உலக அரங்கில் சீற தயாராகும் வெற்றிமாறன்! 'வாடிவாசல்' ஸ்பெஷல்...
தமிழ் சினிமாவில் பல திறமையான இயக்குநர்கள் இருந்தாலும், இன்று ஒரு தனித்துவமான இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன் மட்டும்தான்.
தமிழ் சினிமாவில் பல திறமையான இயக்குநர்கள் இருந்தாலும், இன்று ஒரு தனித்துவமான இயக்குநராக வலம் வருபவர் வெற்றிமாறன் மட்டும்தான். ஏனென்றால் அவர், தான் படிக்கும் புத்தகங்கள் எனும் அறிவு களஞ்சியத்தில் இருந்து கதைகளை தேர்ந்தெடுத்து, அதனை வெகு எதார்த்தமான வாழ்வியலோடு கலந்து ஒரு படைப்பாக எடுத்து, அதன் வாயிலாக பார்வையாளர்களிடம் அதிகமான எதிர்பார்ப்பை தூண்டும் திறன் பெற்றிருப்பதால் தான். இன்றைய சூழலில் திரையுலகிற்கு வந்து ஒன்றிரண்டு படங்களில் வசூல் ரீதியாக ஹிட் கொடுத்துவிட்டால், தான்தான் மிகப்பெரிய இயக்குநர் என்று கர்வம் கொள்ளும் எத்தனையோ இயக்குநர்களுக்கு மத்தியில், இன்றும் வெற்றிமாறன் தான் கதைக்காக படம் இயக்குபவன் என்று கதையையும், அந்த கதைக்கு பொருத்தமான நடிகர்களையும் மட்டுமே நம்பி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அத்தகைய திறமை வாய்ந்த இயக்குநரான வெற்றிமாறன் 2007-ஆம் ஆண்டு ‘பொல்லாதவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வருடத்திற்கு ஒன்று என்று கூட இல்லாமல் வெறும் ஏழு படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். அப்படங்கள் அனைத்தும் இன்றும் சிறந்த படைப்புகளாக கொண்டாடப்படுவதுடன் பல விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளதுதான் சிறப்பு. இப்படி திறமை வாய்ந்த இயக்குநரான வெற்றிமாறன் தற்போது இயக்கிவரும் படங்கள் குறித்தும், அதன் பின்னணி குறித்தும், அவை உலக அரங்கில் என்ன மாதிரியான மாற்றத்தை உண்டாக்க போகிறது என்பது குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
மாற்றத்தை தந்த தனுஷ்
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா கலைஞரான இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளராக தனது கலை பயணத்தை தொடங்கிய வெற்றிமாறன் இன்று தொட்டிருக்கும் உயரம் என்பது அபரிமிதமானது. பொதுவாகவே சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையிலான புரிதல் என்பது மிக முக்கியமானதாக கருதப்படும். காரணம் ஒரு படத்தின் வெற்றிக்கு இவ்விருவரின் பங்களிப்பு என்பது முதன்மையானது என்பதால்தான். அந்த வகையில், வெற்றிமாறன் தமிழ் சினிமாவிற்குள் வந்த தொடக்க காலத்தில் இருந்தே அவரோடு புரிதலோடு கூடிய அன்புடன் இன்றும் நட்பு பாராட்டுவது என்னவோ நடிகர் தனுஷ்தான். இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில், 'அது ஒரு கனா காலம்’ படத்தில் நடித்த போது, நடிகர் தனுஷிற்கு அந்தப் படத்தின் உதவி இயக்குநராக அறிமுகமானவர்தான் வெற்றிமாறன். அப்போது ஏற்பட்ட அந்த நட்பு ‘பொல்லாதவன்’ ஆரம்பித்து ‘அசுரன்’ வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தில் பணிபுரியும் போதே, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரியும் இயக்குநர், நடிகருக்கு மத்தியில், வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி 4 படங்களில் ஒன்றாக பணிபுரிந்து வெற்றி கூட்டணியாக வலம் வருகிறது என்றால் அது ஆச்சரியமான விஷயம்தான்.
