தோசை, அடை, சப்பாத்திக்கு ஏற்ற "தக்காளி அவியல்" - இப்படி செஞ்சு பாருங்க!
அவியல் என்றவுடன் உணவுப்பிரியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவரவர் ஊருக்கு ஏற்ற மாதிரியான அவியல்களின் சிறப்புகள், அதன் சுவை எப்படி இருக்கும் போன்றவை நினைவில் வந்துபோகும்.
அவியல் என்றவுடன் உணவுப்பிரியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் அவரவர் ஊருக்கு ஏற்ற மாதிரியான அவியல்களின் சிறப்புகள், அதன் சுவை எப்படி இருக்கும் போன்றவை நினைவில் வந்துபோகும். அதிலும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ உணவு வகைகளில் மிகவும் பிரதானமாக இடம்பெறும் ஒரு உணவு என்றால் அது அவியல்தான். குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் இந்த அவியல்கள் இடம்பெறாத நிகழ்வுகளே இருக்காது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த சுவை மிக்க அவியல் பல வகையான நாட்டுக் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் இன்று நாம் பார்க்க இருப்பது தோசை, அடை, சப்பாத்தி, சாதம் ஆகியவற்றுக்கு ஏற்ற ஒன்றான தக்காளி அவியல். இதனை செய்வது எப்படி என்பதை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. சாரதா சந்திரசேகர்.
தக்காளி அவியல் செய்முறை
அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைக்கவும்.
குக்கரில் பொடி பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒன்றாக சேர்த்து வேக வைக்கவும்.
இதனை தொடர்ந்து துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றுடன் வேகவைத்த தக்காளி கலவையையும் சிறிதளவு சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்கு மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்து தக்காளியை வேக வைக்கும் தருணம்
இப்போது மீதமுள்ள வேகவைத்த தக்காளி கலவையை நன்கு மசித்து அதனுடன் அரைத்து எடுத்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கொதிக்க விடவும்.
மசாலா கலவை நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைப்பதற்கு முன் புளிப்பில்லாத கெட்டி தயிரை நன்கு கலக்கி அதில் ஊற்றி கிளறி விடவும்.
பிறகு மேலாக ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து, இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை விட்டு இறக்கினால் சுவையான அதே நேரம் ஆரோக்கியமான தக்காளி அவியல் தயார்.
புளிப்பில்லாத கெட்டி தயிரை, மசாலா கலவையுடன் சேர்க்கும் காட்சி
இந்த தக்காளி அவியலை தோசை, இட்லி, அடை, சப்பாத்தி, சாதம் ஆகியற்றில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தக்காளியின் பயன்கள்
மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை தரவல்லது.
இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கவல்லது.
தக்காளி அவியலில் இறுதியாக தேங்காய் எண்ணெய் விடுதல்
தக்காளியில் விட்டமின்கள், பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது மட்டுமின்றி இதனை அடிக்கடி நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கண் ஆரோக்கியம், செரிமான பிரச்சினைகளை சரி செய்வது மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது போன்ற பலவற்றிற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது.