சர்ச்சையை துரத்தும் இசைஞானி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்! - சினிமா சுவாரஸ்யங்கள்
பாடலை உருவாக்கிய இளையராஜாவுக்குத்தான் பதிப்புரிமை இருப்பதாகவும், அவரிடம் முறையாக உரிமை பெறாததால் இழப்பீடு வழங்கவேண்டும், இல்லாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருக்கிறது.
சினிமாவையும் சுவாரஸ்யத்தையும் பிரித்து பார்க்க முடியாது. தினந்தோறும் புதுப்புது படங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் என்று ஏதாவது ஒன்று ட்ரெண்டிங்கில் இருக்கும். இதனால்தான் சினிமாவை தனி உலகமாகவே பார்க்கின்றனர். அத்தகைய சினிமா உலகில் இந்த வாரம் என்னவெல்லாம் பேசப்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.
அஜித்துடன் 5வது முறை ஜோடி?
அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் கமிட்டாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. விஜய் படத்தில் குத்து பாடலுக்கு ஆடமறுத்த தெலுங்கு நாயகி ஸ்ரீலீலா இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் இப்படத்தை இயக்குவதால் இப்படம் அவருக்கு ஒரு ஃபேன் பாய் மொமண்ட் என கூறப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் இணையும் நயன்தாரா
அதனாலேயே இப்படத்தில் நயன்தாராவையும் இறக்கியிருக்கிறார்களாம். இதனால் அஜித்துடன் ஐந்தாவது முறை ஜோடி சேர்கிறார் நயன். ஆனால் ஏகே மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் ஆதிக்குக்கு 15 கோடி சம்பளம் என்றும், நயன்தாராவுக்கு 10 கோடிதான் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆதிக் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் ‘குட் பேட் அக்லி’ மீதான எதிர்பார்ப்பானது அதிகரித்திருக்கிறது.
மஞ்சும்மல் பாய்ஸுக்கு நோட்டீஸ்!
குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இப்படம் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகி உலகளவில் வசூல் சாதனை புரிந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு காரணம், அப்படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு பாடல்’தான். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியதுடன் தமிழ்நாட்டில் விருது மற்றும் விழாக்களும் நடத்தப்பட்டன. இப்படம் இதுவரை உலகளவில் 235 கோடி வசூலித்து சாதனை புரிந்திருக்கிறது.
‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
இந்நிலையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாகவும், அதனை உடனடியாக நீக்குமாறும், அப்படக்குழுவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், பாடலை உருவாக்கிய இளையராஜாவுக்குத்தான் பதிப்புரிமை இருப்பதாகவும், அவரிடம் முறையாக உரிமை பெறாததால் இழப்பீடு வழங்கவேண்டும், இல்லாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருக்கிறது.
ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் தமிழ்ப்படம்!
கடந்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமா இறங்குமுகமாக இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். அதற்கு மலையாள சினிமாவின் வளர்ச்சியும் ஓடிடி தளங்களின் பங்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்தே ‘ஆடுஜீவிதம்’, ‘பிரேமலு’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’ போன்ற மலையாள படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தன. இது தமிழ் தயாரிப்பாளர்களுக்கு சோதனையாக அமைந்தது. தமிழில் ஒருபடம்கூட வசூல் சாதனை புரியாதா? என கேட்டுவந்த ரசிகர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது ‘அரண்மனை 4’.
இந்த ஆண்டில் ரூ. 100 கோடி வசூல்சாதனை புரிந்த முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது ‘அரண்மனை - 4‘
ஏற்கனவே முதல் 3 பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நான்காம் பாகத்திலும் த்ரில்லருக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, கே.எஸ் ரவிக்குமார், கோவை சரளா, யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். 2024-இல் ரூ.100 கோடி வசூல்சாதனை படைத்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது இத்திரைப்படம். இந்நிலையில் 24ஆம் தேதி இப்படம் இந்தியிலும் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்தியன் 2 ஆடியோ லாஞ்சின் கெஸ்ட் இவரா!
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இந்தியன் - 2’. இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றிருக்கிறது. ஜூன் மாதம் இப்படம் ரிலீஸாகும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் நீக்கமுடியாத முக்கியமான சீன்கள் இருப்பதால், இரண்டாம் பாகத்துடன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஒருவழியாக ஜூலை 12ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘இந்தியன் - 2’ படத்தின் ஆடியோ லாஞ்சில் மெய்ன் கெஸ்ட்டாக கிரிக்கெட் வீரர் தோனியை அழைக்க ஏற்பாடு
படத்தின் ஆடியோ லாஞ்ச் ஜூன் 1ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் வைத்து மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, ராம்சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவிவந்தன. இந்நிலையில், ’அங்கு முழுக்க கமல் ரசிகர்கள் இருப்பார்கள். அங்கு நான் எதையாவது பேசி கமல் ரசிகர்கள் கமெண்ட் அடித்துவிட்டால் எங்கள் இருவருக்கும் சங்கடமாகிவிடும்’ என்று கூறி அழைப்பை மறுத்துவிட்டாராம் ரஜினி. இதற்கிடையே நிகழ்ச்சியில் மெய்ன் கெஸ்ட்டாக கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவிவருகின்றன.
ஷாருக்கிற்கு உடல்நலக்குறைவு!
பாலிவுட்டின் ‘கிங் கான்’ என அழைக்கப்படுபவர் ஷாருக் கான். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற ஐபிஎல் அணியின் உரிமையாளரும்கூட. அகமதாபாத்திலிருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ப்ளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிப்போட்டி நடைபெற்றது.
ஹீட் ஸ்ட்ரோக்கால் அகமதாபாத்திலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஷாருக்கான்
இந்நிலையில் தனது அணிவீரர்களை நேரில் சென்று உற்சாகப்படுத்த தனது குடும்பத்தினருடன் அகமதாபாத் சென்றிருந்த ஷாருக்கிற்கு வெப்பம் தாங்கமுடியாமல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள கேடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஷாருக்கின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிகிச்சை முடிந்து நலம்பெற்று மருத்துவமனையிலிருந்து ஷாருக் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இத்தனை கோடியில் நெக்லஸா?
இத்தாலியில் அமைந்திருக்கும் பல்கேரிய கடை ரோமானிய நகைகள், கடிகாரங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் தோல் பொருட்களுக்கு பெயர்பெற்றது. உலகின் விலையுயர்ந்த மற்றும் பழமைமிக்க நகைக்கடையான பல்கேரியின் 140வது ஆண்டுவிழா கொண்டாட்டம் சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
பல்கேரிய நகைக்கடையின் விலையுயர்ந்த நெக்லஸ் அணிந்திருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா
இந்த விழாவில் AETERNA என்று பெயரிடப்பட்ட உயர்தர நகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நகைக்கடையின் உலகலாளவிய தூதராக உள்ள பிரியங்கா சோப்ரா இவ்விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த நெக்லஸ் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் அது 140 கேரட் வைர நெக்லஸ் எனவும், அதன் விலை ரூ.358 கோடி எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இது பல்கேரிய நகைக்கடையின் விலையுயர்ந்த ஆபரணங்களில் ஒன்று என்றும், அதை செய்துமுடிக்க 2800 மணிநேரம் ஆனதாகவும் தகவல் வெளியாகி நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்திருக்கிறது.