நேற்று நடிகன் இன்று தலைவன்! தந்தை வழியில் உதயநிதி - பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு!

தொன்றுதொட்ட திராவிட குடும்பத்தில் இருந்துவந்து, நமக்கெல்லாம் தமிழ் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக அவதாரம் எடுத்து இன்று தமிழகத்தின் துணை முதலமைச்சராக வலம்வருபவர்தான் உதயநிதி ஸ்டாலின்தான்.

Update:2024-11-26 00:00 IST
Click the Play button to listen to article

“தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி”, “தம்பியுடையான் படைக்கஞ்சான்”, “தயங்கி நிற்பவன் தோற்று நிற்பான்” இப்படியான நிறைய பழமொழிகளை நமது தமிழ் அகராதிகளில் படித்தும், நம் முன்னோர்கள் சொல்லியும் கேட்டிருப்போம். சிலரது வாழ்வோடு பொறுத்தியும் பார்த்திருப்போம். இவையெல்லாம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ; இன்று நாம் பார்க்கப்போகும் மனிதருக்கு மிகச் சரியாகவே பொருந்தும். காரணம், இன்று நாம் காணும் இவரின் தந்தை எப்படி அவரின் தந்தையை பின்பற்றி அரசியலிலும், சினிமாவிலும் கால் பதித்தாரோ அதேபோல்தான் இவரின் வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை... தொன்றுதொட்ட திராவிட குடும்பத்தில் இருந்துவந்து, நமக்கெல்லாம் தமிழ் சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக அவதாரம் எடுத்து இன்று தமிழகத்தின் துணை முதலமைச்சராக வலம்வரும் உதயநிதி ஸ்டாலின்தான். சினிமா என்ற குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த இவர் நாளை தமிழ்நாட்டை ஆளப்போகும் தலைவன் என்ற கனவுடன் தன் அரசியல் பயணத்தை தொடங்கி அதில் மிகச்சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். “ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி” என்று நாம் சொல்வதை அப்படியே கொஞ்சம் மாற்றி, “மக்கள் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி” என்று முழுமையாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற கனவுடன் தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி வந்துள்ள உதயநிதி ஸ்டாலின், 27.11.2024 அன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், குறுகிய காலத்திலேயே பலரும் பார்த்து பொறாமைப்படும் படியாக சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் எப்படியான சவால்களை எல்லாம் தாண்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்ற தகவல்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

அப்பா வழியில்…


விஜய்யின் 'குருவி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான உதயநிதி 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பேரனும், தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் தம்பதியரின் மகன் என்ற அடையாளத்துடனும் நமக்கெல்லாம் பரிச்சயமான உதயநிதி ஸ்டாலின், 1977-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி சென்னை கோபாலபுரத்தில் பிறந்தார். பிறக்கும் போதே அரசியல், சினிமா இரண்டிலும் ஆளுமைத்திறன் கொண்ட குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும், எல்லோரையும் போல் மிகவும் எளிமையாகத்தான் வளர்க்கப்பட்டுள்ளார். சென்னை டான் போஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர், மேற்படிப்பிற்காக லயோலா கல்லூரியில் சேர்ந்து வணிகவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் தனது மனைவி கிருத்திகாவை சந்தித்து காதல் திருமணமும் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு 2004-ஆம் ஆண்டு இன்பநிதி என்ற மகனும், 2006-ல் தன்மயா என்ற மகளும் பிறந்தனர். இப்படி வெகு சீக்கிரமே குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்த உதயநிதி தன் குடும்பம் ஏற்கனவே மிகப்பெரிய சினிமா பின்புலமும், அரசியல் பின்புலமும் கொண்ட குடும்பம் என்பதால் மிக எளிதாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராக விஜய்யின் ‘குருவி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். உதயநிதி தயாரித்த முதல் படம் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை என்றாலும், வசூல் ரீதியாக நல்ல வருமானத்தை அவருக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘ஆதவன்’ படத்தை தயாரித்தவருக்கு அப்படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.


உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக மாறிய 'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் 

இதன் பிறகு, மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் மாதவனை வைத்து ‘மன்மதன் அம்பு’ என்றொரு படத்தை தயாரித்தார். அப்படமும் சுமாரான படம் என்ற அளவிலேயே விமர்சனம் பெற, செய்வதறியாது தவித்தார் உதயநிதி. குறிப்பாக கதை தேர்வு செய்யவோ, ஒரு படத்தை எப்படி கொடுத்தால் மக்கள் ரசிப்பார்கள் என்ற யோசனையோ உதயநிதியிடம் சுத்தமாக அந்த சமயம் இல்லை. இதனால் இவரெல்லாம் எங்கு சாதிக்க போகிறார் போன்ற விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்தார். அப்போது விழித்துக்கொண்டு மேலே எழ ஆரம்பித்த உதயநிதி, நேரடி தயாரிப்பை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு விநியோகஸ்தராக களமிறங்க முடிவு செய்தார். அப்படி அவர் விநியோகஸ்தராக 2010-ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் சிம்பு - திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை ரேடான் மீடியாவுடன் இணைந்து வெளியிட்டார். தயாரிப்பாளராக வெற்றி பெறுவதில் சில சிரமங்களை, விமர்சனங்களை உதயநிதி சந்தித்து இருந்தாலும் விநியோகஸ்தராக தன் முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டார். இதன் பிறகு, தொடர்ந்து விநியோகஸ்தராக இவர் பங்குபெற்ற ‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘மைனா’, அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களின் விநியோக உரிமையை பெற்று அதில் வெற்றியும் கண்டார். இப்படி, தயாரிப்பாளராக இருந்து விநியோகஸ்தராக மாறி சினிமாவில் தன் வெற்றிப் பயணத்தை தொடங்கிய உதயநிதியை நோக்கி நடிகருக்கான வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

நடிகராக அறிமுகம்


ஹீரோவாக அறிமுகமான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்துடன் ஒரு காட்சியில் உதயநிதி 

என்றைக்கும் தான் ஒரு நடிகராக வேண்டும் என்று துளியும் கூட நினைக்காத உதயநிதியை காலம் அதன் பாதையில் அழைத்து வந்தது மட்டுமின்றி நடிகராகவும் மாற்றி அழகு பார்த்தது. அதன்படி, 2009-ஆம் ஆண்டிலேயே சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்ற அடிப்படையில் வழக்கமான கே.எஸ்.ரவிக்குமார் பாணியிலேயே படத்தின் இறுதி காட்சியில் கே.எஸ்.ஆருடன் சிறப்பு தோற்றத்தில் வடிவேலுவின் மாப்பிள்ளைகள் என்று வரும் காட்சியில் நடித்திருப்பார். இருப்பினும் அதற்கு பிறகு தான் தயாரித்த வேறு எந்த படங்களிலும் உதயநிதியை காணவில்லை. தயாரிப்பு, விநியோகம் என இரண்டை மட்டும் கவனித்து வந்த நேரத்தில்தான் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து ஒரு நடிகராக தன் பயணத்தை தொடங்கினார். நடிகராக உதயநிதியின் முதல் பயணமே அவருக்கு மிகப்பெரியதொரு வெற்றியை கொடுத்தது. அதிலும் இப்படத்தில் சந்தானம், உதயநிதியின் காமெடி காட்சிகள் நன்றாகவே ஒர்கவுட் ஆகியிருக்கும். பார்த்தா, ஜாங்கிரி, அடை தேன் அடை என சந்தானம், உதயநிதியின் ஒவ்வொரு டயலாக் டெலிவரியும், நகைச்சுவை காட்சியும் அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். இப்படி முதல் படத்திலேயே தன் இயல்பான நடிப்பாலும், உடல் மொழியாலும் எல்லோரையும் கவர்ந்த உதயநிதி அடுத்ததாக மனைவி கிருத்திகா உதயநிதியின் ‘வணக்கம் சென்னை’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்துவிட்டு போனார்.


