சுவையான ஆரோக்கியமான "குதிரைவாலி முசுமுசுக்கை அடை"!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக் கூடிய உணவு பதார்த்தங்களை சாப்பிட்டால் நோயற்ற ஒரு வாழ்வை நம்மால் சந்தோஷமாக வாழ முடியும்.

Update: 2024-12-16 18:30 GMT
Click the Play button to listen to article

குளிர், மழை காலம் வந்தாலே எல்லோருக்கும் சூடாக சாப்பிட மிகவும் பிடிக்கும். அதிலும், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக் கூடிய உணவு பதார்த்தங்களை சாப்பிட்டால் நோயற்ற ஒரு வாழ்வை நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். அந்த வகையில் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் உணவுமுறைகளை நம் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடுவது எப்படி என்பதை தெடர்ந்து நான்கு, ஐந்து எபிசோடுகளாக நமது ராணி ஆன்லைன் தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த முறை தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட சிறுதானிய வகைகளில் ஒன்றான குதிரைவாலியை கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரியான “குதிரைவாலி முசுமுசுக்கை கீரை அடை” செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.


"குதிரைவாலி முசுமுசுக்கை கீரை அடை" செய்முறை

குதிரைவாலி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஊறவைத்த அரிசி, பருப்பை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து எடுக்கப்பட்ட அடை மாவில் சிறிதளவு பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடவும்.


தோசை கல்லில் அடைக்கு தேவையான எண்ணெய் ஊற்றும் தருணம்

இதனை தொடர்ந்து, நீரில் கொஞ்சம் மஞ்சள்தூள், கல்லுப்பு சேர்த்து அதில் முசுமுசுக்கை கீரையை போட்டு நன்கு கழுவி எடுத்து மிக்சியில் மைய அரைத்து, ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ள அடை மாவில் சேர்க்கவும்.

இப்போது கடாயில் ஒரு தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் லேசாக எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி அடை மாவை எடுத்து தோசை போன்று ஊற்றி அதன் மீது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் அளவுக்கு நன்கு சிவக்க வைத்து எடுத்தால் குதிரைவாலி முசுமுசுக்கை கீரை அடை ரெடி.


அடை பொன்னிறமாகும் அளவுக்கு நன்கு சிவக்க வைத்தல்  

இப்போது இந்த அடையை எடுத்து பரிமாறினாள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவது மட்டுமின்றி சளி, இருமலுக்கும் உகந்ததாக இருக்கும்.

குதிரைவாலி மற்றும் முசுமுசுக்கை கீரையில் உள்ள பயன்கள்

குதிரைவாலி, புல்லுச்சாமை எர்னா புற்கள் வகையைச் சேர்ந்தது. இது இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. குதிரைவாலி அரிசியில் வைட்டமின் ஏ, பி, சி, டி, கே ஆகிய இரும்புச்சத்துக்கள் மட்டுமின்றி மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகளும் நிறைந்துள்ளன. மேலும், நம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, கொழுப்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, மாவுச்சத்துகளுடன், கரையும் மற்றும் கரையாத தன்மையுடைய நார்சத்துக்களும் உள்ளன.

இப்படி பல சிறப்புகளை கொண்ட இந்த குதிரைவாலியை நம் உணவில் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. உடலை சீராக வைப்பதுடன், சர்க்கரை அளவினையும் கட்டுக்குள் வைக்கிறது.


தயார் நிலையில் குதிரைவாலி முசுமுசுக்கை கீரை அடை 

ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக வேலை செய்வதுடன், இதில் இருக்கும் பீட்டா கரோட்டின், கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராமலும் தடுக்க உதவுகிறது. குதிரைவாலியில், கோதுமையை காட்டிலும் நான்கு மடங்கு நார்சத்து உள்ளதால் நாம் உண்ணும் உணவை எளிதாக செரிக்க வைக்கிறது. மேலும், மலச்சிக்கலை போக்க உதவுவதுடன், குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்தும் இதில் உள்ளது.

முக்கோண வடிவத்தில் காணப்படும் முசுமுசுக்கை கீரை நமது சித்த மருத்துவத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்த கீரையின் இலை மற்றும் வேர், மருத்துவ குணம் கொண்டது. அதுமட்டுமின்றி, இந்த கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் சி ஆகியவை உள்ளன. முசுமுசுக்கை கீரையை நம் உணவில் சேர்த்து சாப்பிடும்போது சளி, தும்மல், குறட்டை, மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்று போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறு போன்ற பிரச்சினைகளையும் நீக்கி ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்