எலும்புகளை வலுப்படுத்தும் கேழ்வரகு லட்டு!
கேழ்வரகு, நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு இதில் நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மையும் புற்றுநோயை எதிர்க்கும் திறனும் அதிகம். ராகி உணவுகளால் உடல் வலுப்பெறுவதோடு இளமையான தோற்றத்தையும் பெறமுடியும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு லட்டு செய்முறையை விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் மீனா கண்ணன்.
By : ராணி
Update: 2023-11-06 18:30 GMT
உடல் வலுப்பெற காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொண்டாலும் பண்டை காலத்திலிருந்தே உடல் வலுவாக இருக்க பெரிதும் எடுத்துக்கொள்ளப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் கேழ்வரகு. கேழ்வரகில் புரதச்சத்தும் தாதுப்பொருட்களும் நிறைந்திருக்கிறது. ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு, நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு இதில் நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மையும் புற்றுநோயை எதிர்க்கும் திறனும் அதிகம். ராகி உணவுகளால் உடல் வலுப்பெறுவதோடு இளமையான தோற்றத்தையும் பெறமுடியும். சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு லட்டு செய்முறையை விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் மீனா கண்ணன்.
செய்முறை:
- முதலில் அடுப்பில் கடாயை வைத்து கேழ்வரகு மாவை 1 நிமிடத்திற்கு வறுக்கவும். வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொண்டு அதனுடன் 1 கிளாஸ் சர்க்கரை பவுடரை சேர்க்க வேண்டும். இரண்டையும் கலக்கிவிட்டு சிறிதளவு ஏலக்காய் பவுடர் மற்றும் முந்திரியை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்க வேண்டும்.
- மீண்டும் அடுப்பை பற்றவைத்து ஒரு சிறிய கடாயில் நெய்யை காய்ச்சி கலந்து வைத்திருக்கும் மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சிறுசிறு உருண்டைகளாக பிடிக்க வேண்டும். சூடான நெய்யை சேர்த்து உருண்டை பிடித்தால் மட்டுமே உருண்டைகளாக வரும். இல்லையென்றால் உடைந்து விடும். இப்படி சூடான நெய்யில் உருண்டை பிடிப்பதன் மூலம் இந்த கேழ்வரகு லட்டானது 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
- பாதாம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதனை சிறுசிறு துண்டுகளாக்கி மாவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் இந்த ரெசிபிக்கு பயன்படுத்தும் கேழ்வரகு மாவை இன்ஸ்டண்டாக வாங்கலாம் அல்லது கேழ்வரகை வாங்கி குறைந்தபட்சம் 1 மணிநேரம் ஊற வைத்து அதை காயவைத்தும் அரைத்துக்கொள்ளலாம்.
- எளிதான முறையில் எளிமையான ரெசிபியில் ஆரோக்கியமான கேழ்வரகு லட்டு ரெடி!