திகட்ட திகட்ட சுவைக்க தூண்டும் வெல்ல அடை!

கார்த்திகை மாத ஸ்பெஷலாக செய்யப்படும் ஒரு உணவுதான் கார்த்திகை வெல்ல அடை. கார்த்திகை வெல்ல அடை செய்முறையை விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் ஐஸ்வர்யா.

Update:2023-11-28 00:00 IST
Click the Play button to listen to article

ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அப்படி கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது முருகனின் கந்த சஷ்டி, கார்த்திகை திங்கள், குறிப்பாக கார்த்திகை தீபம்தான். இப்படி கார்த்திகையில் பல விசேஷ நாட்கள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் உணவிலும் ஒரு ஸ்பெஷல் உண்டு. அதுதான் கார்த்திகை மாதத்தில் செய்யப்படும் கார்த்திகை வெல்ல அடை. இந்த கார்த்திகை வெல்ல அடை செய்வது எப்படி என்ற ரெசிபியை தெளிவுற பகிர்ந்துள்ளார் சமையல் கலை நிபுணர் ஐஸ்வர்யா.


செய்முறை:

முதலில் பச்சரிசி, கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை 2 முதல் 3 முறைக்கு நன்றாக கழுவி சுமார் 3 மணி நேரத்துக்கு ஊறவைக்க வேண்டும். அதற்கடுத்து ஊறவைத்த இம்மூன்றையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்புக்கு மாற்றாக உளுந்து மற்றும் பாசி பருப்பு வைத்து கூட இந்த அடையை செய்யலாம். கொரகொரப்பாக அரைத்த நிலையில், வெல்ல பொடியை சேர்க்க வேண்டும். கட்டி வெல்லம் பயன்படுத்தினால், வெல்லத்தின் அளவிற்கு ஏற்ப ¼ பங்கு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்தவுடன் அதை வடிகட்டி அரைத்த மாவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு பிறகு தேங்காய், ஏலக்காய் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். 

இந்த அடை மாவு, தோசை மாவு பக்குவத்தில் இல்லாமல் கொரகொரப்பாக கெட்டியாக இருக்க வேண்டும். மாவு தயாராகிய நிலையில் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றாமல் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி தோசைக்கல்லை சூடு செய்ய வேண்டும். தோசைக்கல் நன்றாக சூடான பின்னர் அரைத்து வைத்த மாவை மெல்லியதாக பரப்பாமல் தடியாக அடை பக்குவத்தில் பரப்ப வேண்டும். பரப்பிய மாவில் தோசை கரண்டியால் சில ஓட்டைகளை போட்டு அவற்றில் மீண்டும் நெய் சேர்க்க வேண்டும். அடுப்பை மீடியமில் வைத்து அடை வேகும் வரை பொறுத்திருந்து பொன்னிறமான பின்னர் அடையை திருப்பி போட்டு 2 நிமிடத்திற்கு வேகவைத்து எடுத்தால் சூடான சுவையான கார்த்திகை வெல்ல அடை ரெடி! இந்த சூடான வெல்ல அடையை இறைவனுக்கு நைவேத்தியமாக படைக்கலாம். வெண்ணெய் வைத்து பரிமாறலாம்.

Tags:    

மேலும் செய்திகள்