ஆடி மாதத்தில் அம்மனுக்கு படையலிடப்படும் கேழ்வரகு களியும், கருவாட்டு தொக்கும் செய்வது எப்படி?

சிறுதானியங்கள் பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரிந்தது கம்பு, கேழ்வரகு தான். வெயில் காலம் வந்ததும் அதிகமாக தேடப்படும் உணவுகளில் கேழ்வரகு கூழ் குறிப்பிடத்தக்கது.

Update: 2024-07-29 18:30 GMT
Click the Play button to listen to article

சிறுதானியங்கள் பல வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரிந்தது கம்பு, கேழ்வரகுதான். வெயில் காலம் வந்ததும் அதிகமாக தேடப்படும் உணவுகளில் கேழ்வரகு கூழ் குறிப்பிடத்தக்கது. பலராலும், கூழ், களி என்பதெல்லாம் எளியவர் உட்கொள்ளும் உணவாக பார்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறையில் துரித உணவின் மீதான ஆர்வமும், ஆசையும் கூடிவிட்டது. புது புது உணவுகளை சாப்பிடுவதில் இருக்கும் ஆர்வம் இதில் இருப்பதில்லை. உடலுக்கு எந்த விதமான நோய்களும் வராமல் இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியம். உணவே மருந்துன்னு சும்மாவா சொன்னாங்க. அந்த வகையில் உடலுக்கு ஊட்டமும், ஆற்றலையும் தரும் கேழ்வரகு களி மற்றும் கருவாட்டு தொக்கு செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் கவிதா.


கேழ்வரகு களி செய்முறை :

* அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த புழுங்கல் அரிசி நொய்யை அதில் சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும்.

* இந்நிலையில் அதனுடன் கேழ்வரகு மாவு சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வேக வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது கேழ்வரகு மாவு கட்டுப்படாமல் வரும். பிறகு அரிசியையும், கேழ்வரகு மாவையும் கிளறிவிட வேண்டும். ஒன்று சேர வெந்து வந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.


கேழ்வரகு களி உருண்டைகள் 

* ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கைகளை நனைத்து தேவையான அளவுக்கு, வெந்த கேழ்வரகு அரிசி மாவை உருட்டி எடுத்தால் கேழ்வரகு களி ரெடி!


கருவாட்டு தொக்கு செய்முறை :

* 200 கிராம் கருவாட்டை எடுத்து கழுவி அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது கருவாடு ஸ்மெல் வராமல் இருக்கும்.

* அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 முதல் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இதில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் தக்காளி வதக்கி தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்தல் 

* வெங்காயம் பொன் நிறமாக மாறியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி குழைவாக வெந்ததும், 1 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பிறகு மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகாய் தூள் 3 தேக்கரண்டி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, மசாலா தடவி வைத்துள்ள கருவாடு சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு நன்கு வதக்கினால் கருவாட்டு தொக்கு ரெடி!


கேழ்வரகு களி மற்றும் கருவாட்டு தொக்கு 

 ஆடி மாதத்திற்கு அம்மன் படையலுக்கு ஏற்ற இந்த இரண்டு காம்பினேஷனை, நீங்களும் வீட்டில் ஈசியாக செய்து பாருங்கள்.

மேலும் செய்திகள்