செட்டப்ப மாத்தி... கெட்டப்ப மாத்தி... புது புது அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி

'கெட்டப் சேஞ்ச்' என்ற வார்த்தைக்கு அர்த்தமாக ஒரு நடிகர் சமீபகாலமாக இருக்கிறார் என்றால் அது விஜய் சேதுபதி தான்.

Update: 2023-10-23 18:30 GMT
Click the Play button to listen to article

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக கெட்டப்புகள் போட்டு நடித்த நடிகர் என்று சொன்னாலே, முதலில் நினைவுக்கு வரக்கூடிய நபர் நிச்சயம் உலகநாயகன் கமல்ஹாசனாகத் தான் இருக்க முடியும். குள்ளமாக வரும் அப்பு கதாபாத்திரம் துவங்கி பெண் வேடம், வயதான கிழவன் தோற்றம் என பல கெட்டப்புகளில் தோன்றி நடித்துள்ள கமல், உச்சபட்சமாக 'தசாவதாரம்' திரைப்படத்தில் பிரம்மிக்க வைக்கும் விதமாக 10 விதமான கெட்டப்புகள் போட்டு அசத்தியிருப்பார். இவரை போலவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் 'நவராத்திரி' திரைப்படத்தில் ஒன்பது கெட்டப்புகள் போட்டு கலக்கியதோடு, இவர் போடாத வேடங்களே இல்லை எனும் அளவிற்கு பல அற்புதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நம் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார். இவர்கள் தவிர அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல் அறிமுகமாகும் புது புது நடிகர்கள் 'கெட்டப் சேஞ்ச்' செய்து பல படங்களில் நடித்திருந்தாலும், 90-களின் துவக்கத்தில் சத்யராஜ், பிறகு அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் கூடுதல் கவனம் பெற்றனர். அந்த வரிசையில் தற்போது, இந்த 'கெட்டப் சேஞ்ச்' என்ற வார்த்தைக்கு அர்த்தமாக ஒரு நடிகர் சமீபகாலமாக இருக்கிறார் என்றால் அது விஜய் சேதுபதி தான். இந்த தொகுப்பில் இதுவரை நடிகர் விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்கள் குறித்தும், அதற்காக அவர் செய்த கெட்டப் சேஞ்ச்கள் குறித்து காணலாம்.

பீட்சா பாய் டு மக்கள் செல்வன்

'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' , 'புதுப்பேட்டை', 'நான் மகான் அல்ல' போன்ற பல படங்களில் துணை நடிகராக நடித்து தனது திரைப்பயணத்தை துவங்கிய விஜய் சேதுபதி, 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளி வந்த 'தென்மேற்கு பருவகாற்று' படத்தின் வாயிலாக ஒரு தரமான நடிகராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து 'சுந்தரபாண்டியன்' படத்தில் வில்லன்களில் ஒருவராக, 'பீட்சா' படத்தில் பீட்சா டெலிவரி செய்யும் நபராக, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் பழைய நினைவுகளை இழந்த இளைஞராக நடித்து வெற்றி பெற்றிருந்தாலும், முதன் முறையாக கெட்டப் சேஞ்ச் செய்து விஜய் சேதுபதி முத்திரை பதித்த படமென்று சொன்னால் அது 'சூது கவ்வும்' படமாகத் தான் இருக்க முடியும். நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பிளாக் காமெடி திரைப்படமாக வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஜய் சேதுபதி, தாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


துணை நடிகராக விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரங்கள் 

கறுப்புக் கண்ணாடி, அடர்ந்த தாடி, வழித்து சீவிய தலை முடி என சிறிய அளவிலான தோற்ற மாற்றத்தையே விஜய் சேதுபதி இப்படத்தில் செய்திருந்தாலும், கற்பனை கதாபாத்திரத்துடன் அவர் சேர்ந்து செய்யும் லூட்டிகளும், திருடத் தெரியமால் மாட்டிக்கொள்ளும்போது அவர் செய்யும் ரியாக்ஷன்களும், கதாபாத்திரத்தின் வாயிலான தோற்ற மாற்றத்தை மிகப்பெரிய அளவில் உணர்த்தி நம்மை குதூகலப்படுத்தியது. இதனை தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் வட சென்னை லோக்கல் பாய்யாக, 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் கிராமத்து இளைஞராக நடித்தவர், 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்தில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஹங்மேன் எமலிங்கமாக நடித்து ஆச்சரியமூட்டினார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒரு பெரிய நடிகர் ஹங்மேன் கதாபாத்திரம் ஏற்று நடித்த முதல் படம் என்றால் அது இந்த படமாகத்தான் இருக்க முடியும்.


