ருசியான பாதாம் அல்வாவை எளிமையாக செய்வது எப்படி?

எளிமையான முறையில் வீட்டிலேயே அல்வா செய்வது எப்படி? அதிலும் குறிப்பாக புரதச் சத்து நிறைந்த பாதாம் அல்வா செய்வது எப்படி? என விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் வனிதா ராஜகோபால்.

Update:2023-12-12 00:00 IST
Click the Play button to listen to article

கும்பகோணம் என்றால் டிகிரி காபி, ஆம்பூர் என்றால் பிரியாணி, காரைக்குடி என்றால் செட்டிநாடு சிக்கன் என்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பிருப்பது போல திருநெல்வேலி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அல்வாதான். அந்த அல்வாவை பெருமைப்படுத்தும் விதமாக ‘திருநெல்வேலி அல்வாடா… திருச்சிமலை கோட்டடா…’ என்ற பாடலும் ‘எனக்கே அல்வா கொடுக்குறியா’ என்ற வசனமும் உள்ளது. அல்வா கொடுப்பது ஈஸி; ஆனால் செய்வதுதான் கடினம் என்று நினைக்கலாம். ஆனால், எளிமையான முறையில் வீட்டிலேயே அல்வா செய்வது எப்படி? அதிலும் குறிப்பாக புரதச் சத்து நிறைந்த பாதாம் அல்வா செய்வது எப்படி? என விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் வனிதா ராஜகோபால்.


செய்முறை:

முதலாவதாக ஒரு பேனை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் போட்டு ஒரு கொதி வரும்வரை பாதாமை வேகவைக்க வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு 2 நிமிடத்திற்கு பாதாமை ஆறவைக்க வேண்டும். பாதாம் ஆறும் அந்த சமயத்தில் ஒரு கிண்ணத்தில் சிறு அளவு தண்ணீர் கொண்டு அதில் கோதுமை மாவு, உப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கட்டியில்லாமல் மாவு கரையும் வரை நன்றாக கலக்க வேண்டும்.

பாதாம் ஆறிய நிலையில் அதை வடிகட்டி தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு பாதாம் தோலை தனியாக உரித்தெடுக்க வேண்டும். உரித்தெடுத்த அந்த பாதாமை மிக்ஸியில் போட்டு ரவை பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அது காய்ந்தவுடன், கலக்கி வைத்திருக்கும் கோதுமை மாவு, உப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்த கலவையை ஊற்றி நெய்யுடன் கலக்க வேண்டும். அது பேஸ்ட் தன்மைக்கு வரும்போது அடுப்பை குறைந்த சுடரில் வைத்து அரைத்து வைத்திருக்கும் பாதாம் பவுடரை அதில் சேர்க்க வேண்டும்.

பாதாமின் பச்சை வாசனை போகும்வரை அடிபிடிக்காமல் கிளற வேண்டும். 2 நிமிடங்களுக்கு நன்கு கிளறிய பின்னர் மீண்டும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளற வேண்டும். கேசரி போல ஸ்மூத்தான தன்மை வரும்போது சர்க்கரையை அப்படியே கொட்டாமல் பரப்பியவாறு தூவியபடி சிறிது சிறிதாக சேர்த்து பொறுமையாக கிளற வேண்டும். சர்க்கரை கரைந்தவுடன் மில்க்மெய்ட் மற்றும் பால் பவுடரை சேர்த்து உருண்டை ஆகாதவாறு நன்றாக கிளற வேண்டும்.

பால் பவுடர் சேர்க்கும்போது அவற்றை தூவியபடி சேர்த்தால் மட்டுமே அது கட்டியாக உருண்டையாக இல்லாமல் இருக்கும். பின்னர் மீண்டும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கட்டி இல்லாமல் அடிபிடிக்காதபடி இடைவிடாமல் கேசரியை போல தொடர்ந்து கிளற வேண்டும். 2 நிமிடத்திற்கு நன்கு கிளறி மீண்டும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கடாயில் ஒட்டாதவாறு கிளற வேண்டும். 2 நிமிடம் கழித்து இறுதியாக மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து 2 நிமிடத்திற்கு கிளற வேண்டும்.

கெட்டியாக, மொழுமொழு தன்மை வரும் நிலையில் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளலாம். மொழுமொழு பாதம் அல்வா ரெடி!

Tags:    

மேலும் செய்திகள்