தனியா இருந்தாலும் வாழ்க்கையை ஆனந்தமா கொண்டாடுங்க! - மஞ்சு வாரியரின் ஹேப்பி சீக்ரெட்!

தொடர்ந்து ‘ராணி பத்மினி’, ‘வேட்டா’, ‘உதாஹரணம் சுஜாதா’, ‘C/O சாயிரா பானு’ போன்ற பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் மீண்டும் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். மீண்டும் ஆண்டுக்கு 3 படங்களுக்கு குறையாமல் நடிக்கும் ஹீரோயின் என்ற இடத்தையும் பிடித்தார்

Update:2024-06-11 00:00 IST
Click the Play button to listen to article

தென்னிந்தியாவை பொருத்தவரை அனைத்து திரையுலகிலுமே மலையாள வரவுகள் அதிகம். நடிகர்களைவிட நடிகைகள்தான் பல மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம்வர ஆசைப்படுவார்கள். ஆனால் ஒருசிலர் அதற்கு விதிவிலக்காக குறிப்பிட்ட மொழியில் மட்டுமே நடித்து அங்கு தவிர்க்கமுடியாத நடிகையாக உருவெடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர். மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் இவர் ஆரம்பத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல கசப்புகள் காரணமாக திரையுலகிலிருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கம்பேக் கொடுத்த இவருக்கு அடுத்தடுத்து ஏறுமுகம்தான். தொடர்ந்து தமிழ், இந்தி என பல மொழிகளிலிருந்தும் இவருக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இவருக்கு 45 வயதா என கேட்கும் அளவிற்கு அழகாகவும், ஃபிட்டாகவும் இருக்கும் மஞ்சு வாரியர் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். மஞ்சு வாரியரின் திரை அறிமுகம் மற்றும் வளர்ச்சி குறித்து இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

குறுகிய காலத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’!

கேரள மாநிலம் திருச்சூரை பூர்வீகமாகக்கொண்ட மஞ்சு வாரியர் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தார். அங்கு ஆரம்பக்கல்வியை பயின்ற இவர், தந்தையின் பதவி உயர்வால் கேரள மாநிலம் கண்ணூருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அங்கு மேல்நிலைப் படிப்பை முடித்த வாரியர், முதன்முதலில் தூர்தர்ஷனில் ஒரு டிவி சீரியலில் நடித்தார். அதற்கு காரணம், மஞ்சுவுக்கு நடனத்தில் விருப்பமில்லை என்றாலும் தாயாரின் வற்புறுத்தலால் நடன வகுப்பிற்குச் சென்றார். ஆனால் அதுவே அவருக்கு பின்னாளில் திரை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது.


மஞ்சு வாரியரை மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ ஆக்கிய திரைப்படங்கள்

பின்னர் 1995ஆம் ஆண்டு இவருடைய 17 வயதில் ‘சாக்‌ஷ்யம்’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அடுத்த ஆண்டே ‘சல்லாபம்’ என்ற திரைப்படத்தின்மூலம் கதாநாயகியாக தோன்றினார். தொடர்ந்து ‘தூவல் கொட்டாரம்’, ‘டில்லிவாலா ராஜகுமாரன்’, ‘காளிவீடு’, ‘ஈ புழயும் கடன்ஞு’ மற்றும் ‘கிருஷ்ணகுடியில் ஒரு ப்ரணயகலத்து’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தார். குறிப்பாக, மோகன்லாலுடன் இவர் ஜோடிசேர்ந்த ‘ஆராம் தம்புரான்’ என்ற படம் மஞ்சு வாரியருக்கு மாபெரும் புகழைத் தேடித்தந்தது. ‘கண்மடம்’ மற்றும் ‘கண்ணெழுதி பொட்டும் தொட்டு’ போன்ற படங்கள் இவருடைய உணர்வுப்பூர்வமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. வெறும் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்த மஞ்சு, மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்றார்.

திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு

மலையாள திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியாக வலம்வந்த மஞ்சு வாரியர், தனது முதல் படமான ‘சல்லாபம்’ படத்தில் திலீப்புடன் சேர்ந்து நடித்தபோதே அவருடன் காதலில் விழுந்தார். தொடர்ந்து ‘ஈ புழயும் கடன்ஞு’, ‘குடமாட்டம்’ போன்ற படங்களில் நடித்தபோது இவர்களுடைய காதல் வலுத்தது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி 1998ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். குறுகிய காலத்திலேயே முன்னணி நட்சத்திரமாக உருவான மஞ்சு, திருமணத்திற்கு பிறகு, நடிக்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்தார். இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


மஞ்சு வாரியரை விவாகரத்து செய்துவிட்டு நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்ட நடிகர் திலீப்

இவர்களுடைய காதலுக்கு அடையாளமாக மீனாக்‌ஷி என ஒரு மகளும் பிறந்தார். சுமார் 16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியின் வாழ்க்கையில் 2015ஆம் ஆண்டு புயல் வீசத் தொடங்கியது. மஞ்சு வாரியர் நடிப்புத்துறையிலிருந்து விலகியிருந்தாலும், திலீப் தொடர்ந்து படங்களில் நடித்துவந்தார். அவருக்கும், திருமணமாகி கொஞ்ச காலத்திலேயே கணவரை பிரிந்த நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, மஞ்சு வாரியருடன் நல்ல நட்பில் இருந்த நடிகை பாவனா, மஞ்சுவிடம் இதுகுறித்து சொன்னதால்தான் திலீப் - மஞ்சு குடும்ப வாழ்க்கையில் விரிசல் விழுந்ததாக பேசப்பட்டது. இதுகுறித்து செய்திகள் வெளியான ஓரிரு மாதங்களிலேயே விவாகரத்துக் கேட்டு எர்ணாகுளம் கோர்ட்டுக்கு சென்றது இந்த தம்பதி. 2015ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்தான நிலையில், குழந்தை திலீப்பிடம் வளர கோர்ட் உத்தரவிட்டது.

