அரசியல் தலைவராக "புதிய லுக்கில் விஜய்"! மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் அதிரடி பேச்சு!

எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று விஜய் தெரிவித்தார்.

Update: 2024-06-28 09:14 GMT

தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது! ஒரு பெற்றோராக, அரசியல் இயக்கத் தலைவராக இந்த நிலைமை அச்சத்தை கொடுக்கிறது! அனைத்திற்கும் அரசாங்கத்தை குறை சொல்வதை விட, நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்! நம் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்! எனவே மாணவர்கள், சுயக்கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்! என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில், அதிரடி, சரவெடியாய் வெடித்துள்ளார்.

கல்வி விருது வழங்கும் விழா

கடந்த ஆண்டு 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைத்து மாவட்டங்களிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசுகளை வழங்கினார். அப்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அந்த விழாவிலேயே நிறைய மாணவ, மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி தொடங்கினார் விஜய். கட்சி பெயரை "தமிழக வெற்றிக் கழகம்" என்று அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தநிலையில், நடப்பாண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் மாவட்டம் வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (28.06.24) தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஒரே நாளில் பாராட்டு விழா நடந்ததால், இரவு விழா முடிய வெகுநேரம் ஆனதால், இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்ட விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.


பாராட்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அமர்ந்துள்ள விஜய்

விஜய் அதிரடி பேச்சு 

மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் ஆளாக நாங்குநேரியில் சாதிய ஆதிக்க தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையுடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், "நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள் என தெரிவித்தார்". தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் எனக் கூறினார். 

தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை

மாணவர்களுக்கு அன்பாக அறிவுரை கூறிய விஜய், "மருத்துவம், பொறியியல் மட்டும்தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு தற்போது அதிகமாக தேவைப்படுவது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை. எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்." என்று தெரிவித்தார்.


மாணவர்களுக்கு அன்பாக அறிவுரை கூறிய த.வெ.க. தலைவர் விஜய்

"செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை? எது பொய்? என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை? மக்களுக்கு என்ன பிரச்சினை? சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வையை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல், வேறு எதுவுமே இருக்க முடியாது." என்று கூறினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துவிட்டது

தமிழக இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவிட்டதாக கவலை தெரிவித்த விஜய், ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்கத் தலைவராகவும், இது தனக்கு அச்சத்தை தருவதாக கூறினார். போதைப்பொருளிலிருந்து இளைஞர்களை காப்பது அரசின் கடமை, அதை செய்ய அரசு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்ல தான் இங்கு வரவில்லை என்று குறிப்பிட்ட விஜய், நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், நம் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாணவர்கள், சுயக்கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், "Say no to temporary pleasures, Say no to drugs" என்ற வாசகங்களை சொல்லி, அதனை மாணவர்களை திரும்ப சொல்ல சொன்னார். மாணவர்களும் அதனை உறுதிமொழி போல் கூறினர்.


விழாவில் மாணாக்கர்களை பாராட்டிய தருணம்

விழாவில் அறுசுவை உணவு 

பாராட்டு விழா நிகழ்ச்சிக்காக மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரை பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். விழாவில் பங்கேற்றவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மதியம் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. சாதம், வடை, அப்பளம், அவியல், மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரக்கறி, வத்தக்குழம்பு, தக்காளி ரசம், கதம்ப சாம்பார், ஆனியன் மனிலா வெற்றிலை பாயாசம், மோர் உள்ளிட்டவை  மதிய விருந்து பட்டியலில் இடம்பெற்றன. அதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சிக்கு இடையே பசியால் வாடுவதை தடுக்க திண்பண்டங்களும் வழங்கப்படுகின்றன. 

ஜூலை 3-ம் தேதி 2-ம் கட்ட பாராட்டு விழா

இன்று நடக்கும் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 


பரிசு வழங்கி மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது

வரும் ஜூலை 3ஆம் தேதி 2வது கட்டமாக நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்