தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகைகளின் பங்களிப்பு குறைகிறதா?

எஸ்.என். லட்சுமி, எஸ்.என்.பார்வதி போன்ற சில நடிகைகள் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் அவர்கள் குணச்சித்திர நடிகையாகத்தான் பெரிதும் அறியப்படுகிறார்கள்.

Update:2023-08-08 00:00 IST
Click the Play button to listen to article

திரைப்படங்களில் கதை, திரைக்கதை நன்றாக இருந்தாலும் கூடுதலாக நகைச்சுவை இருக்கும்போது பார்வையாளர்களை அந்தப் படம் அதிகளவில் ஈர்க்கும். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் நாம் நகைச்சுவை காட்சிகளை சிலாகித்துப் பேசும்போது, கவுண்டமணி-செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் ஆகிய நடிகர்களின் நகைச்சுவைகளை தான் பேசுகிறோமே தவிர நகைச்சுவை நடிகைகளை நாம் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை. இதில் மனோரமா, கோவை சரளா விதிவிலக்கு என்றாலும், கருப்பு-வெள்ளை காலந்தொட்டே தடைகளை தாண்டி நகைச்சுவை கதாபாத்திரங்களில் பெண்கள் முத்திரைப் பதித்திருக்கிறார்கள். அப்படி நகைச்சுவையில் சாதித்தப் பெண்களைப் பார்ப்போம்.

டி.ஏ.மதுரம்

என்.எஸ்.கே. என்று சொன்னவுடனே டி.ஏ.மதுரம் நினைவுக்கு வந்து விடுவார். என்.எஸ்.கே.-டி.ஏ.மதுரம் ஜோடி, ஏறத்தாழ 120 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். நகைச்சுவை ஜோடியாக திரையுலகில் கடைசிவரை நீடித்தது இவர்கள் மட்டும்தான். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இவர்கள் ஜோடிதான். தமது இரண்டாவது படத்தில் (வசந்தசேனா) தன்னுடன் ஜோடியாக நடித்த என்.எஸ்.கிருஷ்ணனை காதலித்து மணந்து கொண்டார் டி.ஏ.மதுரம். இவர்கள் நகைச்சுவை சிரிக்க வைத்தது மட்டுமின்றி சிந்திக்கவும் தூண்டியது. தமிழ்த்திரையில் நகைச்சுவைக்கு தனி டிராக் என்ற பாணியை உருவாக்கியது இந்த ஜோடி என்றால் மிகையாகாது. நல்ல தம்பி படத்தில் வரும் ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி’ பாடலில் ‘பள்ளிக்கூடத்துக்கு பிள்ளைங்க போகாம படிக்க ஒரு கருவி வேணும்’ என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் டி.ஏ.மதுரம் கேட்டிருப்பார். இது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை அன்றே டி.ஏ.மதுரம் தொலைநோக்கு சிந்தனையுடன் சிந்தித்ததை நமக்கு சான்றாக காட்டுகிறது.


என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் எம்.ஜி.ஆர். உடன் டி.ஏ.மதுரம்

அங்கமுத்து

அதேபோன்று கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து கலர் படம் வரை ஏறத்தாழ ஐம்பதாண்டு காலம் நகைச்சுவைப் பாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தவர் அங்கமுத்து. நாகப்பட்டினத்தை பூர்விகமாக கொண்ட அங்கமுத்து சிறு வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். பாகவதர் காலம் முதல் நடிப்புலகில் மூன்று தலைமுறைகளைக் கண்டவர் அங்கமுத்து. பருத்த உடலமைப்பு கொண்ட இவர், ஒய்யாரமாக கைவீசி நடந்து செல்லும் மேனரிசத்தை பல படங்களில் கையாண்டிருப்பார். பின்னாளில் நடிகை காந்திமதி கூட இந்த மேனரிசத்தைப் பின்பற்றினார்.


அங்கமுத்து

டி.பி.முத்துலட்சுமி

`சந்திரலேகா’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் பிரமாண்ட முரசு நடனக் காட்சியில், குழுவில் ஒருவராக நடனமாடி திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்தவர் டி.பி.முத்துலட்சுமி. தமிழ்த் திரையுலகில் 1948 முதல் 1974 வரை ஏறத்தாழ 350 படங்களுக்கு மேல் நடித்த முன்னோடி நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர் டி.பி.முத்துலட்சுமி. 1950-1960 காலகட்டங்களில் இவர் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் எல்லோருடனும் நடித்திருக்கிறார். குறிப்பாக, கே.ஆர்.ராமசாமி, ஏ.கருணாநிதி, ‘டணால்’ கே.ஏ. தங்கவேல், நாகேஷ் உடன் இவர் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் மிகவும் பிரபலம். அறிவாளி திரைப்படத்தில் கே.ஏ. தங்கவேலு மனைவியாக இவர் நடித்த ‘பூரி சுடத் தெரியுமா’ காமெடி இன்றைய காலத்துக்கும் பொருந்தும் நகைச்சுவை.


டி.பி.முத்துலட்சுமி

எம்.சரோஜா

டி.பி.முத்துலட்சுமி நகைச்சுவை நடிகையாக இருந்த அதே காலக்கட்டத்தில் பிரபலமாக இருந்த மற்றொரு நகைச்சுவை நடிகை எம்.சரோஜா. இவருடைய ‘கல்யாணப் பரிசு’ திரைப்படத்தின் ‘மன்னார் அன் கம்பெனி’ நகைச்சுவை இன்றைக்கும் ரசிக்கும்படியான காமெடி. இவரும் கிட்டத்தட்ட 300 படங்கள் வரை நடித்திருக்கிறார். `கல்யாணப் பரிசு’ படத்துக்குப் பிறகு அவருடன் நடித்த கே.ஏ.தங்கவேலுவை திருமணம் செய்து கொண்டார் எம்.சரோஜா. அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், தில்லானா மோகனாம்பாள் ஆகிய திரைப்படங்களை இவருடைய நகைச்சுவை நடிப்புக்கு உதாரணங்களாக சொல்லலாம்.