ஆரம்பகாலப் படங்களில் கதாநாயகனாக விஜய் சேதுபதி ஏற்ற வித்யாசமான கதாப்பாத்திரங்கள்   

இப்படி வெரைட்டியான கதாபாத்திரங்களை தொடர்ந்து ஏற்று நடித்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்று வந்த விஜய் சேதுபதி, 2015 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை தயாரித்தார். இதில் கதையின் நாயகனாக, 55 வயது முதியவராக புதிய கெட்டப்பில் தோன்றி விஜய் சேதுபதி நடிப்பில் மிளிர்ந்திருந்தாலும் படம் சரியாக ஓடவில்லை. இந்த சமயம் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் போது, ஏன் இந்த மாதிரியான முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து வாய்ப்பை கெடுத்துக் கொள்கிறீர்கள் என சிலர் கேட்க, தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியையே பதிலாக தந்தார் விஜய் சேதுபதி. 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவுடன் இளமை துள்ளும் இளைஞராக தாடி மீசையின்றி நகைச்சுவையில் கலக்கிய அதே வேளையில், 'சேதுபதி' படத்தில் முறுக்கு மீசையுடன் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக தோன்றி ஆக்ஷனில் மிரட்டினார். பிறகு மீண்டும் தனது பழைய பாணி தோற்றத்திலேயே 'காதலும் கடந்து போகும்' படத்தில் பார் அதிபராக வேண்டும் என்ற கனவோடு வலம் வரும் ரௌடியாக நடித்த விஜய் சேதுபதி, 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'கவண்' போன்ற படங்களில் முற்றிலும் நேரெதிரான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கவனம் பெற்றார். இதில் குறிப்பாக 'தர்மதுரை' படத்தில் கல்லூரி மாணவராக, காதல் செய்யும் இளைஞராக, குடித்துவிட்டு ரகளை செய்யும் குடிமகனாக என மூன்று பரிமாணங்களில் தோன்றி நடித்திருந்த விஜய் சேதுபதி, பலரின் பாராட்டை பெற்று வெற்றிப் பெற்றார்.


தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் கவனம் பெற்ற கதாப்பாத்திரங்கள்

 வில்லன் டு பான் இந்தியா ஸ்டார்

எந்த ஒரு நடிகரும் தான் உச்சத்தில் இருக்கும்போது நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பமாட்டார்கள். அதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடித்தவர்கள், இனி வில்லனாகவும் நடிக்கலாம் என்ற வில்லங்கமான முடிவை எடுக்கவே மாட்டார்கள். காரணம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை வில்லனாக இருந்து ஹீரோவாக மாறியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதே போல் ஹீரோவாக இருந்து மார்க்கெட்டை இழந்த பிறகு வில்லனாக மாறிய நடிகர்களும் பலர் இருக்கிறர்கள். ஆனால் ஹீரோ, வில்லன் என்ற இரண்டையுமே தன் கையில் இறுக்கி பிடித்து பயணித்த நடிகர்கள் வெகு சொற்பமே. நடிகர் சத்யராஜ் கூட உச்சத்தில் இருந்தபோது அந்த மாதிரியான முயற்சிகளை சில படங்களில் செய்திருந்தாலும், அதில் அவருக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. அந்த வகையில் இந்த முயற்சியை வெற்றிகரமாக முழு மனதோடு முன்னெடுத்து, அதில் சாதித்தும் காட்டியவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

2017 ஆம் ஆண்டு புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படத்தில் வில்லனிக் ஹீரோவாக நடித்திருந்த விஜய் சேதுபதி, படத்தின் முதல் நாயகராக வரும் என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி மாதவனின் கதாபாத்திரத்தையே பல காட்சிகளில் ஓவர்டேக் செய்து பட்டையை கிளப்பிருந்தார். 16 கொலைகள் செய்த தாதாவாக சற்று நெகட்டிவான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்திருந்தாலும், படத்தில் அவர் வெளிப்படுத்திய உடல் மொழியும், பேசிய வசனங்களும் அன்று திரையரங்குகளை விசில் வெடியால் பற்றி எரிய வைத்தன. பின்னர் 'கருப்பன்' படத்தில் மாடுபிடி வீரனாக, 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் ஆந்திர காட்டுப் பகுதியில் வாழும் ஒரு திருட்டு கும்பலின் தலைவனாக, 'ஜூங்கா' படத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று ரகளைகள் செய்யும் காமெடி டானாக என பல காதாபாத்திரங்களை இவர் ஏற்று நடித்த போதும் எதிலும் வெற்றி கிடைக்கவில்லை. குறிப்பாக, இந்த சமயங்களில் முரட்டுத் தனமான, ரத்தம் சொட்ட சொட்ட, ஆக்ரோஷமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து இவர் நடித்து வந்ததால், இனி ரொமான்ஸ் எல்லாம் இவருக்கு செட் ஆகாது என மனதில் ட்யூன் செய்து வைத்தவர்களுக்கு திடீரென ஸ்டேஷனை மாற்றி ரொமான்டிக் ஹீரோவாக மாறினார் விஜய் சேதுபதி.


