தோல்வியில் தொடங்கி துரோகத்தில் முடிந்த ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை ! சில கண்ணீர் பக்கங்கள்

நடிப்பை விட தன் கண்களால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா.

Update:2024-01-30 00:00 IST
Click the Play button to listen to article

நடிப்பை விட தன் கண்களால் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீ வித்யா. இவர் கதாநாயகியாக நடித்து வாங்கிய பெயரை விட, கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடித்து புகழ் பெற்றதுதான் அதிகம். அதிலும் தமிழ் படங்களில் தாயாக, தங்கையாக, அண்ணியாக, காதலியாக, மனைவியாக, தோழியாக என பெண்ணின் அனைத்து முக்கியமான பரிமாணங்களையும் தனது நடிப்பில் கொண்டுவந்து ரசிக்க வைத்தவர். இதுதவிர, பேசும் விழிகளாலும், துல்லியமான நடிப்பாலும், நேர்த்தியான வசன உச்சரிப்பாலும் தனக்கென்று ஒரு பாதையை வடிவமைத்து, அதன் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட அழகு தேவதையான ஸ்ரீ வித்யா தன் 22 வயதிலேயே, 17 வயது பெண்ணிற்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு நடிப்பில் முதிர்ச்சி பெற்றிருந்தாலும், மனதளவில் அவர் ஒரு குழந்தையாகவே இருந்துள்ளார். அவரின் இந்த குழந்தைத்தனமே பின்னாளில் தனிப்பட்ட வாழ்க்கையில் யாருமே எதிர்பார்க்காத வகையில், மீளமுடியாத பல துயரங்களை, பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்த்தது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த வகையில், ஸ்ரீ வித்யாவின் திரையுலக வாழ்க்கை மற்றும் அவர் சந்தித்த பிரச்சினைகள், அப்பிரச்சினைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ஸ்ரீவித்யா பெற்ற வித்தியாசமான பாராட்டு!


வீணை மற்றும் அழகான புன்னகையோடு காட்சியளிக்கும் இருவேறு தோற்றங்களில் ஸ்ரீவித்யா 

அழகுக்கு இலக்கணமாக திகழ்ந்த நடிகை ஸ்ரீ வித்யா, 1953-ஆம் ஆண்டு ஜுலை 24-ஆம் தேதி அன்று புகழ்பெற்ற கர்நாடக பாடகியான எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டான ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். பிறக்கும் போதே இசை மற்றும் சினிமா பின்புலத்தில் பிறந்த ஸ்ரீவித்யாவுக்கு அந்த கலைகள் மீது அதீத ஆர்வம் உண்டு. அதுமட்டுமின்றி இவர்கள் வீட்டிற்கு அருகிலேயே நடிகைகள் லலிதா, பத்மினி, ராகினி ஆகியோரின் வீடும் இருந்ததால் எப்போதும் அவர்கள் வீட்டிலேயே இருக்கும் ஸ்ரீவித்யா அவர்கள் போடும் மேக்கப் மற்றும் ஆடும் நடனத்தை பார்த்து தானும் அவர்களைப் போல் வரவேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம் ஆகிய இரண்டையும் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார். பின்னர் அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்றவுடன், தனது 12-வது வயதில் 1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் நாட்டிய அரங்கேற்றத்தினை சென்னை கிருஷ்ண கான சபாவில் வித்வான்கள் மற்றும் பண்டிதர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார். ஸ்ரீவித்யாவின் நடனத்தை கண்டு பாராட்டிய அனைவரும் அவருக்கு வாழ்த்து மாலைகளை அள்ளித்தூவினர். இதன் பிறகு டெல்லி, கல்கத்தா, பம்பாய் என்று அரங்கேற்றத்திற்கு சென்று வந்தவர் ஒருமுறை, டெல்லியில் அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிள்ளை, பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் முன்பு நடனமாடியுள்ளார். ஸ்ரீவித்யாவின் நடனம் முடிந்த பிறகு, நேராக அவரது அம்மாவான எம்.எல்.வசந்தகுமாரியிடம் வந்த இந்திரா காந்தி, மகளின் நடனத்தை பற்றி பாராட்ட போகிறார் என்று பார்த்தால் ‘உங்கள் மகள் காதில் அணிந்திருந்த தோடு மிகவும் அழகாக உள்ளது. நான் நடனத்தை பார்த்ததை விட, அதையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று கூறினாராம். இப்படி வித்தியாசமான முறையில், மிகப்பெரிய ஆளுமையிடம் இருந்து பாராட்டு பெற்ற ஸ்ரீவித்யாவின் திரைவாழ்க்கை ஆரம்பித்ததும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுதான்.

ஸ்ரீவித்யாவின் திரைவாழ்க்கை

தந்தை நாடகத்தில் நடித்து கொண்டு வரும் பணத்தை வைத்துதான் ஸ்ரீவித்யாவின் குடும்பம் நகரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அது போதாமல் குடும்பம் மிகவும் மோசமான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட, உடனே அவரது அம்மா எம்.எல்.வசந்தகுமாரியும் நிறைய கச்சேரிகளை நடத்தி சம்பாதிக்க ஆரம்பித்தார். பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேறினாலும், தந்தைக்கு இருந்த சரும நோய் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருந்தது. இதனால் ஸ்ரீவித்யாவும் சினிமாவில் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே 1967-ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘திருவருட்செல்வர்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், நாயகிகளுள் ஒருவராக அறிமுகமானது என்னவோ கே.பாலச்சந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ திரைப்படத்தில்தான். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு கல்லூரி மாணவி மஞ்சுளாவாக, ஆர்.எஸ்.மனோகருக்கு மகளாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். கே.பாலச்சந்தரின் அறிமுகம் சோடை போகாது என்பதற்கேற்ப தனது அடுத்தடுத்த படங்களில் இன்னும் மிளிர்ந்தார். அதிலும் 1975-ஆம் ஆண்டு மீண்டும் கே.பாலச்சந்தரின் படமான ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் கதையின் நாயகியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மனைவியாக நடித்து ரசிக்க வைத்திருந்தார். கமல்ஹாசனும் நடித்திருந்த இப்படத்தில் 22 வயதான ஸ்ரீவித்யா, 17 வயதான ஜெயசுதாவுக்கு அம்மாவாக, பாடகி பைரவியாக நடித்து அசத்தியிருந்தார்.


ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்களின் அழகான புகைப்பட தொகுப்புகள் 

இதன் பிறகு ‘ஆறு புஷ்பங்கள்’, ‘திருக்கல்யாணம்’, ‘இமயம்’ என வரிசையாக நாயகி, இரண்டாம் நாயகியாக நடித்தவருக்கு 80களுக்குப் பிறகு அக்கா, அண்ணி, மனைவி போன்ற வேடங்கள் மட்டுமே வர அவற்றிலும் சிறப்பாக நடித்து நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றில் அப்படியே பொருந்திப் போகும்படியான நடிப்பை தரும் ஸ்ரீவித்யாவை ஒரு சோலோ ஹீரோயினாக தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்திருந்தாலும் மலையாளத் திரையுலகம் காலகட்டங்களுக்கு ஏற்றவாறு அவரை எல்லா வேடங்களிலும் நடிக்க வைத்து கொண்டாடி தீர்த்தது. இருந்தும் தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடித்த வேடங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அழுகை, சிரிப்பு எதுவாக இருந்தாலும் அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இன்றும் அதன் வாயிலாக நம் மனங்களில் வாழ்ந்து வருகிறார் என்றால் அது ஸ்ரீவித்யாவால் மட்டுமே சாத்தியமானது. அதிலும், 90-களில் ரஜினி, அஜித், விஜய் படங்களில் அவர்களுக்கு அம்மாவாக இவர் நடித்திருந்த வேடங்கள் அனைத்திலும் அப்படியே பொருந்திப் போயிருப்பார். குறிப்பாக ரஜினி, மம்மூட்டி நடித்த ‘தளபதி’ பட கல்யாணியாகட்டும், விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’ பட லட்சுமியாகட்டும், ‘கண்ணுக்குள் நிலவு’ மற்றும் ‘ஆனந்தம்’ போன்ற படங்களின் கதாபாத்திரங்களாகட்டும் அனைத்திலும் ஒரு தேர்ந்த நடிப்பை வழங்கி அந்த இடத்தில் வேறு யாரையும் பொருத்தி பார்க்க முடியாதபடி நடித்து ரசிக்க வைத்திருப்பார்.

