ஸ்டுடியோக்கள் எல்லாம் சென்னையில் இருந்ததால் அனைத்து மொழி பேசும் நடிகர்களும் வந்து போகும் இடமாக இருந்தது. இதனால் தனது தந்தையான நடிகர் ராஜ்குமாரோடு சேர்ந்து அவ்வப்போது அந்த ஸ்டுடியோக்களுக்கு சென்று வந்தவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா ஆர்வம் துளிர் விட ஆரம்பித்தது. அங்கு அவர் சந்திக்காத திரை நட்சத்திரங்களே இல்லை. அதனால் நாமும் அவர்களைப் போலவே திரையுலகில் வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டார் சிவராஜ்குமார். அதுதவிர, படிக்கும் காலங்களில் கல்லூரி வகுப்புகளை கட்டடித்துவிட்டு நண்பர்களோடு சேர்ந்து ரஜினி, கமல் படங்களை, அவை தியேட்டரில் வெளியான முதல் நாளே சென்று பார்த்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் அவரை அறியாமலேயே அவர்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. 1974-ஆம் ஆண்டே தனது தந்தையின் படமான `ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இவர் நடித்திருந்தாலும், அதற்குப் பிறகு திரையில் முகம் காட்டாமல், தந்தையின் அறிவுறுத்தலின்படி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்துள்ளார். பிறகு குறிப்பிட்ட வயதில் சினிமாவில் நுழைய வேண்டும் என முடிவெடுத்தவருக்கு, சினிமாவில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
இயக்குனர் சிகரத்தின் அட்வைஸ்
அந்த நேரம் தந்தை ராஜ்குமாரின் மூலம் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரை சந்திக்கும் வாய்ப்பு சிவராஜ்குமாருக்கு கிடைத்தது. பாலச்சந்தரின் ஆலோசனைப்படி சென்னை அடையாரில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பு கலைகளை கற்றுக்கொண்டு திரை உலகிற்குள் நுழைந்தார் சிவராஜ்குமார். இதற்கிடையில் படிப்போடு சேர்த்து பரதம், குச்சிப்புடி, வெஸ்டர்ன் போன்ற அனைத்து வகையான நடனங்களையும், பியானோ, கிடார் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கவும் பயிற்சி எடுத்துக்கொண்டார். இதன் மூலம் ஒரு ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் வளர்த்துக் கொண்டார். ஒரு பெரிய நடிகரின் மகன் என்கிற கர்வம் துளியும் இல்லாமல் முழு ஈடுபாட்டோடும், தந்தையின் அனுமதியுடனும் திரையுலகில் நுழைந்தவர், 1986-ஆம் ஆண்டு தனது அம்மா பர்வதம்மாளின் தயாரிப்பில், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ‘ஆனந்த்’ என்கிற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாயகனாக அறிமுகம் ஆனார். படம் வெளியாகி 38 வாரங்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றியடைந்ததது. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் பெற்றார்.
சிவராஜ்குமார் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தர்
‘ஹாட்ரிக்’ வெற்றி! ‘ஹாட்ரிக்’ ஹீரோ!
‘ஆனந்த்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால் கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடாது; கதைகளை சரியாகத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் அப்போதே தெளிவாக இருந்த சிவராஜ்குமார் ‘ஆனந்த்’ படம் வெளியான அதே ஆண்டில் ‘ரத சப்தமி’ என்கிற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். காதல் காவியமாக உருவாக்கப்பட்ட இப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமின்றி, படத்தின் இடைவேளையில் வரும் சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும், இரண்டாம் பாகத்தில் நடக்கக்கூடிய விறுவிறுப்பான கதை போக்கிற்காகவும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இப்படத்தில் இணை கதாசிரியராக இயக்குனர் பி.வாசு பணியாற்றியதால், இதே கதையை தமிழில் பிரபுதேவா - நக்மாவை வைத்து ‘லவ் பேர்ட்ஸ்’ என்ற பெயரில் எடுத்தார். 1996-ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், பி.வாசுவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இங்கும் சூப்பர் ஹிட் ஆனது.