படப்பிடிப்பு தளங்களில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ்
இவ்விருவரின் இந்த நட்பு தொடர்ந்து நீடிக்க, மிக முக்கிய காரணமாக அமைந்தது முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்தின் வெற்றிதான். ‘துள்ளுவதோ இளமையில்’ ஆரம்பித்து ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ‘ சுள்ளான்’ என வரிசையாக தனுஷ் நடித்திருந்தாலும், அவரின் திரை வாழ்க்கையில், முழு ஆக்ஷன் திரைப்படமாக முதல் முதலாக வந்து மாபெரும் வெற்றி படைத்தது இந்த ‘பொல்லாதவன்’ தான். எப்படியாவது ஒரு பைக் வாங்கி விட வேண்டும், வாங்கிய பிறகு அதனை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும் என்ற நடுத்தர குடும்பத்து இளைஞர்களின் தவிப்பையும், ஆசையையும் அச்சு அசலாக திரையில் காட்டியிருந்த இந்த படம் நடிப்புலகில் தனுஷின் வேறொரு பரிமாணத்தை காட்டியது. இதனால் இப்படம் வெற்றிமாறன் - தனுஷ் இருவருக்குமே அவர்களது திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக மட்டுமின்றி, அடுத்த கட்டத்திற்கு தங்களை நகர்த்தி சென்ற படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களும் மாஸ் ஹிட் படங்களாக அமைந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணிதான் என்ற எண்ணத்தை அவர்களது ரசிகர்கள் மத்தியில் உண்டாக்கியது.
தேசிய விருது டு ஆஸ்கர்
தமிழ் திரையுலகில் அதிகம் பேசாமல், தனது வெற்றியை அமைதியாக வெறும் ஒரு புன்சிரிப்போடு பதிவு செய்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இதுவரை இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். 2011-ஆம் ஆண்டு வெளிவந்த ’ஆடுகளம்’ படத்தில் கதையின் நாயகனாக தனுஷ் நடிக்க, அப்படத்தினை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். வெற்றிமாறன் - தனுஷின் இரண்டாவது படைப்பாக வந்த இப்படம் சேவல் சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் கே.பி.கருப்பாக ஒரு லுங்கி, வழித்து சீவிய தலை என தன் இயல்பான தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தனுஷ். மேலும் இப்படத்தில் தனுஷின் சிறந்த நடிப்புக்காகவும், வெற்றிமாறனின் சிறந்த திரைக்கதைக்காகவும் 2 தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்கு முன்பு வரை தனுஷ் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், தனது சிறந்த நடிப்பிற்காக பிலிம்பேர் போன்ற எத்தனையோ விருதுகளை பெற்றிருந்தாலும், முதல் முறையாக திரையுலகமே வியந்து பார்க்கும் படியான வகையில், தேசிய விருது கிடைத்தது என்றால் அது வெற்றிமாறனால் மட்டுமே சாத்தியமானது. இப்படத்தில் இவ்விருவருக்கும் கிடைத்த இந்த விருது இவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது மட்டுமின்றி இருவருக்குமான நட்பையும், புரிதலையும் மேலும் அதிகமாக்கியது. இதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து அறிமுக இயக்குநராக வந்த மணிகண்டனை வைத்து ‘காக்கா முட்டை’ என்ற படத்தை தயாரிக்க அப்படத்தில் சிறப்பாக நடித்திருந்த இரண்டு சிறுவர்களுக்கும் தேசிய விருது கிடைத்தது. மேலும் சிறந்த திரைப்படத்திற்கான நார்வே தமிழ் திரைப்பட விழா விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த படைப்பிற்கான விருதினையும் பெற்றது.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்களின் காட்சிகள்
இதனையடுத்து ‘அட்டகத்தி’ பட ஹீரோவான தினேஷை வைத்து ‘விசாரணை’ என்றொரு படத்தினை வெற்றிமாறன் இயக்க, தனுஷ் தயாரித்தார். நாவல்களை தழுவி படம் எடுக்கும் பழக்கம் கொண்ட வெற்றிமாறன் நாவலாசிரியர் மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலின் தழுவலாக இப்படத்தையும் எடுத்து வெளியிட்டார். படத்தில் விசாரணையின் போது காவல்துறையினர் நடத்தும் அத்துமீறல்களை, யதார்த்தமான திரைக்கதை அமைப்புடன் காட்டமாக வெளிப்படுத்தியிருந்த விதம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. மேலும் 63-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில், சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வெற்றிமாறன் - தனுஷ் இருவரும் பெற்றனர். அதோடு அந்த ஆண்டிற்கான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சார்பாக ‘விசாரணை’ திரைப்படம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், வெற்றிமாறன் நடிகர் சிம்புவை வைத்து ‘வடசென்னை’ படத்தினை இயக்கலாம் என்றிருந்த போது அவரின் கால்ஷீட் கிடைக்காததால் மீண்டும் தனுசுடன் கைகோர்த்தார். அந்த படத்தினை தனுஷே தயாரித்து, நடிக்கவும் செய்தார். அந்த படமும் தனுஷின் திரை வாழ்வில் முக்கியமான படமாக அமைந்தது. இதையடுத்து நான்காவது முறையாக ‘அசுரன்’ திரைப்படத்தில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி இணைந்தது. கொலை செய்த தனது மகனை காப்பாற்ற போராடும் நடுத்தர வயதுடைய அப்பா சிவசாமியாக நடிகர் தனுஷ் காட்டியிருந்த நடிப்பு அவ்வளவு உயிரோட்டமாக இருந்தது மட்டுமின்றி பார்ப்போரை கலங்கச் செய்தது. இதனால் இப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இரண்டாவது முறையாக மீண்டும் சிறந்த நடிகர் மற்றும் இயக்குநருக்கான தேசிய விருதை வெற்றிமாறன் - தனுஷ் இருவரும் பெற்றனர்.
