வாய்ப்புகளை அள்ளித்தந்த திருமணம் - அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் கீர்த்தி பாண்டியன்

மிகவும் இளம் வயதிலேயே சிங்கப்பூரில் தனது சொந்த விநியோக நிறுவனத்தை நடத்தி வந்தார் கீர்த்தி. என்னதான் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் கீர்த்திக்கு நடிப்பின்மீது எப்போதும் ஆர்வம் இருந்தது.

Update:2024-01-30 00:00 IST
Click the Play button to listen to article

என்னதான் நிறத்துக்கும், அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பேசினாலும், இன்றும் நமது நாட்டில் நிற வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் ஃபேர்னெஸ் க்ரீம்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதேசமயம் இதுபோன்ற எண்ணங்களை உடைக்கும்விதமாக சினிமா உலகம் திறமைகளுக்கு வாய்ப்பளிப்பதையும் காணமுடிகிறது. சினிமா பின்னணியிலிருந்து வந்தபோதிலும்கூட நிறம் மற்றும் உருவ கேலிக்கு ஆளான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். மேலும் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏன் இப்படி ஒரு பெண்ணை அசோக் செல்வன் திருமணம் செய்துகொண்டார்? என்று சமூக ஊடங்களில் அவரை கேலி கிண்டல் செய்தனர். ஆனால் அவற்றை உடைத்தெறியும்விதமாக பதில் கொடுத்தனர் இந்த தம்பதியர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அதிக படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் கீர்த்தி பாண்டியன். கீர்த்தி பாண்டியனின் பின்னணி, காதல் மற்றும் விமர்சனங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.


பெற்றோருடன் மற்றும் சிறுவயதில் கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் - ஓர் அறிமுகம்

அரசியல்வாதி, இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர் அருண் பாண்டியன். இவருடைய கடைசி மகள் கீர்த்தி. 1992ஆம் ஆண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி பாண்டியன், இங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். படித்து முடித்த பிறகு பாலட் மற்றும் சால்சா நடனங்களை கற்றுத் தேர்ந்து 2015ஆம் ஆண்டு நாடக துறையில் இணைந்து பணியாற்றினார். மேலும் தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான A&P குழுமத்தின் தலைமை இயக்குநராக சிலகாலம் பணியாற்றினார். அந்த சமயத்தில் 2015ஆம் ஆண்டு ‘சவாலே சமாளி’ போன்ற படங்களுக்காக வேலை செய்தார். மிகவும் இளம் வயதிலேயே சிங்கப்பூரில் தனது சொந்த விநியோக நிறுவனத்தை நடத்தி வந்தார் கீர்த்தி. என்னதான் பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் கீர்த்திக்கு நடிப்பின்மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. அதனாலேயே பட வாய்ப்பை தேடி அலைந்தார்.


‘தும்பா’ மற்றும் ‘அன்பிற்கினியாள்’ படங்களில் கீர்த்தி 

வாய்ப்புகள் கிடைக்காமல் அலைந்த கீர்த்தி

பட வாய்ப்புகளை தேடிச் செல்லும்போது, தான் ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மகள் என்பது தெரியக்கூடாது என்பதற்காக அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் தனது திறமையை மட்டும் வெளிக்காட்டி வாய்ப்பு தேடியதாக நேர்க்காணல்களில் தெரிவித்திருக்கிறார் கீர்த்தி. இருப்பினும் கீர்த்தியின் மெலிந்த தேகம் மற்றும் தோலின் நிறத்திற்காகவே பல இடங்களில் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதையும் மீறி வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களை தான் ஏற்கவில்லை எனவும் கூறியுள்ளார். அதன்பிறகுதான் ஹரிஷ் ராம் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘தும்பா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் கீர்த்தி. ஆனாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான ‘அன்பிற்கினியாள்’ படத்தில் தனது அப்பா அருண் பாண்டியனுடன் சேர்ந்து நடித்ததில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெற்றார். இருப்பினும் இதுவும் வசூல்ரீதியான வெற்றியை பெறவில்லை. இந்த படம் ‘ஹெலன்’ என்ற மலையாளப்படத்தின் ரீமேக் ஆகும்.


தனது அக்கா மகளுடன் வயலில் வேலைசெய்த கீர்த்தி பாண்டியன் 

விவசாயி கீர்த்தி பாண்டியன்

இரண்டு படங்களில் நடித்திருந்த கீர்த்தி பாண்டியன் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று தங்கினார். அங்குள்ள தங்களது வயலில் வேலைகளை செய்ய ஆரம்பித்தார். ஊரடங்கு காலத்தில் சமையல், நடனம் என்று பிற நடிகர், நடிகைகள் பொழுதுபோக்கி கொண்டிருக்க, கீர்த்தி, விவசாயத்தில் இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். தனது அக்கா மகளுடன் நெற்பயிர் நடுதல், டிராக்டர் ஓட்டுதல் போன்ற படங்களை வெளியிட்டு ட்ரெண்டானார். இதுகுறித்து, “என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றுக்கொள்கிறேன்” என அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

திரைப்படங்களிலிருந்து ப்ரேக் எடுத்திருந்த கீர்த்தி பாண்டியனுக்கும், நடிகர் அசோக் செல்வனுக்கும் திருமணம் என்ற அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானதிலிருந்து மீண்டும் ட்ரெண்டானார் கீர்த்தி. “அட! இவங்க ரெண்டு பேரும் எப்படி காதலிச்சாங்க?” என்ற கேள்விதான் 2023ஆம் ஆண்டின் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றானது.


கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் திருமணத்தின்போது

அசோக் செல்வனுடனான காதல் திருமணம்

கீர்த்தி பாண்டியன் சினிமா பின்புலம் கொண்டவர். ஆனால் அசோக் செல்வனோ எந்தவொரு திரை பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். குறிப்பாக தெகிடி, பீட்சா 2, ஓ மை கடவுளே மற்றும் போர்த்தொழில் போன்ற படங்களால் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடம் பிடித்து வைத்திருக்கும் அசோக் செல்வனுக்கு, எப்போது மேடையேறினாலும் அவருக்கு இளம்பெண்கள் ப்ரபோஸ் செய்வதும், அவர் அதை நிராகரிப்பதும் சமூக ஊடங்களில் அவ்வப்போது வலம் வருவதுண்டு. இந்நிலையில் அசோக் தனது ரசிகைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக, திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி கீர்த்தியின் ஊரில் வைத்து குடும்பத்தார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்கு பிறகுதான் உருவம் மற்றும் நிறத்தை வைத்து பல்வேறு கேலி கிண்டல்களுக்கு ஆளானார் கீர்த்தி. “அசோக் செல்வனுக்கு வேறு பெண்ணே கிடைக்கலையா?” என்பது போன்ற கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அசோக் செல்வன், “இந்த உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான்” என்று குறிப்பிட்டு போட்டோக்களை பதிவிட்டு அனைவரின் வாயையும் அடைத்தார்.

மேலும் தொடர்ந்து நேர்க்காணல்களில் பங்கேற்ற இருவரும் தங்களுடைய 10 ஆண்டுகால ரகசிய காதல் கதையை அனைவரின் முன்பும் பகிர்ந்தபோதுதான், கீர்த்தி நல்ல குணம் கொண்டவர் என்ற சில பாசிட்டிவ் கமெண்டுகளும் கிடைத்தன. தங்களது திருமணத்தை முன்னிட்டு இருவரின் நடிப்பில் வெளியான ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் கடந்த ஆண்டு இறுதியில் ரிலீஸாகி பலரின் வரவேற்பையும் பெற்றது.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையில்...

திருமணத்திற்கு முன்பு வரை சினிமாவிலிருந்து ப்ரேக் எடுத்திருந்த கீர்த்தி மீண்டும் சிவம் சி கபிலன் இயக்கத்தில் ‘கண்ணகி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து ஆழமாக பேசப்பட்ட இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. தொடர்ந்து தற்போது கணவன் அசோக் செல்வனுடன் இணைந்து ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் கீர்த்தி. எஸ்.ஜெயக்குமார் இயக்க, லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடேட் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது.


‘கண்ணகி’ -  ‘ப்ளூ ஸ்டார்’ - ‘கொஞ்சம் பேசினால் என்ன?’ திரைப்படங்களின் போஸ்டர்கள்

‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் ஷாந்தனு, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகை கீர்த்தி, “ரஞ்சித் அண்ணாவின் படம் என்றதுமே அரசியல் பேச ஆரம்பித்து விட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு, உடை மற்றும் குடிக்கும் தண்ணீர் என அனைத்திலும் அரசியல் கலந்திருக்கிறது. அதை பற்றி பேசவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. அதை பற்றி நீங்கள் பேச தவிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். எல்லா படங்களிலும் அரசியல் இருக்கிறது. இந்த படத்திலும் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் அண்ணா பேசும் விஷயங்கள் முக்கியமானவை. அந்த விதத்தில் என்னுடைய குரலை இந்த படத்தில் பயன்படுத்துவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்று நாடு இருக்கிற நிலைமையை பார்க்கும்போது படத்தில் பாடலாசிரியர் அறிவு பாடிய ‘காலு மேல காலு போடு ராவண குலமே’ என்று பாடத் தோன்றுகிறது” என பேசினார். கணவன் - மனைவி இணைந்து நடிக்கும் படம் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக உணர்வதாக இருவரும் கூறியுள்ளனர். இப்படத்தை தொடர்ந்து கீர்த்தி நடிப்பில் ‘கொஞ்சம் பேசினால் என்ன?’ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. பொதுவாக நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு வாய்ப்பு என்பது குறைந்துவிடும் என்பார்கள். ஆனால் கீர்த்திக்கோ அது அதிர்ஷ்டமாக அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு பிறகு குடும்பம், பிஸினஸ் ஒருபுறம் இருக்க, அடுத்தடுத்த படங்களில் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார் கீர்த்தி பாண்டியன். 

Tags:    

மேலும் செய்திகள்