எனர்ஜியை அதிகரிக்கும் செம்பருத்தி ஆற்றல் பானம்!
உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் செம்பருத்தி பானம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பானத்தை எப்படி செய்வது என்று விளக்குகிறார் சமையல் கலைஞர் கண்ணம்மா நீலகண்டன்.
மணம் என்றாலே நினைவுக்கு வருவது மலர். இந்த மலர் வெறும் மணத்திற்கு மட்டுமா…? இல்லை. தலையில் சூடிக் கொள்ளவோ, இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தவோ அல்லது அலங்காரத்திற்கு மட்டுமோ என்றில்லாமல் பல மலர்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவாகவும் பயன்படுகின்றன. அப்படி சருமம், முடி என வெளிப்புற அழகை அதிகரிக்க பயன்படுத்தப்படும் பூக்களில் ஒன்றான செம்பருத்தியை உணவிலும் உட்கொள்ளலாம். ஆம், உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் செம்பருத்தி பானம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பானத்தை எப்படி செய்வது என்று விளக்குகிறார் சமையல் கலைஞர் கண்ணம்மா நீலகண்டன்.
செய்முறை
முதற்கட்டமாக ஒற்றை செம்பருத்தியின் இதழ்களை மட்டும் பறித்து அதை மிக்ஸியில் போட்டு அவற்றுடன் ஒரு சிட்டிகை இந்துப்பு, இஞ்சி, தண்ணீர், கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து ஜூஸ் தன்மைக்கு மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அந்த செம்பருத்தி ஜூஸை ஜூஸர் வடிகட்டியில் வடிகட்டாமல் ஒரு பாத்திரத்தில் காட்டன் துணி வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
செம்பருத்தி பூவிற்கு கொழகொழ தன்மை இருப்பதால் ஜூஸர் வடிகட்டியில் அது சரியாக வடியாமல் அதன் துகள்கள் அப்படியே தங்கும். எனவே சரியாக வடிகட்டுவதற்கு காட்டன் துணியை பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக வடிகட்டிய செம்பருத்தி ஜூஸில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கரண்டியால் கலக்கி கொள்ள வேண்டும்.
மெரூன் நிறத்தில் காணப்படும் இந்த செம்பருத்தி ஜூஸ் எலுமிச்சை சாறு சேர்த்தவுடன் சிவப்பு நிறத்தில் மாறிவிடும். தேவைப்பட்டால் சப்ஜா விதைகள், சியா விதைகள் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து இவற்றுடன் சேர்த்துக்கொள்ளலாம். மிக எளிமையான முறையில் ஆரோக்கியமான புத்துணர்ச்சி நிறைந்த செம்பருத்தி ஜூஸ் ரெடி!
செம்பருத்தி ஜூஸின் பயன்கள்
ஆரோக்கியம் நிறைந்த செம்பருத்தி ஜூஸ் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்
ரத்த ஓட்டம் சீராகும்
இதயத்திற்கு மிக மிக நல்லது
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்
சருமம் பளபளப்பாக இருக்க உதவி செய்யும்