நவராத்திரி ஸ்பெஷல் - சர்க்கரை பொங்கல் & காரசார சுண்டல்!

Update:2024-10-08 00:00 IST
Click the Play button to listen to article

நவராத்திரி என்றால் ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள். புரட்டாசி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. இப்படியாக இந்த ஒன்பது நாட்களும் பூஜை செய்து, மாலை வேளையில் அக்கம் பக்கத்து வீட்டார்களை அழைத்து மரியாதை செய்து, அவர்களுக்கு  பொங்கல், சுண்டல் போன்ற உணவுகளை வழங்குவது வழக்கம். அப்படி இருக்கும் பட்சத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், ஏதாவது ஒருவகை சுண்டல் மற்றும் ஒரு இனிப்பு செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் பாரம்பரிய முறையில் சர்க்கரை பொங்கல் மற்றும் சுண்டல் எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்கமளிக்கிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.


செய்முறை :

முதலில் பச்சரிசியை எடுத்து நன்கு கழுவி சோறு வடித்து, அந்த நீரை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதித்ததும் பொடித்து வைத்துள்ள வெல்லம் சேர்த்து நன்கு கரைத்துவிட வேண்டும். இந்த நிலையில் அதனுடன் வடித்து வைத்துள்ள பச்சரிசி சோறு சேர்த்து ஒன்றுசேர மசித்துவிட வேண்டும்.


வடித்து வைத்துள்ள பச்சரிசி சாதத்தை வெல்ல பாகில் சேர்க்கும் காட்சி

மசித்துவிட்ட கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு கொதிக்கவிட வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் நெய் சிறிதளவு விட்டு முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து, அதனுடன் வெல்லம் சோறு கலவையை சேர்க்க வேண்டும்.

அதனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு குழைய வேக வைத்தால் சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி!


செய்முறை :

கருப்பு சுண்டலை (மூக்கடலை) வேக வைப்பதற்கு முன்னர், அதனை 8 மணி நேரத்துக்கு ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த சுண்டலை குக்கரில் 2 அல்லது 3 விசில்விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.


வேகவைத்த சுண்டலை கடாயில் தாளிக்கும் காட்சி

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் சிறிதளவு கடுகு, சீரகம், பெருங்காயம் போட வேண்டும். அடுத்ததாக வேக வைத்து எடுத்த கருப்பு சுண்டலை சேர்த்து கிளறி விட வேண்டும். 

2 நிமிடங்களுக்கு பிறகு சுண்டலில் துருவிய தேங்காய் மற்றும் 2 பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்து சேர்க்க வேண்டும். சுண்டலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும்.


சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சர்க்கரை பொங்கல், கருப்பு சுண்டல்

இறுதியாக பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கினால் ஆரோக்கியமான கருப்பு சுண்டல் ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்