'மாமன்னன்' திரைப்படத்தில் அதிவீரனாக வடிவேலுவுடன் உதயநிதி ஸ்டாலின் 

இதனை தொடர்ந்து, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘நண்பேன்டா’, ‘கெத்து’, ‘மனிதன்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ என வரிசையாக தன் சொந்த தயாரிப்பில் நடித்தார். இப்படங்கள் அனைத்துமே அவருக்கு ஓரளவு வெற்றியை பெற்று தந்த படங்களாகவும், அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிய படங்களாகவும் அமைந்தன. இதற்கு பிறகு, ‘இப்படை வெல்லும்’, ‘நிமிர்’, ‘கண்ணே கலைமானே’ என கொஞ்சம் காமெடி, காதல் கலந்த குடும்ப சென்டிமெண்ட் படங்களாக நடித்து வந்த உதயநிதி, முதல் முறையாக சற்று வித்தியாசமாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ என்றொரு படத்தில் கண் தெரியாதவராக நடித்து பலரது பரட்டை பெற்றார். இப்படத்தினை தொடர்ந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் விஜயராகவன் ஐயங்கார் ஐபிஎஸ்-ஆக மிடுக்கான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் நடித்த உதயநிதி இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் அதிவீரனாக ‘மாமன்னன்’ படத்தில் நடித்தார். இப்படத்தில் உதய்க்கு தந்தையாக வைகைப்புயல் வடிவேலு நடித்து ரசிக்க வைத்திருந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில், லால், மைம் கோபி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படமே நடிகராக உதயநிதிக்கு கடைசி படமாக அமைந்து போனது. காரணம், இந்த நேரம் உதயநிதியின் அரசியல் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்ததால்தான்.

அரசியலில் திருப்பம்


தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என்ற நிலையில் இருந்து அரசியல்வாதியான உதயநிதி ஸ்டாலின் 

சினிமா என்ற பெரிய திரையின் வழியாக தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் என்று மக்கள் மனதில் இடம்பிடிக்க தொடங்கிய உதயநிதி, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்ற அடையாளம் உதயநிதிக்கு இருந்ததால் தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி இவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு திமுக கட்சியினர் இடையே மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இருந்த போது “நடிப்பு மட்டும்தான் எனது தொழில். அதனால், சினிமாவைத் தாண்டி நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு துளியும் கிடையாது" என்று தொடர்ச்சியாக கூறிவந்தார் உதயநிதி. இப்படி கூறியவர்தான், சினிமாவில் இருக்கும் போதே அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் சமூக வலைதளங்கள் மூலமாக தன் அரசியல் சார்ந்த கருத்துக்களை மறைமுகமாக நையாண்டித்தனங்கள் கலந்து பகிர்ந்து வந்தார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கவிதை, மக்கள் நல கூட்டணி குறித்த கருத்து பகிர்வு போன்ற பல நிகழ்வுகள் சர்சைக்குரியவைகளாக மாறின. இந்த நேரம் திமுக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் உதயநிதி போட்டியிட போவதாக செய்தி வெளியாக, அதனை மறுத்த உதயநிதி தனக்கு அப்படியேதும் ஆசை இல்லை. நான் சினிமாவில் மட்டும்தான் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியிருந்தார். இப்படியே சொல்லி வந்த உதயநிதி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுக மற்றும் அதன் தோழமை காட்சிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு அதனை முன்னெடுத்தது மட்டுமின்றி, திமுக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல நிகழ்வுகளில் தன்னை முன்னிலைப்படுத்தி அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை விமர்சித்து பேச ஆரம்பித்தார்.