கமலுடன் காதல், ஜார்ஜுடன் திருமணம்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘அன்னை வேளாங்கண்ணி’ , ‘உணர்ச்சிகள் ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா. இருவருமே கே.பாலச்சந்தரின் அறிமுகங்கள். துவக்க காலத்தில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பதாலோ என்னவோ ஸ்ரீவித்யாவின் குடும்பத்தினரிடம் கமல் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அதிலும் ஸ்ரீவித்யாவின் அண்ணன் சங்கரராமனும், கமலும் நெருங்கிய நண்பர்கள். இதனால் நடிகர் கமல், ஸ்ரீவித்யா மீது இருந்த காதலை முதலில் அவரது அண்ணனிடம்தான் கூறியுள்ளார். ஆனால் அவரது அண்ணனோ நீ எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சென்று நேரிடையாக கேள் என்று சொல்ல, கமலும் நேரடியாக ஸ்ரீவித்யாவின் அம்மாவிடம் சென்று தனது விருப்பத்தை கூறியுள்ளார். ஆனால் எம்.எல்.வசந்தகுமாரியோ நீங்கள் இருவரும் இப்போதுதான் வளர்ந்து வரும் தருவாயில் இருக்கிறீர்கள். அதனால் உங்களது துறை சார்ந்த வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். காதல் எல்லாம் வேண்டாம் என்று மறுப்பு சொல்லிவிட்டாராம். இதன்பிறகு இருவரும் கலைத்துறையில் கவனம் செலுத்தி முன்னேறி வந்த நேரத்தில்தான், கமல்ஹாசன் வாணி கணபதியை காதலிக்கத் தொடங்கினார். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனபதை கேள்விப்பட்டவுடன் கமலுடனான காதலை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஸ்ரீவித்யாவுக்கு. இந்த காலகட்டத்தில் ஸ்ரீவித்யா திரைப்பட இயக்குநரான பரதன் என்பவரை காதலித்தார். ஆனால் அந்த காதலும் முறிந்துபோக, பின்னர் அவர் மலையாளத்தில் தனது ‘தீக்கனல்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜார்ஜ் தாமஸை காதலித்தார். ஆனால், இந்த காதலுக்கும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்கள் அனைவரையும் மீறி 1978, ஜனவரி 19 -ஆம் தேதி அன்று ஜார்ஜ் தாமஸை திருமணம் செய்துகொண்டார். ஜார்ஜ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதனால் திருமணத்திற்கு முன்பாகவே ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீவித்யா ஞானஸ்நானம் பெற்று மதம் மாறினார்.


'அபூர்வ ராகங்கள்' மற்றும் 'புன்னகை மன்னன்' திரைப்படங்களின் புகைப்படங்கள் மற்றும் கணவர் ஜார்ஜ் தாமஸ் உடன் ஸ்ரீவித்யா  

திருமணத்திற்கு பிறகு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் அருகில் குடியேறிய ஸ்ரீவித்யா இல்லத்தரசியாக இருக்க விரும்பிய நிலையில், அவரை கணவர் ஜார்ஜோ நிதிப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, நடிக்க கட்டாயப்படுத்தியதால் வேறுவழியின்றி மீண்டும் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார். இதனால் மூன்று முறை தான் தாய் ஆவதற்கான பாக்கியம் கிடைத்தும், கணவரின் வற்புறுத்தலால் தனக்கு கிடைத்த பொக்கிஷங்களை கருவிலேயே அழித்தார் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகுதான், திருமண விஷயத்தில் அவசரப்பட்டு தான் எடுத்த முடிவுகளை நினைத்து ஸ்ரீவித்யா வருந்தியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கணவர் கொடுத்த பல பிரச்சினைகளால் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகி தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஸ்ரீவித்யா. இதனை அருகில் இருந்த உறவுக்காரர் ஒருவர் ஸ்ரீவித்யாவின் அம்மாவிடமும், சகோதரரிடமும் கூறியுள்ளார். உடனடியாக ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு சென்ற அவரது அம்மா, அங்கிருந்து தனது மகளை மீட்டு பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு, ஜார்ஜிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொடுத்தார். மேலும் ஸ்ரீவித்யா சம்பாதித்து வாங்கிய சொத்துக்களையும் ஜார்ஜ் அபகரித்துக் கொண்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி மீட்டுக் கொடுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளால் 35 வயதே ஆகியிருந்த ஸ்ரீவித்யா வேறொரு திருமணத்தை பற்றியும் யோசிக்க முடியாமல் போயுள்ளது. இருந்தும் அண்ணன் மற்றும் அம்மாவின் உதவியுடன் தமிழ், மலையாளம் என நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்த நேரம்தான் காலதேவன் அவரின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் ஆரம்பித்து வைக்க காத்திருந்தது.