‘ரத சப்தமி’ மற்றும் ‘லவ் பேர்ட்ஸ்’ திரைப்படக் காட்சிகள்
அதற்கடுத்து, 1987-ஆம் ஆண்டு எம்.எஸ்.ராஜசேகர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ‘மனமெச்சிட ஹுடுகி’ திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. முதல் படம் தொடங்கி அடுத்தடுத்து வெளிவந்த படங்களும் சிவராஜ்குமாருக்கு வெற்றிப்படங்களாகவே இருந்ததால் தொடர் வெற்றிகளை பதிவு செய்த முதல் கன்னட ஹீரோ என்ற பெருமையையும் பெற்றார். இதனால் ‘ஹாட்ரிக்’ கதாநாயகன் என்ற அடைமொழியோடும், மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தோடும் வலம் வர ஆரம்பித்த சிவராஜ்குமார், நடிப்போடு சேர்த்து 1988-ஆம் ஆண்டு சோமசேகர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ‘ரணரங்க’ என்ற படத்தில் "ஓ மேகவே" என்ற பாடல் மூலம் பின்னணி பாடகராகவும் அறிமுகமாகி கன்னட ரசிகர்களின் மனங்களில் நீங்க இடம் பிடித்தார். இப்படி நடிப்பு, பாட்டு என்று ஆரம்பித்த இவரது சினிமா பயணம் மேலும் மேலும் வளர்ந்து புகழின் உச்சிக்கு அவரை கொண்டு சென்றது. இதனால் கன்னட ரசிகர்கள் அனைவரும் 'சிவாண்ணா' என்று அன்போடு அவரை மனம் உருகி அழைக்கத் தொடங்கினர்.
‘கேஜிஎப்’ படத்திற்கு முன்னோடி
முதல் மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து ‘சம்யுக்த’, ‘ரணரங்க’, ‘இன்ஸ்பெக்டர் விக்ரம்’, ‘அதே ராக அதே ஹாடு’, ‘புருஷோத்தமா’, ‘முத்தண்ணா’, ‘ஓம்’ போன்ற பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதில் கே.என்.சந்திரசேகர் சர்மா என்பவரது இயக்கத்தில், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் திரைக்கதை மற்றும் இசையில் 1988-ஆம் ஆண்டு ககோலு சரோஜா ராவின் நாவலைத் தழுவி திரில்லர் படமாக வெளிவந்த 'சம்யுக்தா' திரைப்படம் மேலும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்படி அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து பர்வதம்மாள் தயாரிப்பில், கன்னட நடிகரும், இயக்குனருமான உபேந்திரா இயக்கத்தில் 1995-ஆம் ஆண்டு வெளிவந்த `ஓம்’ திரைப்படம் சிவராஜ்குமார் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக மாறிப்போனது. இன்றைய 2கே கிட்ஸ்களை பொறுத்தவரை கன்னட மொழியில் இருந்து ஒரு படம் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக மாறிய திரைப்படம் என்றால் அது நடிகர் யாஷ் நடித்த `கேஜிஎப்’ படம் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்னோடியாக 1995-லேயே வெளிவந்த சிவராஜ்குமாரின் ‘ஓம்’ திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் என்று இன்றைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று வெளியாகும் கேங்ஸ்டர் படங்களுக்கெல்லாம் முன்னோடியான இப்படம் அன்றே இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக் குவித்தது. இதுதவிர, இப்படம் பலமுறை ரீரிலீஸ் செய்யப்பட்டு இன்றுவரை கன்னட ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.
‘ஓம்’ திரைப்பட போஸ்டர்
பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல மனசுலயும் ‘கிங்’!
