இறால் வாங்கும்போது தொட்டுப் பாருங்க! இந்த வாசனை வந்தா... - எச்சரிக்கிறார் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி
உணவகங்களில் வாங்கும் அசைவ உணவுகள், தனியாக கடைகளில் இறைச்சி வாங்கும் முறை மற்றும் வாழை இலையின் முக்கியத்துவம் குறித்த தெளிவாக விளக்குகிறார் தமிழ்நாடு தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார்.
சமீபத்தில் உணவு குறித்த ஏராளமான சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கின்றன. கெட்டுப்போன இறைச்சிகளை கடைகளில் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் இறப்புகள் என்பது தற்போது சாதாரணமாகிவிட்டது. உணவகங்களின் எண்ணிக்கைகள் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் மருத்துவமனைகளும் அங்கு கூடும் நோயாளிகளின் எண்ணிக்கைகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆம், இங்கு நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் கலப்படங்கள் நிறைந்த உணவுகளைத்தான் உண்டு உயிர்வாழ்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே மக்கள் போதிய விழிப்புணர்வோடு இருப்பது அவசியமாகும். மேலும் உணவகங்களில் வாங்கும் அசைவ உணவுகள், தனியாக கடைகளில் இறைச்சி வாங்கும் முறை மற்றும் வாழை இலையின் முக்கியத்துவம் குறித்த தெளிவாக விளக்குகிறார் தமிழ்நாடு தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார்.
உணவு பார்சல் செய்யும் முறையானது வாழை இலையில் இருந்து ஃபாயில் பேப்பர் முறைக்கு மாறியதற்கான காரணம் என்ன?
30 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உணவகங்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது ஒரு தெருவில் ஆங்காங்கே ஒவ்வொரு கடைதான் இருக்கும். அதனால் அப்போது வாழை இலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது சூழல் முற்றிலும் மாறிவிட்டது. அதிக அளவிலான உணவகங்களும் அங்கு விற்பனை செய்யப்படும் உணவுகளை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாலும், வாழை இலைகளை அதிகளவில் பயன்படுத்த முடிவதில்லை. மேலும் ஃபாயில் பேப்பர்களுடன் ஒப்பிடுகையில் வாழை இலையின் விலையும் சற்று அதிகம். அதனால் இன்று பெரும்பாலான உணவகங்களில் ஃபாயில் பேப்பர் கொண்டு பார்சல் செய்து தரப்படுகிறது. மேலும் அதை பயன்படுத்துவதற்கும், ஸ்டாக் வைத்துக்கொள்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கிறது. இருந்தபோதிலும் இன்றும் சில கடைகளில் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் பார்சல் செய்து தருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது.
வாழை இலை vs ஃபாயில் பேப்பர் - எது நல்லது?
பிளாஸ்டிக் மற்றும் ஃபாயில் பேப்பரை தவிர்க்க மாற்று வழிகள் ஏதேனும் இருக்கிறதா?
தற்போது பாக்கு மட்டைகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அதேபோல உணவுக்கென்றே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்களும் இன்று மார்க்கெட்டில் வந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட மிகச்சிறந்த முறை என்றால், அது பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு வாங்குவதுதான். அதாவது, முன்பெல்லாம் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாத்திரங்களை கொண்டுசென்றே பார்சல் உணவுகளை வாங்கி வந்தனர். ஆனால் இன்றைய அவசர உலகைக் காரணம் காட்டி நெகிழி மற்றும் ஃபாயில் பேப்பர் போன்றவற்றை சார்ந்தே இருக்கின்றனர். இந்த முறையை கையாள்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் தங்களது ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு மீண்டும் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு வாங்கும் முறையை பின்பற்றினால் நல்லது.
பிளாஸ்டிக் அதிகளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?
அதிக அளவில் கெமிக்கல்களைக் கொண்டுத் தயாரிக்கப்படுவதுதான் பிளாஸ்டிக். சூடான உணவுகளை பிளாஸ்டிக்கில் வைக்கும்போது, அதில் இருக்கும் விஷத்தன்மையானது உணவோடு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனை உண்பது உடலுக்கு நல்லதல்ல; அதுமட்டுமின்றி இது வாந்தி, வயிற்றுபோக்கு, கேன்சர் போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும்.
பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு தடை
பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க உணவு பாதுகாப்புத்துறை மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது?