தந்தை மு.க.ஸ்டாலினுடன் ஒரு தருணத்தில் உதயநிதி ஸ்டாலின் 

தன் பங்குக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் எனது மகளோ, மகனோ அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று ஒரு மேடையில் பேசியிருந்தார். ஆனால், அப்பா, மகன் இருவரும் கூறியதற்கு நேரெதிராக நடந்த சம்பவங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகின. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கட்சி பணியாற்றத் தொடங்கிய உதயநிதி, தேர்தல் நெருங்கத் தொடங்கியதும் களத்தில் இறங்கி தீயாய் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அதன் பலனாகத்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தந்தையின் அனுமதியுடன் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாகவும் தேர்வானார். அதன் பிறகு தன்னை வெற்றி பெற வைத்த மக்களை நேரடியாக சென்று தனக்கே உரிய ஸ்டைலில் சந்தித்து நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அவர்களின் அடிப்படை தேவைகள், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டறிந்து உடனே அனைத்தையும் செய்து கொடுத்தார். இப்படி மக்களுக்கு செய்யும் பணியே தன் முழுநேர பணியாக நினைத்து செயல்பட ஆரம்பித்தவர் அடுத்ததாக அமைச்சர் என்ற நிலைக்கும் உயர்ந்தார்.

அமைச்சராக அடுத்தகட்டம்

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது ஸ்டாலின் தலைமையிலான சட்டப்பேரவையில் முதல் முறையிலேயே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்றுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்படியான எந்த நிகழ்வும் நடக்கவில்லை. உடனே ஸ்டாலின் எப்படி படிப்படியாக தன்னை அரசியலில் வளர்த்துக்கொண்டு முன்னேறினாரோ அப்படித்தான் மகனையும் வர வைப்பார் என்றும் கூறத் தொடங்கினர். 1984 தொடங்கி நான்கு தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகே ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதேபோன்றுதான் மகனுக்கும் இருக்கும் என்றே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும்போது ஒட்டுமொத்த திமுக கட்சியினரும், மூத்த அமைச்சர்களும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க, உதயநிதி எனக்காக எல்லோரும் குரல் எழுப்பி தலைமையை சங்கடப்படுத்த வேண்டாம். எனக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தலைமைக்கு தெரியும் என்று கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். மேலும், இந்த நேரத்தில்தான் சினிமாவில் இருந்தும் தன்னை முழுமையாக ஒதுக்கிக் கொண்டார்.


2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின் 

இதன்பிறகு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை ஒதுக்கி மகனை அமைச்சராக்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் பதவியை பதவியாக பார்க்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்ற தொடங்கிய உதயநிதி, அதன் பிறகு தமிழ்நாடு அரசின் முக்கிய முடிவுகள் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், ஆய்வு கூட்டங்களில் பங்கேற்க தொடங்கி, விளையாட்டுத் துறை சார்பாக பல்வேறு போட்டிகளை நடத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றார். மேலும், சனாதனம் குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிய உதயநிதி அதுதொடர்பாக தன் மீது வழக்குகள் தொடரப்பட்ட போதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கூறினார். இப்படி எல்லா விஷயங்களையும் தன் அழகான புன்னகையால் எளிதாக கையாண்டு சென்றதாலோ என்னவோ குறுகிய காலத்திலேயே துணை முதலமைச்சர் என்ற உயரத்தையும் எட்டிப் பிடித்தார். சாதாரணமாக தன் பயணத்தை தொடங்கி குறுகிய காலத்திலேயே தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் யாராலும் அடைய முடியாத உயரத்தை எட்டி பிடித்திருக்கும் உதயநிதி அடுத்ததாக எவ்வளவு தடைகள் வந்தாலும் இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சரானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றே பலரும் கூறிவருகின்றனர். எல்லோரும் சொல்வது போல் அவரது அடுத்த கனவையும் எட்டி பிடிக்க அவரின் இந்த பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

மேலும் செய்திகள்