எம்.சரோஜா

அதற்கு பிந்தையக் காலத்தில் ஆயிரத்தில் ஒருவன், எங்கள் வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தவர் மாதவி. பட்டணத்தில் பூதம், அவசரக் கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, நவாப் நாற்காலி போன்ற திரைப்படங்களால் பெரிதும் அறியப்பட்ட ரமாபிரபா நகைச்சுவை நடிகையாக சோபித்திருந்தாலும் பின்னர் குணச்சித்திர நடிகையாகத்தான் பார்க்கப்பட்டார். அவரைப் போன்றே எஸ்.என். லட்சுமி, எஸ்.என்.பார்வதி போன்ற சில நடிகைகள் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும் அவர்கள் குணச்சித்திர நடிகையாகத்தான் பெரிதும் அறியப்படுகிறார்கள்.

மனோரமா

கதாநாயகியாக அறிமுகமாகி நகைச்சுவை நாயகியாக தமிழ் திரையுலகில் கோலோச்சியவர் மனோரமா. ஐந்து தலைமுறையாக திரையில் சாதித்த மனோரமா, சுமார் 1500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் பலதரப்பட்ட குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். இருந்தபோதும் ரசிகர்களின் மனதில் மனோரமா எப்போதும் நகைச்சுவை நடிகையாகதான் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். வட்டார மொழியில் சரளமாக பேசி அசத்துவார் மனோரமா. சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ‘கம்முனா கம்மு கம்னாட்டி கோ...’, ‘கம்முனு கிட’ வசனங்கள் இன்றளவிலும் மனதில் நிற்கும் வசனங்கள். பொம்மலாட்டம் படத்தில் அவர் பாடிய “வா வாத்யாரே ஊட்டாண்ட நீ வராங்காட்டி நா உடமாட்டேன்” பாடல் அவருடைய சென்னைத் தமிழுக்கு சான்று. அதேபோன்று எத்தனைப் பக்கம் வசனமாயிருந்தாலும் அதை அநாயசமாக உணர்வு பொங்கப் பேசி நடிப்பவர் மனோரமா.


மனோரமா

மனோரமா போன்றே கதாநாயகியாக அறிமுகமாகி நகைச்சுவை நடிகையானவர் சச்சு. கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்த ஊர்வசி, கல்பனா போன்றவர்களும் கூட நகைச்சுவைப் பாத்திரத்தில் அசத்தியுள்ளனர்.

‘`மலையாளத்தின் மனோரமா’ என அழைக்கப்பட்டவர் நடிகை சுகுமாரி. இவர் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நிறைய நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். இவருடைய கணீர் குரலும், தெளிவான உச்சரிப்பும் நம் காதில் ரீங்காரமாக ஒலிக்கும்.

கோவை சரளா

கொஞ்சும் கொங்குத் தமிழால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் கோவை சரளா. மனோரமாவுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பியர் சரளாதான். முதலில் பற்பல வேடங்களில் நடித்தவர், `ஜப்பானில் கல்யாணராமன்’ படத்திலிருந்து முழு நகைச்சுவை நடிகையானார். வைதேகி காத்திருந்தாள், கரகாட்டகாரன் படத்தில் கோவை சரளாவின் காமெடிகள் இன்றளவும் பிரபலம். ‘தஞ்சாவூர் பார்டியிலே கூப்டாக’, ‘காரைக்குடி பார்டியிலே கூப்டாக’, ‘அங்கயெல்லாம் போகாம எங்கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்..’ (கரகாட்டக்காரன்), ‘துரை இங்கிலீஸ் எல்லாம் பேசுது’ (ஷாஜகான்), ‘ராகவா..’ (காஞ்சனா) ஆகிய வசனங்கள் கோவை சரளாவின் பாணியில் அசத்தலானவை. கவுண்டமணி-செந்தில்-கோவை சரளா கூட்டணி 80-90 காலகட்டங்களில் பெரும்பாலான தமிழ்ப் படங்களை ஆக்ரமித்திருந்தது. விவேக், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களுடன் மட்டுமின்றி முன்னணி நடிகரான கமல்ஹாசனுடனும் கூட்டணி அமைத்தவர் கோவை சரளா. சதிலீலாவதி திரைப்படத்தில் இருவரது கூட்டணியும் பெரிதும் பேசப்பட்டன.


கோவை சரளா

வெற்றிடம்!

லலிதகுமாரி, ஷர்மிலி, விசித்ரா, ஆர்த்தி, வித்யுலேகா, மதுமிதா என நகைச்சுவை நடிகைகளின் பட்டியல் பெரியதாக இருந்தாலும்கூட மனோரமா, கோவை சரளாவுக்கு அடுத்து பெரும்பாலானோர் நகைச்சுவையில் பெரிதாக சோபிக்கவில்லை. சிலர் ஓரிரண்டு படங்களில் மட்டுமே நகைச்சுவை காட்டிவிட்டு பிறகு காணாமல் போய்விட்டனர். மொத்தத்தில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகைகளின் இடம் இப்போது காலியாகவே உள்ளது. நகைச்சுவைக்கு பஞ்சமா அல்லது நகைச்சுவையில் நடிகைகளுக்கு பஞ்சமா எனத் தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்