சளி, இருமலுக்கு உகந்த மூலிகை சூப்! எளிமையாக செய்வது எப்படி?

மழை, குளிர்காலங்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றார்போல், பத்து வகை மூலிகைகள் கலந்த சூப்பை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திரு. சீதாராமன்.

Update:2024-12-10 00:00 IST
Click the Play button to listen to article

மழைக்காலம், குளிர்காலம் வந்தால் நம் உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய தொற்றுகளும் கூடவே வந்து சிரமப்படுத்தும். அப்படியான உடல் தொந்தரவுகளில் மிகவும் பிரதானமாக இருப்பது சளி, இருமல்தான். சளி பிடித்தால் தொண்டைக்கு இதமாக சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே என்று பலரும் சிந்திப்பது உண்டு. அந்த வகையில், மழை, குளிர்காலங்களில் செய்து சாப்பிடுவதற்கு ஏற்றார்போல், பத்து வகை மூலிகைகள் கலந்த சூப்பை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திரு. சீதாராமன். இந்த சூப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வரையும், பெரியவர்கள் 50 முதல் 100ml வரையும் பருகலாம்.


பத்து வகை மூலிகை சூப் செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து அது சூடானதும் இரண்டு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணெய் விட்டு அதில் சின்ன வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, பூண்டு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து ஒரு துண்டு தேங்காய், புதினா, மல்லி இவற்றை சேர்த்து வதக்கிய பிறகு மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி கொள்ளவும்.

இவை அனைத்தும் நன்கு வதங்கியதும் அதனை ஒரு தட்டில் கொட்டி சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனிடையே தண்ணீரில் கொஞ்சம் கல்லு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பத்து வகை மூலிகை இலைகளையும் நன்கு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.


மூலிகைகளை நீரில் அலசி நன்கு வதக்குதல் 

அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து அது சூடானதும் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அதில் சுத்தம் செய்த மூலிகை இலைகளை போட்டு நன்கு வதக்கிக் பின் சூடு ஆறியதும் அவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் அரைத்து வைக்கப்பட்டுள்ள மூலிகை இலைகளை முதலில் சேர்க்கவும்.


தண்ணீர் கொதித்த பிறகு அரைத்த மூலிகை சாரை அதில் கலக்கும் தருணம் 

அதனை தொடர்ந்து அரைத்து எடுக்கப்பட்ட சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் மசாலாவை இரண்டு ஸ்பூன் அளவுக்கு அந்த நீரில் கலக்கவும்.

ஏற்கனவே நன்கு வதக்கப்பட்ட பொருட்கள் என்பதால் ஒரு கொதி அளவு வைத்தால் போதுமானது. கொதிவந்த பிறகு கல் உப்பு சேர்த்து கருவேப்பில்லை, புதினா, மல்லி இவற்றை பொடியாக நறுக்கி மேலாக தூவி இறக்கினால் ஆரோக்கியமான சூப் தயார்.

இந்த அளவு சூப்பை பத்து பேருக்கு பரிமாறலாம். மழை, குளிர் நேரங்களில் சளி, இருமலுக்கு உகந்தது.


ஆரோக்கியமான பத்து வகை மூலிகை சூப் 

மூலிகை சூப்பின் பயன்கள்

காபி, டீ போன்ற பானங்களுக்கு பதிலாக மூலிகை சூப்பை நாம் பருகும்போது அது நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஆற்றலை அதிகப்படுத்தும் அருமருந்தாக பயன்படும்.

செரிமானத்தை மேம்படுத்துவதுடன் மன அழுத்தத்தையும் போக்கும். உடலுக்கு வலு அளித்து ஊட்டமளிக்கும்.

அதேபோன்று மழை மற்றும் குளிர் காலங்களில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும் தருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

இந்த மூலிகை சூப், சீன கலாச்சாரத்தில் அதிகமாகவே பயன்பாட்டில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்