அப்போது தங்களுடைய விவாகரத்துக்கும், காவ்யா மாதவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய திலீப், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொச்சினிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து காவ்யவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகுதான், 2017ஆம் ஆண்டு நடிகை பாவனாவை திலீப் பழிவாங்கியதாகக் கூறப்படுகிறது. திலீப், தன்னை ஆள் வைத்து கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக பாவனா போலீசில் புகாரளித்தார். பாவனாவின் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் அந்த வழக்கிலிருந்து திலீப் விடுபடவில்லை.


15 ஆண்டுகளுக்குப் பின் ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்த மஞ்சு வாரியர்

பவர்ஃபுல் கம்பேக்!

குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவிலிருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர் அதில் ஏற்பட்ட கசப்பால், சினிமாவில் கம்பேக் கொடுத்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கேமரா வாசம் இல்லாதபோதிலும், ஃபிலிம் டு டிஜிட்டல் என சினிமாத்துறை மாறியிருந்த போதிலும், பல இளம் நடிகர்கள் தங்களுக்கான இடத்தை பிடித்திருந்தாலும் போல்டாக திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார் மஞ்சு வாரியர். அப்போது சில விளம்பரங்களில் தோன்றினார். பொதுவாக இப்படி கம்பேக் கொடுக்கும் நடிகைககளுக்கு ஹீரோயின் கதாபாத்திரம் சாத்தியமில்லை என்றாலும், 2014ஆம் ஆண்டு ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய ‘ஹவ் ஓல்டு ஆர் யூ?’ திரைப்படத்தில் 36 வயது நிருபமா என்ற பெண் கதாபாத்திரத்தில் தோன்றினார். அந்த படம் அவருக்கு எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தந்தது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ‘36 வயதினிலே’ படத்தின்மூலம்தான் நடிகை ஜோதிகாவும் தமிழ்த்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ‘ராணி பத்மினி’, ‘வேட்டா’, ‘உதாஹரணம் சுஜாதா’, ‘C/O சாயிரா பானு’ போன்ற பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். இதனால் மீண்டும் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உருவெடுத்தார். தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லால் போன்ற ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்தார். மீண்டும் ஆண்டுக்கு 3 படங்களுக்கு குறையாமல் நடிக்கும் ஹீரோயின் என்ற இடத்தையும் பிடித்தார் மஞ்சு வாரியர்.


‘அசுரன்’ மற்றும் ‘துணிவு’ திரைப்படங்களில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரங்கள்

தமிழ்ப்படங்களில் கலக்கும் மஞ்சு வாரியர்!

எப்போதும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிதான் தனது தாரக மந்திரம் எனக் கூறும் மஞ்சு, 40 வயதுக்குப் பிறகு தனுஷ் ஜோடியாக ‘அசுரன்’ படத்தில் நடித்து கோலிவுட்டில் காலடி எடுத்துவைத்தார். வெற்றிமாறன் இயக்கிய அப்படம் தமிழ்நாட்டில் மஞ்சு வாரியருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தியது. இடையிடையே மலையாளப் படங்களை தயாரித்தும் வந்த இவர், அடுத்து ‘துணிவு’ படத்தில் அஜித் குமார் ஜோடியாக நடித்தார். அசுரனில் கிராமத்து அம்மாவாக தோன்றிய மஞ்சு, துணிவில் ஸ்டைலான உடையில் மாடர்ன் பெண்ணாகத் தோன்றி, ரசிகர்களை கிறங்கடித்தார். தொடர்ந்து ஆர். மாதவன் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ படத்தின்மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். தற்போது ரஜினியுடன் சேர்ந்து ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஓடிக்கொண்டிருந்தார். இதனிடையே நடிகர் அஜித்தை பார்த்து ஈர்க்கப்பட்ட மஞ்சு, பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் மலையாளம், தமிழ் டிவி ஷோக்களிலும் கலந்துகொள்கிறார். அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடும் இவர், சமீபத்தில் ஒரு மாடர்ன் உடையில் போட்டோக்களை பதிவிட்டு, தனியாக இருந்தாலும் எப்போதும் மனம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள் என்றும், வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடுங்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஃபுட்டேஜ்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவியது. காரணம், அந்த போஸ்டரில் 32 வயது விஷாக் நாயருடன் மிகவும் நெருக்கமாக மஞ்சு அமர்ந்திருந்த புகைப்படம்தான். இதுவரை அதுபோல் க்ளாமர் காட்சிகளில் மஞ்சு வாரியரை பார்த்திராத ரசிகர்கள், இப்படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்