அம்மாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம்

கணவருடனான விவாகரத்திற்குப் பிறகு, 1990-களில் ஸ்ரீவித்யா திரைத்துறையில் மிகவும் பிஸியாக வலம் வரத் தொடங்கினார். அந்த நேரம், எவ்வளவு காலம் அண்ணனுக்கு பாரமாக இருப்பது. அதனால் தனக்கென்று ஒரு வீடு பார்த்து போய்விட்டால் யாருக்கும் நம்மால் தொந்தரவு இருக்காது என்று தனது அண்ணனிடம் சொல்லி இருவரும் சேர்ந்து வீடு பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஸ்ரீவித்யா நடிகை என்பதால் யாரும் வீடு கொடுக்க முன்வராத நேரத்தில், எம்.எல்.வசந்தகுமாரி மீது இருந்த மரியாதையின் காரணமாக கர்நாடக இசையில் தேர்ந்த வயலின் இசைக் கலைஞரான எம். எஸ். கோபாலகிருஷ்ணன் தனது வீட்டு மாடியில் காலியாக இருந்த போர்ஷனை வாடகைக்கு கொடுத்துள்ளார். அந்த சமயம் ஸ்ரீவித்யாவின் அம்மா வசந்தகுமாரியும் மகளுடன் வந்து பாதுகாப்பிற்காக தங்கி அங்கிருந்து கச்சேரிகளுக்கு சென்று வந்துள்ளார். மகள் பெரிய அளவில் சம்பாதித்தாலும் அதில் இருந்து ஒரு பைசா கூட வாங்காமல்தான் அவரது அம்மாவும், அண்ணனும் அவருக்கு உதவி வந்துள்ளனர். இந்த நேரம் 1990-ஆம் ஆண்டு எம்.எல்.வசந்தகுமாரி ஏற்கனவே கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன் தாக்கத்தால் திடீரென்று இறந்து போக, ஸ்ரீவித்யாவுக்கு தன் உலகமே இருண்டு போனது போல் ஆனது. தனக்கென்று இருந்த ஒரு ஜீவனும் நம்மை தவிக்க விட்டுவிட்டு போய் விட்டதே என்ற கவலையும் தொற்றிக்கொண்டது. இந்த நேரம் மலையாளத்தில் படம், தொலைக்காட்சித் தொடர் என்று அதிகம் நடித்து வந்த ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வரத்தொடங்கினர். இதனால் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமான அண்ணனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அவர் சென்னையை விட்டு திருவனந்தபுரத்தில் குடியேறினார்.


ஸ்ரீவித்யாவின் அம்மாவும், புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியுமான எம்.எல்.வசந்தகுமாரி 

அங்கு மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த ஸ்ரீவித்யா சொத்துக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், தான் எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று கூட அவர் தன் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் சொல்லாமல் இருந்து வந்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஸ்ரீவித்யா குறித்து யாரோ தெரிந்தவர்கள் மூலமாக வரும் தகவல்கள் மட்டுமே அவரது குடும்பத்தினரின் காதுகளுக்கு சென்றுள்ளது. தன் தங்கை எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று அவரது அண்ணனும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். திடீரென்று ஒரு நாள் 2006-ஆம் ஆண்டு தனது மறைவிற்கு முன்பாக சென்னை வந்திருந்த பழம்பெரும் நடிகையான பத்மினி, தன் வீட்டிற்கு அருகில் இருந்த ஸ்ரீவித்யாவின் அண்ணனிடம் உனக்கு விஷயம் தெரியுமா? ஸ்ரீவித்யா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கா. சாவின் விளிம்புல இருக்கா.. நீங்கல்லாம் ஏன் போய் பார்க்கல.. என்று கேட்கவும் அப்போதுதான் பதறியடித்துக்கொண்டு திருவனந்தபுரத்திற்கு ஓடினாராம் அவரது அண்ணன் சங்கரராமன். இதற்கிடையில், எப்போதாவது தங்கையிடம் போனில் பேசினோம். ஒருமுறை கூட நம்மிடம் இப்படியான சூழலில் இருக்கிறேன் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டாலே என்று மனதிற்குள்ளாகவே வேதனைப் பட்டுக்கொண்டு சென்றவர், அங்கு ஸ்ரீவித்யா இருந்த கோலத்தை பார்த்துவிட்டு “அய்யோ வித்தி இப்படி பண்ணிட்டியே.. ஏன் எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை என்று தலையில் அடித்துக் கொண்டு கதறினாராம். அப்போது கூட ஸ்ரீவித்யா தனது அண்ணனை பார்த்து “நீ ஏன் இங்க வந்த? மொதல்ல வீட்டுக்கு போ.. மண்ணி தனியா இருப்பா… அவள தனியா விட்டுட்டு எதுக்கு வந்த? எனக்கு ஒன்னும் இல்ல” என்று திட்டினாராம். பிறகு ஸ்ரீவித்யாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவரின் அண்ணனை பார்த்ததும் “நீங்கள்தான் இவரின் அண்ணனா, ஏன் இவரை இப்படி தனியா விட்டீங்க? இவருக்கு ஒரு முக்கியமான மருந்து வாங்கி கொடுத்தா இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருப்பாங்க அப்படின்னு சொன்னேன். ஆனால், இவங்க கூட இருந்த கணேஷ் குமார் என்பவர் அதற்கு என்னிடம் பணம் இல்லை. ஏற்கனவே அவரின் சொத்துக்களை விற்றுதான் சிகிச்சைக்கு பணம் கொடுத்துள்ளேன் என்று கூறினார். உங்களை போன்ற உறவினர்கள் உடன் இருந்திருந்தால் இவருக்கு இப்படியொரு நிலை வந்திருக்காது” என்று சொன்னாராம். இங்குதான் அவருக்கு ஒரு உண்மை தெரிந்துள்ளது. அவர் கேரளாவைச் சேர்ந்த நடிகரும், அரசியல்வாதியுமான கணேஷ் குமார் என்பவரை நம்பி ஏமாந்தது.