வில்லன், ஹீரோ, ரொமாண்டிக், வயதானவர் வேடங்களில் தோன்றிய விஜய் சேதுபதி 

இந்த திடீர் மாற்றத்தின் துவக்கமாக 'இமைக்கா நொடிகள்' படத்தில் சின்ன கெஸ்ட் ரோலாக இருந்தாலும் மனதில் நிற்கும் படியான ரொமான்டிக் கணவராக நயன்தாராவுடன் இணைந்து நடித்தவர், '96' படத்தில் 90'ஸ் கிட்ஸ்களின் காதல் நினைவுகளை தட்டி எழுப்பினார். 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘96’ படத்தில் ராமாக நடித்திருந்த விஜய் சேதுபதி, தன் மென்மையான நடிப்பால் நம் சிறுவயது காதல் நினைவுகளை அழகிய இசையாக மீட்டியிருந்தார். இருப்பினும் இத்தகைய படங்களில் எல்லாம் தாடி வைத்தும், தாடி இல்லாமலும்... மீசை வைத்தும், மீசை இல்லாமலும் என சிறிய அளவிலான கெட்டப் சேஞ்ச் செய்தே நடித்திருந்தார். இந்த சமயத்தில்தான், மீண்டும் ஒரு புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் 'சீதக்காதி' படத்தில் நடித்தார். அவரது 25 வது படமான இதில் 'அய்யா ஆதிமூலம்' என்கிற நாடக கலைஞர் கதாபாத்திரத்தில், வயதான தோற்றத்தில் விஜய் சேதுபதி வருவார். ஆஸ்கர் வின்னர் கெவின் ஹேனியின் வழிகாட்டுதல் படி, இப்படத்தில் வயதான கெட்டப்பிற்கான மேக்கப் விஜய் சேதுபதிக்கு போடப்பட்ட போது, பல சிரமங்களை அவர் சந்தித்தாராம்.


'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கை ஷில்பாவாக வரும் விஜய் சேதுபதி 

இருப்பினும் அவரது உழைப்பிற்கேற்ற பலன் வெற்றியாக இப்படத்தில் கிடைக்கவில்லை. இருந்தும் முயற்சியை கைவிடாத விஜய் சேதுபதி அடுத்த ஆண்டே வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் ஷில்பா எனும் திருநங்கையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றி நடிப்பில் முத்திரைப்பதித்தார். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடித்திருந்தாலும் 'சூப்பர் டீலக்ஸ்' ஷில்பாவோ முற்றிலும் வித்தியாசமானவர். காரணம் இந்த கதாபாத்திரம் திருநங்கை என்பதை தாண்டி அவளின் வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள், குடும்ப உறவுக்குள் வருகின்ற சிக்கல்கள், பொது இடங்களில் அவள் சந்திக்கின்ற பிரச்சினைகள் போன்றவை அப்பட்டமாக திரையில் கட்டப்பட்டிருந்த விதம், மிகவும் வலி நிறைந்ததாக இருந்ததால் தான். குறிப்பாக திருநங்கையாக வரும் விஜய் சேதுபதிக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இதுவரை எந்த சினிமாவும் கண்டிராத புதிய காட்சியமைப்பாக பார்க்கப்பட்டது. இதனாலேயே இப்படத்திற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததோடு, இந்திய அளவில் பெரிய அடையாளமும் அவருக்கு உருவானது. இதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிக்க துவங்கிய விஜய் சேதுபதி ஒரு பான் இந்தியா ஸ்டாராக மாற துவங்கினார்.

புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி

பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிப்பது என்பது அரிதினும் அரிதான ஒன்றே. இருப்பினும் நட்புக்காக, நம்மை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்ற மரியாதைக்காக சில நடிகர்கள் குறிப்பிட்ட சில படங்களில் திரையில் தோன்றி நடித்திருந்தாலும், அதனை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இதில் விஜய் சேதுபதி மட்டும் விதிவிலக்கானவர். ஏனெனில் அவர் எத்தனை படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்துள்ளாரோ அதற்கு நிகராக கெஸ்ட் ரோல் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். நட்புக்காகத்தான் இதனை அவர் செய்திருந்தாலும், அதிலும் ஒரு தனித்துவமான நடிகராக அடையாளம் காணப்பட்டார். 2020 ஆம் ஆண்டிற்கு பின்னரும் 'சங்கத்தமிழன்', 'க/பெ ரணசிங்கம்', 'துக்ளக் தர்பார்', 'மாமனிதன்', 'டிஎஸ்பி' போன்ற படங்களில் கதையின் நாயகனாக நடித்த இவர், தொடர்ந்து வில்லனாகவும் நடிக்கத் தயங்கவில்லை. குறிப்பாக இந்த காலகட்டத்தில் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து நம்மை மிரட்டி இருந்தார். 2019 ஆம் ஆண்டே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்த விஜய் சேதுபதி, 2020 ஆம் ஆண்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நேரெதிர் வில்லனாக நடித்து அசத்தினார்.


வில்லனாக 'பேட்ட', 'மாஸ்டர்', 'விக்ரம்', மற்றும் 'ஜவான்' ஆகியவற்றில் விஜய் சேதுபதி

இதில் பவானி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதி, வில்லத்தனத்தில் பல இடங்களில் விஜய்யின் நடிப்பையே பின்னுக்கு தள்ளியிருந்தார். குறிப்பாக, இன்டெர்வல் ப்ளாக்கில் 'ஐ யம் வெயிட்டிங்' என்கிற விஜய் பேசிய வசனத்தையே அவரிடம் பேசி காட்டும் நிகழ்வு ஹைலைட்டாக இருக்கும். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'விக்ரம்' படத்திலும் சந்தானம் எனும் நெகடிவ் கதாபாத்திரத்தில் கமலுக்கு நேரெதிராக நடித்திருந்த விஜய் சேதுபதி வில்லத்தனத்தில் புது பரிமாணம் கண்டிருந்தார். குறிப்பாக சட்டை இல்லாமல் பேர் பாடியுடன் அவர் அறிமுகமாகும் காட்சி தொடங்கி, கிளைமாக்ஸில் கமல் போடும் புதிருக்கு விடையளிக்க முடியாமல் சாகும் தருணம் வரை அவரது நடிப்பு இப்படத்தில் தனித்துவமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள 'ஜவான்' படத்திலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி தான் ஒரு சாதராண நடிகன் அல்ல மகாநடிகன் என்பதை மீண்டும் நிரூபித்திருந்தார்.


உடல் எடை குறைத்து புதிய கெட்டப்பில் இயக்குனர் அமீருடன் விஜய் சேதுபதி 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வெளிவந்த 'விடுதலை' படத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்திருந்த விஜய் சேதுபதி, படத்தில் சிறிது நேரம் தோன்றி இருந்தாலும் மக்களிடம் அதிகம் கவனம் பெற்றார். இதனை தொடர்ந்து தற்போது 'ஜவான்' படத்திற்குப் பிறகு மீண்டும் பாலிவுட்டில் கரீனா கபூருடன் இணைந்து 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்துள்ள இவர், 'குரங்கு பொம்மை' பட இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதனுடன் இணைந்து தனது 50வது படமான 'மகாராஜா' படத்தையும் முழுமையாக முடித்துள்ளார். இன்னொரு பக்கம் 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திர்கான வேலைகளும் மடமடவென நடந்து வரும் நிலையில், அவரது புதிய தோற்றம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்ட ட்ரிம் செய்யப்பட்ட மீசையும், கண்ணாடியுமாக 80களின் கதாநாயகர் போல புதிய கெட்டப்பில் வலம் வரும் விஜய் சேதுபதி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது இந்த தோற்றத்தில் காட்சியளித்தார். இது 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் பிளாஷ் பேக் காட்சிக்கான கெட்டப் என ஒரு சிலரும், இல்லை இல்லை இயக்குநர் மிஷ்கினுடன் இணையும் புதிய படத்திற்காகவே இந்த கெட்டப்பில் விஜய் சேதுபதி இருக்கிறார் என வேறு சிலரும் தகவல் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், கெட்டப் சேஞ்ச் என்பது விஜய் சேதுபதிக்கு புதிதல்ல என்பதால் இந்த தோற்றத்திலும் அவர் சிறப்பாகவே காட்சி அளிக்கிறார்..

Tags:    

மேலும் செய்திகள்