ஆரோக்கியமான கேழ்வரகு சிமிலி உருண்டை செய்வது எப்படி?
கால்சியம், மினரல்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு அரிசிக்கு மாற்றாக சிறுதானியங்களை எடுத்துக்கொள்ள மருத்துவர்களே அறிவுறுத்துகின்றனர். அதனாலேயே சிறுதானியங்களில் சாப்பாடு, பிஸ்கட் மற்றும் பல்வேறு ஸ்வீட்கள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி ஸ்வீட் பிரியர்கள் பெரிதும் விரும்பக்கூடியவைகளில் ஒன்று லட்டு. லட்டுகளில் பல விதங்கள் இருந்தாலும் உடலுக்கு வலு சேர்க்கக்கூடிய வகையில் ஆரோக்கியமான கேழ்வரகு சிமிலி எப்படி செய்வது பார்க்கலாம்.
செய்முறை:
கேழ்வரகு மாவில் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்து கட்டியில்லாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
இதனை மெல்லிய அடைகளாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய்விட்டு சுட்டெடுக்க வேண்டும்.
அடைகளை ஆறவிட்டு அதனை கைகளால் உதிர்த்து மிக்ஸியில் போட்டு பொடித்து மாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பங்கு கேழ்வரகு மாவிற்கு அரை பங்கு வேர்க்கடலை மாவு தேவை. அதற்கு வேர்க்கடலையை வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
வேர்க்கடலை மாவிற்கு பாதி அளவிற்கு எள் எடுத்துக்கொள்ளவும். அதனையும் வறுத்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பொடித்துவைத்திருக்கும் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை மாவு, எள்ளு மாவு மற்றும் நாட்டு சர்க்கரையை நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான கேழ்வரகு சிமிலி உருண்டை ரெடி.
கேழ்வரகின் நன்மைகள்:
கேழ்வரகில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கால்சியம், மினரல்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. அதனாலேயே பெண்கள் தங்கள் உணவில் கேழ்வரகை சேர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதில் ஃபினாலிக் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருப்பதால் உடலில் கொலாஜன் அளவை தக்கவைத்து முதுமையை தள்ளிப்போடுகிறது.
அரிசியைவிட இரண்டு மடங்கு புரதச்சத்து கேழ்வரகில் இருக்கிறது. இதுதவிர டிரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன் போன்ற வேதிப்பொருட்கள் கேழ்வரகில் இருப்பதால் மன அமைதியை தூண்டுவதுடன், நல்ல தூக்கத்தையும் தருகிறது.