யார் இந்த கணேஷ் குமார்?


அழகி ஸ்ரீவித்யா மற்றும் கேரளாவின் முன்னாள் அமைச்சர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளையின் மகன் கணேஷ் குமார்

கேரளாவின் முன்னாள் அமைச்சரான ஆர். பாலகிருஷ்ண பிள்ளையின் மகனான கணேஷ் குமார் 2001 மே மாதம் முதல் மார்ச் 2003 வரை போக்குவரத்து அமைச்சராக இருந்தார். 2011 மே முதல் 2013 ஏப்ரல் 1 அன்று ராஜினாமா செய்யும் வரை கேரள அமைச்சகத்தில் வனம் மற்றும் சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் சினிமா துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் ஏற்கனவே சயின்டிஸ்ட்டான யாமினி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இரண்டாவதாக பிந்து மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே வந்த இவர் தற்போது பினராயி விஜயன் அமைச்சகத்தில் பங்குகொண்டு டிசம்பர் 2023 முதல் கேரள அரசின் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அப்படிப்பட்ட இவருடன் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் அறிமுகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் ஆலோசனையின் பேரிலேயே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்ததாகவும், ஸ்ரீவித்யா முழுக்க முழுக்க அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனாலேயே அவரது குடும்பத்துடனான உறவு முறிந்து போனதாகவும் தெரிகிறது..

கடைசி ஆசை நிறைவேறாமலேயே சென்ற ஸ்ரீவித்யா

லட்சம் லட்சமாக சம்பாதித்தும் பயனின்றி மிகவும் வேதனைப்பட்டு, போராடி, 2006-ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்த ஸ்ரீவித்யா சிகிச்சையில் இருந்த சமயத்தில் தனது சொத்துகளுக்கெல்லாம் பவர் ஆஃப் அட்டர்னியாக கணேஷ் குமாரை நியமிப்பதாகவும், தான் சம்பாதித்த பணத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயை தனது வீட்டில் வேலை பார்த்த சமையல்காரர்களுக்கும், தனது அண்ணன் மகன்களுக்கு ஆளுக்கு 5 லட்சம் என்று 10 லட்சம் ரூபாயை கொடுத்தது போக மீதி பணம் மற்றும் சொத்துக்களை டிரஸ்ட் ஆரம்பித்து, அதன் மூலம், திறமை இருந்தும் இசை மற்றும் நாட்டியம் கற்றுக்கொள்ள முடியாத குழந்தைகளுக்கு உதவிட வேண்டும் என்றும் உயில் எழுதி அதனை கணேஷ் குமாரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ஸ்ரீவித்யா சிகிச்சையில் சுயநினைவில்லாமல் இருந்த நேரத்தில்தான் இதெல்லாம் எழுதி வாங்கப்பட்டதாக அங்கிருந்த செவிலியர்கள் கூறியதாக அவரது அண்ணன் சங்கரராமனின் மனைவி அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீவித்யா ஆசைப்பட்ட எந்த ஒரு காரியத்தையும் அந்த கணேஷ்குமார் நிறைவேற்றவில்லை என்றும், அவள் சொத்துக்கள், சேர்த்து வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. எப்படியாவது அவளது ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று நாங்களும் நிறைய சட்டப் போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அந்த கணேஷ் குமாரை எங்களால் ஜெயிக்க முடியவில்லை. இப்போது வரை அவளது சொத்துக்கள் என்ன ஆனது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் இந்த உண்மைகள் எதுவும் தெரியாமல் மக்களும், திரைத்துறையை சார்ந்த சிலரும் ஸ்ரீவித்யாவின் குடும்பத்தினர் அவரின் சொத்துக்களை எடுத்துக்கொண்டு கைவிட்டுவிட்டதாக கூறுகின்றனர். உண்மை தெரிந்து கொண்டு மற்றவர்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்று ஸ்ரீவித்யாவின் அண்ணி தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவள் வாழ்க்கை முழுக்க ஏமாந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவளது தலையெழுத்து போல என்று தனது கணவரும் ஸ்ரீவித்யாவின் அண்ணனுமான சங்கரராமன், தான் சாகும் வரை வருத்தப்பட்டுக் கொண்டே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசியாக நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீவித்யா - கமல் சந்திப்பு