'ஓம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சமரா’, ‘சிவசைன்யா’, ‘ஆதித்யா’, ‘சிம்ஹதா மரி’, ‘ஏகே 47’, ‘பஜ்ரங்கி’, ‘ஆர்யன்’, ‘மப்டி’, ‘தகரு’, ‘துரோணா’, ‘பஜ்ரங்கி 2’ என்று இன்றுவரை தொடர் வெற்றிகளால் கன்னட திரையுலக பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வந்து கொண்டிருக்கும் சிவராஜ்குமார், தந்தையைப் போலவே ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனம் கொண்டவர். சத்தியமங்கலம் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்தை தனது தந்தையின் நினைவாகத் தத்தெடுத்து பராமரித்து வரும் சிவராஜ்குமார், இன்றளவும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேபோல் தனது ரசிகர்களிடத்திலும் மிகுந்த அன்புகாட்டி வரும் சிவராஜ்குமார், அவர்களை எங்கு சந்தித்தாலும் உடனே காரை விட்டு இறங்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்புதான் அங்கிருந்தே கிளம்பிச் செல்வாராம். இந்த நல்ல குணமே இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதோடு, இவரது பல படங்கள் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பலதரப்பட்ட மக்களும் இவரை அடையாளம் காணக்கூடிய நடிகராக மாற்றியது. அந்த வரிசையில், சிவராஜ்குமார் நடித்து 2017-ஆம் ஆண்டு வெளிவந்து கன்னட திரையுலகில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய ‘மப்டி’ திரைப்படத்தைதான் அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து `பத்து தல’ என்ற பெயரில் தமிழில் எடுத்தனர். இப்படி இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் ரீமெக் செய்யப்பட்டு வரும் நிலையில், சிவராஜ்குமார் தான் நடித்த பெரும்பாலான படங்களை தனது சொந்த தயாரிப்பிலேயே எடுத்து அவற்றிலும் வெற்றி கண்டுள்ளார்.
கமல் மீது வைத்திருந்த வெறித்தனமான அன்பு
தன்னை எப்போதும் `கோடம்பாக்கத்து பையன்’ என்று பெருமையாக கூறிக்கொள்ளும் சிவராஜ்குமார், தனது பெரும்பாலான இளமைக் காலங்களை சென்னையிலேயே கழித்துள்ளார். கமலின் தீவிர ரசிகர் என்பதை அவர் ஒருபோதும் தனது பேட்டிகளில் சொல்ல மறந்ததில்லை. கல்லூரியில் படிக்கும் காலங்களில் கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களையும் ஒன்றுவிடாமல் முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து விடுவாராம். அந்தப் பழக்கத்தை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதோடு, கமல் படம் வெளியாகிறது என்றாலே கர்நாடகாவில் இருந்து கமலின் சென்னை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, `நாங்கள் ராஜ்குமார் குடும்பத்தில் இருந்து பேசுகிறோம். எங்களுக்கு முதல் காட்சிக்கான டிக்கெட் வேண்டும்’ என்று கேட்டு வாங்கி படத்திற்கு செல்வார்களாம். அந்த அளவிற்கு கமலின் தீவிர ரசிகராக இருக்கிறார் சிவராஜ்குமார். ஒருமுறை கமல், ராஜ்குமார் உயிரோடு இருந்த போது அவர்களது வீட்டிற்குச் சென்றிருந்தாராம். அப்போது கமலை வைத்த கண் வாங்காமல் சிவராஜ்குமார் ரசித்துக் கொண்டிருந்தாராம். உடனே ராஜ்குமார், சிவராஜ்குமாரை அழைத்து, `எனது மூத்த மகன்’ என்று அறிமுகப்படுத்த, கமல் அவரை அன்போடு கட்டித் தழுவி நலம் விசாரித்தாராம். இந்த நிகழ்வு குறித்து அண்மைகால பேட்டிகளில் சிவராஜ்குமார் குறிப்பிடும்போது, கமல் தன்னை கட்டிப்பிடித்து விட்டார் என்பதற்காக 3 நாட்கள் தான் குளிக்காமலேயே இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் உடன் சிவராஜ்குமார்
ரஜினிக்கு நிகராக ட்ரெண்டிங் ஆனது எப்படி?