பொதுவாகவே கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது நமது அரசாங்கம். உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் டன் கணக்கிலான பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் செய்தித்தாள்கள் கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அதற்காக அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகை குறித்த போதிய விழிப்புணர்வை உணவுப் பாதுகாப்புத்துறை மக்களிடத்தில் ஏற்படுத்தி வருகிறது.
இறைச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் ஃபார்மலின் ஊசிக்கான பயன்பாட்டு நோக்கம் என்ன?
ஃபார்மலின் என்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கெமிக்கல்களில் ஒன்று. பொதுவாக ஃபார்மலின் ஊசிகள் என்பது இறந்தவர்களின் உடல்களை நீண்ட நாட்களுக்கு பதப்படுத்த பயன்படுத்தப்படுவது. அதைப்போலவே இறைச்சிகள், குறிப்பாக மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மீன்கள் கெடாமல் இருக்க பதப்படுத்த ஃபார்மலின் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற கெமிக்கல்களை உணவுகளோடு சேர்ப்பது மிகவும் ஆபத்தானது.
மீன், நண்டு, இறால் வாங்கும்போது பரிசோதிக்கும் முறைகள்
கெட்டுப்போன இறைச்சிகளை எளிதில் கண்டறியும் முறைகள்...
மீன்கள்:
சென்னையை பொறுத்தவரையில் 95% மீன்கள் தரமானதாகவே கிடைக்கின்றன. முதலில் மீன்களின் கண்களைப் பார்த்தே அதன் தன்மையை கண்டுபிடிக்கலாம். மீனின் கண்கள் தெளிவாக இருந்தால் அது சுத்தமான மீன். இரண்டாவதாக வாசனை மற்றும் மீனைத் தொடும்போது இருக்கும் அதன் தன்மையை வைத்து நம்மால் அறிய முடியும். அதாவது, ஒரு நல்ல மீனின் உடலானது தொடும்போது கடினமான இருப்பது அவசியம். மூன்றாவதாக உடல் பகுதி மிக மென்மையாகவும், வயிற்றுப்பகுதி முழுவதும் கொலக்கொலவென்றும் இருந்தால் நிச்சயமாக அது நல்ல மீனாக இருக்க வாய்ப்பே இல்லை. மேலும் மீனின் செதில் பகுதியில் ரத்தம் இருக்கிறதா என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சில இடங்களில் மீன்களின் வயிற்றுப்பகுதியில் ஃபார்மலின் ஊசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படி ஃபார்மலின் பயன்படுத்தப்பட்ட மீன்களில் ஈக்களே இருக்காது. இதனை மக்களே கண்டறிந்து வாங்கலாம்.
பிற கடல்வாழ் உயிரினங்கள்:
இறால் மற்றும் நண்டு போன்ற பிற கடல் வாழ் உயிரினங்களுக்கும் அதன் தன்மை குறித்து அறிய சில வழிமுறைகள் இருக்கின்றன. கெட்டுப்போன இறாலாக இருந்தால் அதனைத் தொடும்பொழுது கெட்டியாக இல்லாமல் மிகவும் மென்மையாக இருக்கும். மேலும் அதற்குரிய வாசனை இல்லாமல் கெட்டுபோன துர்நாற்றம் வீசும். அதேபோல் நண்டின் வயிற்றுப்பகுதி திடமாக இருக்கவேண்டும். கொலக்கொலவென இருந்தால் வாங்கவேண்டாம்.
ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்கும்போது கவனிக்கவேண்டியவை
ஆடு மற்றும் கோழி இறைச்சி:
ஆட்டு இறைச்சியாக இருந்தாலும் சரி; கோழி இறைச்சியாக இருந்தாலும் சரி, அதைத் தொட்டும்போது அதிக கடினமானதாகவும் இருக்கக்கூடாது, அதிக மென்மையானதாகவும் இருக்கக்கூடாது. நடுத்தரத் தன்மையில் இருப்பது மட்டுமே சமைக்க உகந்தது. மேலும் கடைகளில் வாங்கும்போது இறைச்சியானது பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். தொடும்பொழுது தண்ணீர் வெளிவருவது நல்லதல்ல. அதேபோல், இறைச்சியை நீண்ட நேரம் வீட்டிலுள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சமைப்பது கட்டாயம் தீங்கு விளைவிக்கும்.