வீடே மணக்கும் கேரளா "ஓணம் ஸ்பெஷல் எரிசேரி"!
கேரளா உணவுகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் நம்ம ஊருல காரசாரமா சாப்பிட்டாலும், தேங்காய் எண்ணெயில் செய்யும் கேரள உணவுகளுக்கு நிறைய பேர் அடிமைதான்.
கேரளா உணவுகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்னதான் நம்ம ஊருல காரசாரமா சாப்பிட்டாலும், தேங்காய் எண்ணெயில் செய்யும் கேரள உணவுகளுக்கு நிறைய பேர் அடிமைதான். அந்த அளவுக்கு மலபார் பரோட்டா & பீஃப் கறி, தலசேரி பிரியாணி, மீன் பொலிச்சதுன்னு நிறைய சொல்லிகிட்டே போகலாம். சைவ உணவை பொறுத்தவரை அவியல், பழம்புரி, எரிசேரி, நெய் சோறு என நிறைய வகைகள் உண்டு. சேனைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற கிழங்குகளை வைத்து செய்யப்படும் எரிசேரி, ஓணம் ஸ்பெஷல் டிஷ். இந்த ரெசிபியை எளிமையாக எப்படி செய்யலாம் என விளக்குகிறார் சமையல் கலைஞர் சுந்தரி ராகவேந்திரன்.
செய்முறை :
*வாழைக்காய், சேனைக்கிழங்கு இரண்டையும் நன்கு கழுவி தோல் நீக்கி துண்டு, துண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு குக்கரில் போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கை குக்கரில் வேக வைக்கும் காட்சி
*ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
*குக்கரில் வேக வைத்த வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்குடன், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். அதனுடன் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து, பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கி விட வேண்டும்.
எரிசேரி தாளிக்க தேங்காய் வதக்குதல்
*அடுத்ததாக அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்விட்டு, அதில் கடுகு 1/2 தேக்கரண்டி, சிறிதளவு பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு பொரிந்ததும், துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனை வேக வைத்துள்ள வாழைக்காய் மற்றும் சேனைக்கிழங்கு கலவையில் சேர்த்து கிளறினால் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த கேரளா ஸ்பெஷல் எரிசேரி ரெடி!
ஓணம் ஸ்பெஷல் எரிசேரி
வாழைக்காயில் உள்ள நன்மைகள் :
வாழைக்காய் ஒருவிதக்கிழங்கு வகை. வாழைக்காய் வாயு நிறைந்த உணவு என எண்ணி நம்மில் பலரும் அதனை உட்கொள்வதில்லை. ஆனால் இதில் பல்வேறு ஆரோக்கியம் நிறைந்துள்ளது.
வாழைக்காயில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து உள்ளிட்டவை உள்ளன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியா அதிகரிக்க வாழைக்காய் உதவியாக இருக்கும்.
இதில் உள்ள பொட்டாசியம் இதயத் தசைகளை வலுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்கிறது.
பசியை கட்டுப்படுத்தும் வல்லமை இதில் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் உணவில் வாழைக்காயை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.