ஸ்ரீவித்யா மற்றும் கமல்ஹாசன் 

கமல் - ஸ்ரீவித்யாவின் நட்பும், காதலும் திரைத்துறையில் பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், அது கனவாகவே காற்றோடு கரைந்து போனது. எல்லோருடைய முதல் காதலும் வெற்றியில் முடிவதில்லை. அப்படி தோற்றுப்போன முதல் காதலையும், காதலியையும் நம் வாழ்க்கையின் இறுதி வரை மறக்க முடியாது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். அதேபோல்தான் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் - மறைந்த ஸ்ரீவித்யாவிற்கும். அவர்கள் இருவருக்குமான காதல் உண்மை என்பதனால்தான், தான் இறக்கப் போகிறோம் என்பதை அறிந்தவுடன், நடிகர் ஒருவர் மூலமாக தனது நிலையை எடுத்துக் கூறி நான் கமலை சந்திக்க வேண்டும் என்று கேட்க, அவரும் அதனை கமலிடம் கூறியுள்ளார். ஸ்ரீவித்யாவின் நிலையை அறிந்த கமல் தாமதம் ஏதும் செய்யாமல் உடனடியாக கிளம்பி திருவனந்தபுரத்தில் ஸ்ரீவித்யா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்று, அங்கு அவரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் சிறிது நேரம் மனம் விட்டு பேசியுள்ளனர். இந்த நிகழ்வு அப்போது பெரிய அளவில் பேசப்பட்டதுடன் பலரின் மனங்களை கலங்க செய்தது.

இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்ட போது, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை ஸ்ரீவித்யா உடனான நட்பு குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய கமல் அவர் என் தோழி என்று சொல்வதைவிட அவர் காதலி என்பதுதான் நிஜம் என மனம் திறந்து பேசியிருந்தார். அந்த பேச்சு கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்த எல்லோரும் மறைந்து, மறந்து போயிருந்த ஸ்ரீவித்யாவை பற்றி மீண்டும் பேச தொடங்கியுள்ளனர். இதுதவிர நடிகை குட்டி பத்மினியும், தன் பங்கிற்கு ஸ்ரீவித்யா இறப்பதற்கு முன்பு எப்படி இருந்தார், தன்னுடன் என்னவெல்லாம் பேசினார் என்பதையெல்லாம் அவரது யூடியூப் சேனலில் பகிர்ந்திருந்த நிகழ்வும் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

எது எப்படி இருந்தாலும் குழைந்தை உள்ளம் கொண்ட ஒரு அழகு தேவதை ஏமாற்றங்களை மட்டுமே வாழ்க்கையில் சந்தித்து இந்த பூமியை விட்டு மறைந்துவிட்டது. அவரின் ஆசைகளும் நிராசையாக போய்விட்டது. எல்லாம் இருந்தும் என்ன பயன் என்பது போல் ஆகிவிட்டது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை. நல்லவர்களாகவும்.... அழகானவர்களாகவும்.... அப்பாவியாகவும் இருந்துவிட்டால்.... ஸ்ரீவித்யாவுக்கு நடந்த கொடுமைதான் பலருக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இவரின் வாழ்க்கை எல்லோருக்குமான பாடம் என்றே எடுத்துக்கொள்வோம்.

Tags:    

மேலும் செய்திகள்