நாசர் என்னும் மகா கலைஞன்! பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு
வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட நாசர், தமிழ் சினிமாவின் மகா நடிகராகவும் பாராட்டப்படுகிறார்.
தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நாசர். தனது தனித்துவமான நடிப்பு, நம்பிக்கையான குரல், மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து மிகுந்த கவனம் பெற்றுள்ள இவர், தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட அவர், தமிழ் சினிமாவின் மகா நடிகராகவும் பாராட்டப்படுகிறார். இப்படிப்பட்ட திறமைசாலி நடிகர், 05.03.25 அன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, இந்த தொகுப்பில் அவரது திரையுலக பயணத்தை முழுமையாக பார்வையிடலாம்.
ஆரம்பகால வாழ்க்கை
நடிகர் நாசர் 1958ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள மேல் பாக்கம் என்ற சிற்றூரில் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முஹம்மது ஹனீப். தந்தை மெஹபூப் பாஷா, தாய் மும்தாஜ் பேகம். நாசரின் குடும்பம் மிகவும் சாதாரணமானது. இவரது தந்தை சிறிய வியாபாரியாக இருந்தாலும், கலையின் மீது அவருக்கு தனிப்பட்ட ஈர்ப்பு இருந்தது. நாடகம் மற்றும் நடிப்பில் அவருக்கிருந்த ஆர்வம், நாசருக்கும் பரிணமித்தது. பள்ளிப் படிப்பை செங்கல்பட்டில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் முடித்த நாசர், பள்ளியிலேயே நாடகங்களில் ஆர்வம் கொண்டு கலந்து கொண்டார். அதன் பின்னர், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான பி.யு.சி.யை எழுதி வெற்றி பெற்று, சென்னையில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் கல்வியுடன் தனது கனவையும் நோக்கி பயணித்த நாசர், அங்கு நாடகக் குழுவில் சேர்ந்தார். அப்போது அவருடைய நடிப்புத் திறமை கல்லூரியில் பெரிதும் பாராட்டப்பட்டதை தொடர்ந்து நடிப்பின் மீதான ஆர்வம் அவருக்கு மேலும் அதிகரித்தது.
தற்போதைய நாசர் மற்றும் ஆரம்பகால நாசர்
இதனால் படிப்பை முடித்த பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் சேர்ந்து, திரைப்பட நடிப்பு, தொலைக்காட்சி நடிப்பு மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்றார். இருந்தும் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக சிறிது காலம் இந்திய விமானப்படையில் பணியாற்றிய அவர், திரைத்துறையில் நிலையான இடத்தைப் பெறுவதற்காக தனது போராட்டத்தை தொடங்கினார். இந்த நேரத்தில், கதைகள் மற்றும் கவிதைகள் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டு வந்த சமயத்தில்தான் இவரது நடிப்புத் திறமையை கண்டு வியந்த இயக்குநர் கே. பாலசந்தர், 1985 ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாண அகதிகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் இவரை திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். இதில், மனைவியை விட்டு பிரிந்து வாழும் கணவனாக நடித்த நாசர், அந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார். பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டவருக்கு ‘நாயகன்’ திரைப்படம் புதிய கதவுகளை திறந்து வைத்தது.
