கெட்ட கொழுப்பை குறைக்கும் கருப்பு கவுனி அரிசியில் அல்வா! - செய்வது எப்படி?

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

Update: 2024-03-25 18:30 GMT
Click the Play button to listen to article

சத்தான ஆரோக்கியமான உணவு, சுவையாகவும் இருந்தால் யார்தான் விரும்பமாட்டார்கள். நமது முன்னோர்கள் அதிகம் சாப்பிட்ட சிறுதானியங்கள் மற்றும் உணவு வகைகள் இப்போது மீண்டும் அதிகமாக பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் அவற்றிலிருக்கும் சத்துக்கள். அப்படி சத்தான அரிசி வகைகளில் ஒன்றுதான் கருப்பு கவுனி அரிசி. இந்த அரிசியை அப்படியே வேகவைத்து சாதமாக சாப்பிடுவதைவிட அல்வாவாக செய்து சாப்பிட்டால் அனைவரும் விரும்பும் சுவையில் அசத்தலாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கருப்பு கவுனி அரிசி அல்வாவை செய்துகாட்டுகிறார் சமையல் கலைஞர் சசிரேகா.


செய்முறை

கருப்பு கவுனி அரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அதை நன்றாக கழுவி கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்து, சிறிது நேரம் வைத்தால் மாவு கெட்டியாகிவிடும்.

அடுப்பில் கடாயை வைத்து 100 மி.லி. தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்திருக்கும் கருப்பு கவனி அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துவிடவும். நன்றாக கிளறாமல் விட்டுவிட்டால் மாவு கட்டி கட்டியாக மாறிவிடும். எனவே மாவை கரைக்கும்போது சற்று பொறுமை அவசியம்.

மாவு முழுவதும் கரைந்தபின்பு அடுப்பை சிம்மில் வைத்து வேகும்வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். ஏற்கனவே அரிசி ஊறி இருப்பதால் வேகும் நேரம் சற்று குறையும். மாவு ஓரளவு வெந்து வரும்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய்ப்பாலை சேர்த்து கிளறவும். தேங்காய்ப்பால் பிடிக்காதவர்கள் சேர்க்கத் தேவையில்லை.

தேங்காய்ப்பாலுடன் மாவு முழுவதுமாக கலந்து நன்கு வெந்து வரும்போது, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்க்கவும். வெல்லம் சேர்க்க விருப்பப்பட்டால், வெல்லத்தை கரைத்து ஒற்றை கம்பிப்பதம் வரும்வரை பாகு காய்ச்சி அதை சேர்க்கவும்.

நாட்டுச் சர்க்கரை மாவுடன் சேர்ந்து வேகும்போது இறுக ஆரம்பிக்கும். அப்போது அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாவு முழுவதும் வெந்து அல்வா பதம் வரும்போது நெய் பிரியத் தொடங்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை மாவை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அடிபிடித்து சுவை மாறிவிடும்.

ஏலக்காயை சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு, அதனுடன் ஒரு பின்ச் உப்பு சேர்த்து கிளறவும். கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.

சிறிது நேரத்திலேயே அல்வா சற்று இறுகி சாப்பிட சுவையாக இருக்கும்.

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்

  • கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இந்த அரிசியானது உடலிலிருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்திலிருக்கும் குளுக்கோஸ் அளவையும் குறைக்கும்.
  • வெள்ளை அரிசியைவிட கருப்பு கவுனி அரிசியில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
Tags:    

மேலும் செய்திகள்