இப்படி கன்னட திரையுலகிலேயே ஒரு சூப்பர் ஹீரோவாக பயணித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் கவுரவ தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவராஜ்குமாருக்கு கிடைத்தது. தமிழ்நாட்டில் தனது படத்தின் ஷூட்டிங் ஒன்றிற்காக வருகை தந்திருந்த சமயத்தில், தனது படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே, தளபதி விஜய் நடித்துக் கொண்டிருந்த `பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங்கும் நடந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட சிவராஜ்குமார், மரியாதை நிமித்தமாக விஜய்யை பார்க்க சென்றுள்ளார். அங்கு சிவராஜ்குமாரை பார்த்த இயக்குனர் நெல்சனுக்கு அவரின் மேனரிசங்கள் மிகவும் பிடித்துப்போனதாம். உடனே சிவராஜ்குமாரின் படங்களை தேடிப் பார்த்தவர், தனது `ஜெயிலர்’ பட கேரக்டருக்கு சரியானவராக இவர் இருப்பார் என்று முடிவு செய்தாராம். உடனே சிவராஜ்குமாரை நேரில் சந்தித்து, "10 முதல் 15 நிமிட அளவிலான காட்சிதான். ஆனால் மாஸாக இருக்கும். உங்களுக்கு நடிக்க விருப்பமா?" என்று கேட்க, அவரும் நடிக்க சம்மதித்தாராம். படத்தில் இரண்டே காட்சிகளில்தான் சிவராஜ்குமார் தோன்றி இருந்தாலும், கன்னட சினிமாவிற்கு நிகராக ஏகோபித்த வரவேற்பு தமிழ் மக்களிடமிருந்தும் அவருக்குக் கிடைத்துள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியான ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரஜினியின் மருமகளை காப்பாற்ற வரும் காட்சியில், ரஜினிகாந்த் வில்லனிடம் "அங்க 3-வதா ஒருத்தன் இருக்கான் பாரு" என்று கூறும்போது, சிவராஜ்குமாரின் என்ட்ரி காட்சிகளில் திரையரங்கமே கைதட்டி ஆரவாரித்தது. டைகர் ஹூக்கும் பாடல் வரிகளுடன் சிவராஜ்குமார் வரும் அந்தக் காட்சியை பார்த்த ரசிகர்கள் உணர்ச்சி மேலீட்டில் ஆரவாரித்தனர்.
‘ஜெயிலர்’ திரைப்படத்தில்
`ஜெயிலர்’ படத்தின் மூலம் தமிழ்நாட்டில் தனக்கு கிடைத்த செல்வாக்கு மற்றும் ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பை பார்த்து சிவராஜ்குமார் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதோடு, தற்போது நடிகர் தனுஷின் `கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் மிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறாராம்.
ನಿಮ್ಮೆಲ್ಲರ ಪ್ರೀತಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು. Thank you for the love on #Jailer & Narasimha. In Cinemas near you@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @sunpictures @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi pic.twitter.com/SJ1zxgRlJq
— DrShivaRajkumar (@NimmaShivanna) August 11, 2023
கன்னட உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் தமிழ்நாட்டில் அந்தளவு பரிச்சயமில்லாத நடிகர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்டவரை இன்று தமிழ் திரையுலகம் கொண்டாடித் தீர்க்கிறது என்றால் அது சாதாரணமாக நிகழ்ந்து விடவில்லை. அவருடைய உழைப்பிற்கும், தனித்துவமான நடிப்புத் திறனுக்கும், மொழியைக் கடந்து கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்க வேண்டும். `ஜெயிலர்’ படத்தில் தொடங்கியுள்ள இவரது வெற்றிப்பயணம், `கேப்டன் மில்லர்’ படத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் `சிவாண்ணா’வை ஒரு சகோதரனாக... தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்தே கொண்டாடி வருகின்றனர்.