சினிமாவில் தனியிடம்
நாசர், கே. பாலசந்தர் இயக்கிய 'கல்யாண அகதிகள்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பின்னர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய 'வேலைக்காரன்' (1987), அமீர்ஜான் இயக்கிய 'வண்ணக் கனவுகள்' (1987) போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், அவர் அதிகம் செய்த கதாபாத்திரங்கள் எதிர்மறை தன்மை உடையவையாக இருந்தன. அதே நேரத்தில், யூகி சேது இயக்கிய 'கவிதை பாட நேரமில்லை' (1987) படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக நடித்தார். ஆனால், அந்த படம் பெரியளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதற்கிடையில், நாசரின் திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' (1987) அமைந்தது. இதில், கமல்ஹாசன் நடித்த வேலு நாயக்கரை வீழ்த்த நினைக்கும் காவல்துறை அதிகாரியாக சிறிய வேடத்தில் நடித்து, அசத்தலான நடிப்பால் கவனம் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க துவங்கினார் நாசர். குறிப்பாக, 'ரோஜா' (1992), 'தேவர் மகன்' (1992), 'பம்பாய்' (1995), 'குருதிப்புனல்' (1995), 'அவ்வை சண்முகி' (1997), 'இருவர்' (1997) ஆகிய திரைப்படங்களில் அவருடைய நடிப்பு மக்களின் பாராட்டைப் பெற்றது. இப்படி கமல், மணிரத்னம் போன்றோருடன் மட்டுமல்லாமல், 1990களில் பல்வேறு இயக்குநர்களின் படங்களிலும் நாசரின் திறமையான நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதில் பரதன் இயக்கிய ‘ஆவாரம் பூ’, வி. சேகர் இயக்கிய ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போன்ற படங்களில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை தொடர்ந்து நிரூபித்தார்.
'நாயகன்' திரைப்படத்தில் ஏசிபி பாட்டிலாக மற்றும் 'தேவர் மகன்' மாயனாக நடிகர் நாசர்
இது தவிர ‘மின்சாரக் கனவு’ படத்தில் இசைக் கலைஞராக, ‘பிரியங்கா’ படத்தில் வன்மம் நிறைந்த வழக்கறிஞராக, ‘தேசிய கீதம்’ படத்தில் முதலமைச்சராக, ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபராக என வெவ்வேறு வேடங்களில் நடித்து அசத்திய நாசர், 2000-ஆம் ஆண்டிற்குப் பிறகும் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்தார். குறிப்பாக தான் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதை ஒருபோதும் தலையில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் வைத்திராத நாசர், அந்த சமயம் பல அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடித்தார். அதில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, திருமுருகன் இயக்கிய ‘எம் மகன்’ போன்ற படங்களில் வில்லத்தனத்திலும், குணச்சித்திரத் தோற்றத்திலும் மிளிர்ந்து மிகுந்த கவனம் பெற்றார். ஏன் இன்றும் ‘எட்டு தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீகணேஷ் போன்ற பல்வேறு புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கி, திரையுலகில் தன் தனித்துவத்தை நிலைநிறுத்தி வரும் நாசர், எப்போதும் தன்னை ஒரு நடிப்பு பயிலும் மாணவனாகவே வெளிப்படுத்தி வருகிறார்.
கமல் தந்த கெளரவம்
நாசரின் வாழ்க்கையிலும் திரையுலகப் பயணத்திலும் நடிகர் கமல்ஹாசனின் பங்கு மிக முக்கியமானது. நாசரின் திறமையை உயர்வாக மதித்த கமல், அவருக்கு பல முக்கியமான வாய்ப்புகளை வழங்கியுள்ளார். அதற்கான சிறந்த உதாரணமாக 1995 ஆம் ஆண்டு பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘குருதிப்புனல்’ திரைப்படத்தை சொல்லலாம். இதில் கமல்ஹாசன், கௌதமி, அர்ஜுன் ஆகியோருடன் நாசர் பத்ரி என்னும் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருப்பார். சொல்லப்போனால் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை விட மிகுந்த அழுத்தம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை கமல் நாசருக்கு வழங்கிய நிகழ்வு அன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேபோல், 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கிய ‘தேவர் மகன்’ படத்தை கமல்ஹாசன் எழுதி, தயாரித்து, நடித்திருந்தார். இந்த படத்தில் மாயத்தேவன் என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த நாசர், தனது அபாரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் நடிப்பையும் மிஞ்சும் வகையில் நாசர் தனது திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் பெற்றிருந்தார். பிறகு இவ்விரு படங்களுக்கும் நேரெதிராக 1996 ஆம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் பாட்ஷா பாயாக வந்த நாசர், பேச்சுத்திறன் இல்லாதவராக நடித்து, கமலுடன் சேர்ந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பினார்.