விருதுகளை குவிக்கும் 'விடுதலை'
'விடுதலை' படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இடம்பெறும் காட்சிகள்
வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வெளியான திரைப்படம்தான் ‘விடுதலை பாகம் 1’. விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியராகவும், சூரி காவலராகவும் நடித்திருந்த இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், தமிழ், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இயற்கை வளங்களைச் சுரண்டுவதை எதிர்த்து போராடுவதற்காக ஆயுதம் ஏந்தும் போராளிகள், அவர்களை ஒழிப்பதற்காக முகாம் அமைத்து மக்களை விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யும் காவல்துறை, அதில் மனசாட்சியுள்ள கடைநிலை ஊழியராக குமரேசன் என்ற காவலர் ஒருவர் என வெளிவந்த 'விடுதலை' பாகம் ஒன்று பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. வெற்றிமாறனின் அடுத்த படைப்பு என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன. மேலும் உலக அளவில் 28 கோடி ரூபாய் வசூல் சாதனையும் நிகழ்த்தின. இந்த நிலையில், ‘விடுதலை’ முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் இணைந்த அதே கூட்டணிதான் இதிலும் பணியாற்றி வருகிறது. படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் படம் திரையிடப்பட உள்ளது. அதேபோன்று ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் வரும் 31-ஆம் தேதி அன்று திரையிடப்பட உள்ளது. மேலும் இரண்டு பாகங்களும் ‘லைம்லைட்’ பிரிவின் கீழ் திரையிடப்படவுள்ளன. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநரான வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அடுத்து சீற வரும் 'வாடிவாசல்'
முதல் முறையாக வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம்தான் 'வாடிவாசல்'. இப்படத்திற்காக இருவரது ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். கிராமத்து பின்னணியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். தொடர்ந்து இப்படம் தொடங்குவது தள்ளிப்போய் கொண்டே இருந்தது. காரணம் வெற்றிமாறன் ‘விடுதலை’ பாகம் 2-லும், சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்திலும் பிசியாக இயங்கிக் கொண்டிருந்ததால்தான். இவ்விரு படங்களின் பணிகளும் முடிவடைந்த உடன் ‘வாடிவாசல்’ படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் டெஸ்ட் சூட் தொடங்கி அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் நடிகர் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் வாடிவாசல் முன்பு நிற்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
'வாடிவாசல்' பட போஸ்டர் மற்றும் சூர்யா காளையுடன் இடம்பெறும் புகைப்பட காட்சி
மேலும் இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில், 'பருத்திவீரன்' படம் தொடர்பான பிரச்சினைகள் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா எப்படி அமீருடன் இணைந்து நடிப்பார் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதனால் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. அண்மையில் தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்பட்ட 'கலைஞர் 100' என்ற நிகழ்ச்சியில் வெற்றிமாறனுடன் கலந்துகொண்ட இயக்குநர் அமீரை, நடிகர் சூர்யாவும் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இதனால் 'வாடிவாசல்' படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது உறுதியாகியுள்ளது. வெற்றி மாறனின் படைப்பு என்றாலே நிச்சயம் அது உலக அரங்கில் இடம்பெறும் படமாகவும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பபை எகிற வைக்கும் படமாகவும் இருக்கும் என்பதால் ‘ வாடிவாசல்’ படமும் சீறிப்பாய்ந்து தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் என்று நம்புவோம்.