நடிகர் சூர்யாவிடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு கைமாறிய 'புறநானூறு' திரைப்படம் - SK25 கூட்டணி
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா, தனது தனித்துவமான கதைகளால் எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவர், அடுத்ததாக 'புறநானூறு' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா, தனது தனித்துவமான கதைகளால் எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று' போன்ற சிறப்பான படங்களை கொடுத்த இவர், அடுத்ததாக 'புறநானூறு' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதிய சுதா கொங்கரா, அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம், 'புறநானூறு' படத்தின் பூஜை #SK25 Production No 2 என்ற பெயரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா மற்றும் அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதோடு, இந்நிகழ்வு கோலிவுட்டின் ஹாட் டாபிக்காகவும் மாறியது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படம் இந்தி திணிப்பு எதிர்ப்பை மையமாகக் கொண்ட கதை என்பதால், படத்தின் அறிவிப்பில், பாரதிதாசனின் "வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்" என்ற வரிகள் இடம் பெற்றிருந்தன. இப்படி துவக்கமே அடடா என சொல்லும்படி மிக அற்புதமாக அமைந்துள்ள நிலையில், இப்படம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கைமாறிய படம்
சூர்யாவிடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு கைமாறிய 'புறநானூறு'
சூர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது 'சூரரைப்போற்று' திரைப்படம். இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான இந்தப் படம் சூர்யாவின் மார்க்கெட்டை புத்துயிர் பெறச் செய்தது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்து 'புறநானூறு' என்ற புதிய படத்தை உருவாக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட போது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எட்டியது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை. பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. சூர்யா, துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க இருந்த இந்த படத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு பின்னால் பல காரணங்கள் கூறப்பட்டன. சூர்யா, 'புறநானூறு' படத்தை முடித்த பின்னர் பாலிவுட்டில் 'கர்ணா' என்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், 'புறநானூறு' படத்தின் கதைக்கரு ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் அமைந்திருந்ததால், சூர்யா இந்த படத்தில் நடிப்பது எப்படி சரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து சூர்யாவும் ஜோதிகாவும் ஆலோசித்து, 'கர்ணா' படத்திற்காக 'புறநானூறு' படத்தை தவிர்க்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த முடிவு, சூர்யா மற்றும் சுதா கொங்கரா இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் சூர்யா 'புறநானூறு' படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் பரவின. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியே வராமல் இருந்த நிலையில், 'புறநானூறு' படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி இப்படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், 'புறநானூறு' என்ற தலைப்பு உரிமை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடம் இருப்பதால், இந்த தலைப்பை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் எழும் என்று கூறப்படுகிறது.
SK25 சிறப்புகள்
'புறநானூறு' திரைப்படத்தின் போஸ்டர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தனது சமீபத்திய வெற்றி படம் 'அமரன்' மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்று, சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்ரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து, பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'புறநானூறு' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'புறநானூறு' படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இந்த படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாருக்கு 100வது படம். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அனைத்து நடிகர்களும் குறைந்தபட்ச அட்வான்ஸ் தொகையை மட்டுமே பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் வெற்றியைப் பொறுத்து மீதமுள்ள தொகை வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. படத்தை நேர்த்தியாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ‘புறநானூறு’ படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கின் போது சிவகார்த்திகேயனுக்கும் சுதா கொங்கராவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், சிவகார்த்திகேயன் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறினார் என்றும் செய்திகள் பரவின. ஆனால், கடந்த வாரம் நடந்த பூஜை விழாவில் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டதால், இந்த செய்திகள் வதந்திதான் என்பது தெளிவானது.
மூவர் கூட்டணி
'SK25' பூஜையில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அதர்வா முரளி
கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி, ‘புறநானூறு’ படத்தின் பூஜை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. #SK25 Production No 2 என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழாவில், படத்தின் நாயகர்கள் ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி முதல் முறையாக இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதேபோல், அதர்வாவும் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளதோடு, இந்த படம், தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. பலரும் ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தாலும், தற்போதைய தகவல்களின்படி, அவர் சிவகார்த்திகேயனுக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அதர்வாவும் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறராம். அதாவது, இந்த மூன்று நட்சத்திரங்களுக்கும் கிட்டத்தட்ட சமமான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்கள்தான் வழங்கப்பட்டுள்ளதாம். முன்னதாக படத்தின் பூஜை விழாவில் வைக்கப்பட்ட சுவரொட்டியில், ஜெயம் ரவியின் பெயர் முதலில் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகுதான் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வாவின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது சிவகார்த்திகேயன் மிக பிரபலமான நடிகராக இருந்தாலும், ஜெயம்ரவி அவரை விட சீனியர் என்பதாலேயே இவ்வாறு அமைக்கப்பட்டிருந்ததாம். இந்த விஷயம் பூஜை விழாவில் கலந்து கொண்ட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்ததோடு, இதற்காக சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டியும் வருகின்றனர்.
என்னதான் கதை?
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக உள்ள 'SK25' திரைப்படம் ஒரு பீரியட் படமாக உருவாக உள்ளதாம். இந்த திரைப்படம், 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றார் போலவே படத்தின் பூஜை வீடியோ மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் பழங்கால உடைமைகள், காட்சிகள், போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள் போன்றவை இந்த படம் ஒரு பீரியட் படமாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், பூஜையின்போது சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகிய மூவரும் கிளீன் ஷேவ் லுக்கில் காட்சியளிப்பது, அவர்கள் கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள் என்பதை உணர்த்துவதுபோல் உள்ளது. 1965-ல் நடைபெற்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகிய இரண்டும் படத்தின் முக்கிய கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்லூரியில் போராட்டம் நடத்துவதற்கு தேவையான காட்சிகளை எடுப்பதற்காக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா அளித்திருந்த பேட்டி ஒன்றில், இந்த படம் தனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது என்றும், அதன் கருத்து தன்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது என்றும் கூறியிருந்தார். தனது முந்தைய வெற்றி படங்களான 'இறுதிச்சுற்று' மற்றும் 'சூரரைப் போற்று' படங்களைவிட இந்த படத்தின் கருத்து தன்னை மிகவும் கவர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். குறிப்பாக இப்படத்தின் கரு ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டிருப்பதாக சொன்ன சுதா கொங்கரா, இது பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தாலும், பெண் கல்வி விஷயத்தில் ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலேவுக்கு பதிலாக சாவர்க்கரை தவறான முன்னுதரணமாக சுட்டிக்காட்டி மன்னிப்பு கேட்டது போல் அல்லாமல், தமிழர் வரலாற்றை சரியாகவும், உண்மையாகவும் அவர் பதிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.