இந்தியன் திரைப்படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக வரும் நெடுமுடி வேணுவுக்கு குரல் கொடுத்த நாசர்
அதே போல் இதற்கு முன்னர் 1994 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில், ஒரு அலுவலக மேலாளராக எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்த நாசர் நகைச்சுவையிலும் கலக்கி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருப்பார். பிறகு மீண்டும் 2003 ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், கமல்ஹாசன், ஆர்.மாதவன், கிரண் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ‘அன்பே சிவம்’ திரைப்படத்தில், கதை முழுவதும் வில்லத்தனங்களை செய்துவிட்டு இறுதியில் பக்தி வேடம் போட்டு நல்லவராக தன்னை கட்டிக்கொள்ளும் பெருமுதலாளி கந்தசாமி படையாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நாசர், வில்லத்தனத்தில் வியப்பை ஏற்படுத்தி பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார். அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘உத்தம வில்லன்’ திரைப்படத்திலும் முத்தரசன் என்ற கதாபாத்திரத்தில் நாசரின் நடிப்பு பெரிதும் கவனம் பெற்றிருந்தது.
என்றும் தனித்துவம்
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் தன் அபாரமான நடிப்புத்திறனால் கவனம் பெற்றவர் நாசர். எந்த மொழி திரையுலகில் நடித்தாலும், தனது அர்ப்பணிப்பு முழுமையையும் செலுத்தி, சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வரும் இவர், நடிகராக மட்டும் இல்லாமல், ‘அவதாரம்’, ‘முகம்’, ‘தேவதை’, ‘பாப்கார்ன்’ உள்ளிட்ட படங்களில் இயக்குநராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது தவிர பின்னணி குரல் கலைஞராகவும் திகழும் நாசர், ‘மதராசப்பட்டினம்’, ‘96’, ‘விக்ரம் வேதா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘ஆளவந்தான்’ போன்ற பல படங்களில் தனது சீரிய குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார். குறிப்பாக, ‘இந்தியன்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்கு இவர் கொடுத்த குரல், இன்றும் இவரது தனித்துவத்தையும், திறமையையும் எடுத்துக் காட்டுகிறது. சிறந்த நடிப்புக்கான தமிழ்நாடு அரசின் விருதுகளை ஐந்து முறையும், ஆந்திரப் பிரதேச அரசின் நந்தி விருதையும் வென்றுள்ள நாசருக்கு, இதுவரை தேசிய விருது வழங்கப்படாதது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே உள்ளது.
தமிழ் சினிமாவில் தன் தனித்துவமான வேடங்களால் மிளிரும் நாசர்
இருப்பினும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அதே பொறுப்பில் பணியாற்றி வரும் நாசர், சமூக மற்றும் அரசியல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்த அவர், உடல்நிலை காரணமாக தற்போது நடிப்பில் சற்றே குறைவுபடுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்திய வெகுஜன திரைப்படங்களின் முக்கியமான பன்முக திறமைசாலிகளிலும், தவிர்க்க முடியாத ஆளுமைகளிலும் ஒருவரான நாசர், தனது திரையுலகப் பயணத்தின் ஆரம்பக்காலத்தில் தனது தோற்றத்திற்காக பல முறை கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும், எதிர்மறையான கருத்துகளை மீறி, தனித்துவமான தோற்றத்தையும் வித்தியாசமான குரலையும் தனது அடையாளமாக மாற்றிக் கொண்டு, எந்த விதமான கதாபாத்திரத்தையும் திறமையாகவும் உணர்ச்சிகரமாகவும் உயிர்ப்பிக்க முடியும் என்பதைக் நிரூபித்து, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராகத் நிகழ்ந்து வரும் நாசர் தமிழ் சினிமாவின் பொக்கிஷமே. அவரின் நடிப்பு, வசன உரை, பல்துறை திறமைகள் மற்றும் திரைத்துறையில் அவரின் பங்களிப்பு எப்போதும் பாராட்டத்தக்கது. இத்தகைய மகா கலைஞனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது ராணி!