தமிழ் சினிமாவின் உலக அடையாளமாக மாறுமா 'தங்கலான்'?

பா.ரஞ்சித், சியான் விக்ரமை வைத்து வரலாற்று பெட்டகமான 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Update:2023-11-14 00:00 IST
Click the Play button to listen to article

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித், மீண்டும் தற்போது சியான் விக்ரமை வைத்து வரலாற்று பெட்டகமான 'தங்கலான்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் தாமதமானது. அதன்பின் சில வாரங்கள் கழித்து சென்னையில் தொடங்கப்பட்ட இப்படம், தற்போது விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்ததை வைத்து படத்தின் கதை களத்தை உருவாக்கியுள்ளதால், அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது மட்டுமின்றி ஒன்பது மில்லியன் பார்வைகளை கடந்து ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் உலக சினிமா அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அடையாளமாக மாறுமா? என்பதை இந்த தொகுப்பில் காணலாம்…

யார் இந்த 'தங்கலான்'?

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் சுரங்கத்தில் பணிபுரியும் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படத்தின் டைட்டில் ‘தங்கலான்’ என்று அறிவிக்கப்பட்ட போது எதனால் இந்த பெயர் வைக்கப்பட்டது என்ற தேடல் மற்றும் அது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் எழுந்தது. ஆனாலும் பலருக்கும் இப்பெயர் குறித்து நீண்ட நாட்கள் புலப்படாமலேயே இருந்த போது தான் அது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை பகிர ஆரம்பித்தனர். எது எப்படி இருந்தாலும் ‘தங்கலான்’ என்ற பெயர்ச் சொல் அவ்வளவு சாதாரணமானது அல்ல. அது ஒரு உணர்வு பூர்வமானது. 1981-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா ‘சென்சஸ் ஆப் பிரிட்டிஷ் இந்தியா’ என்ற புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அந்த புத்தகத்தில் ‘தங்கலான்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றிருப்பதுடன் 84 பறையர் இன உட்பிரிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புத்தகத்தில் தமிழ் பேசும் பறையர் இனங்களில் 59-வது பிரிவாக ‘தங்கலால பறையன்’ என்று ஒரு இனம் இருந்ததாகவும், பிற்காலத்தில் அதுவே பேச்சு வழக்கில் தங்கலான் என பெயர் மாற்றம் பெற்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இயக்குனர் பா.ரஞ்சித் 

அதேபோன்று ‘தங்கலான்’ என்பதற்கு உண்மையான பொருள் ஊர்காவலன் என்பதாகும். அதாவது ஊர் தலைவனாக, அங்குள்ள மக்களுக்கு பாதுகாவலனாக, இரவு நேரங்களில் ஊருக்குள் யாரும் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் எல்லை வீரனாக இருப்பவர்களை தான் தங்கலான் என்ற பெயரில் அழைப்பார்களாம். அதன் அடிப்படையில் அன்றைய காலத்தில் தங்கம் கிடைக்கும் இடங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வசம் இருந்ததாகவும், அதனை அபகரிக்க நினைத்தவர்களிடமிருந்து மக்களின் ஊர்காவலனாக இருந்த ஒருவன் எப்படி போராடி தங்கள் இன மக்களை காப்பாற்றினான் என்பதை அடிப்படையாக வைத்து படம் எடுக்கப்பட்டு இருப்பதாலேயே இப்படத்திற்கு இயக்குனர் பா.ரஞ்சித் ‘தங்கலான்’ என பெயர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சத்தமே இல்லமால் ஒரு பிரளயம்...

கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ‘தங்கலான்’ திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் ஒரு கதைக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு, இப்படத்திற்காகவும் தனது உடலை அதிகம் வருத்தி 28 கிலோ வரை எடை குறைத்து நடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஒகேனக்கல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது ஆந்திர மாநிலம் கடப்பா தொடங்கி அடுத்தடுத்து கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு இடங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டு படம் பிடிக்கப்பட்டது. இறுதியாக மதுரை மற்றும் சென்னையில் 10 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் பாகம் 2, ,‘ரஜினியின் ‘ஜெயிலர்’ அண்மையில் வெளிவந்த விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் ஆகியவை உலக அளவில் கொண்டாடப்பட்டது. காரணம் அப்படங்கள் குறித்து ஒவ்வொரு முறையும் வந்த அப்டேட்கள் அதன் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்ததுதான். இருந்தும் இந்த வேளையில்தான் சத்தமே இல்லாமல் அவ்வப்போது ‘தங்கலான்’ குறித்து வெளிவந்த அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை அதாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்படி 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ரஞ்சித் இயக்கத்தில், சியான் விக்ரம் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. பின்னர் படக்குழுவில் ஒவ்வொருவராக இணைக்கப்பட்டு அவர்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பின்னர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி அன்று படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு 54 நொடிகள் ஓடும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் காட்டப்பட்டிருந்த நிகழ்வுகள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக நடந்துள்ள நிகழ்வுகளை கூறுவது போன்றும், விக்ரம் உட்பட அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வும், அவர்களின் தோற்றம் மற்றும் நடிப்பு ஆகியவை பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தன.


கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல்

இதன்பிறகு ‘தங்கலான்’ உலகில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு விஷயத்துக்கு தயாராகுங்கள் என இந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் 57வது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று படப்பிடிப்பிற்கு முன்னதாக ஒவ்வொருவரும் தயாராகும் நிகழ்வுகளை ஒரு வீடியோ தொகுப்பாக பதிவு செய்து மேக்கிங் வீடியோவாக படக்குழு வெளியிட்டது. அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவை பார்த்த இருதரப்பு ரசிகர்களும் இது நிச்சயம் வரலாற்றில் பேசும் படமாக அமையும் என்று கொண்டாடும் அளவுக்கு அவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. இதனால் நாளுக்கு நாள் ‘தங்கலான்’ படத்தின் மீதான அறிவிப்பும், அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில், நவம்பர் 2ஆம் தேதி அன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. அந்த டீசரில் ஒட்டுமொத்த திரையுலகமே மிரண்டுப் போகும் படியான சண்டைக் காட்சிகளும் , போர்க் காட்சிகளும், இடம்பெற்றிருந்ததை பார்க்கும் போது பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார்களோ என்று என்ன வைக்கும் படியாக இருந்தது. இந்த டீசரை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள், ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழ் சினிமாவை பார்த்து ஆச்சரியப்படும் விதமாக இப்படம் இருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டீசர் வெளிவந்த சில நாட்களிலேயே 9 மில்லியன் பார்வைகளை கடந்து சரித்திரம் படைத்ததை கொண்டாடும் விதமாக, கடந்த 7 ஆம் தேதி அன்று திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.


நடிகர் விக்ரமின் 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'தங்கலான்' பட புகைப்படங்கள் 

'தங்கலான்' குறித்து விக்ரம்

'தங்கலான்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நவம்பர் 2 தேதி அன்று சென்னையில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர் விக்ரம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தது மட்டுமின்றி இப்படம் குறித்த கருத்துகளை ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக விளக்கிப் பேசியிருந்தனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விக்ரம் வரலாற்றில் நல்ல விஷயங்களும் நடந்துள்ளது. அதற்கு சமமாக கெட்ட விஷயங்களும் நடந்துள்ளது. அதை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது. இன்றைய சூழலில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவர்கள் தங்களது வரலாற்று நிகழ்வுகளை படங்களாக எடுத்து பதிவு செய்து கொண்டாடி வருகிறார்கள். அதேபோன்ற எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் நமது இந்தியாவிலும், நம்மை சுற்றியுள்ள மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. ஆனால் இன்று இருக்கும் தலைமுறையினருக்கு அது எந்த அளவிற்கு தெரியும் என்று நமக்கு தெரியாது. டைட்டானிக் காதல் கதை என்றவுடன் முதலில் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அது தொடர்பாக எடுக்கப்பட்ட படமாகத்தான் இருக்கும். ஆனால் அதனை ஒரு படமாக உருவாக்கி கொண்டு வர அந்த குழு எவ்வளவு கடினமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் என்பதை நாம் யோசித்திருக்க மாட்டோம். அப்படித்தான் இந்த ‘தங்கலான்’ திரைப்படமும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தைத் திரையில் கொண்டு வருவது அவ்வளவு கடினமான ஒன்றாக இருந்தது. ‘சேது’, 'பிதாமகன்', ‘அந்நியன்’, 'ஐ', 'இராவணன்' போன்ற எத்தனையோ எதிர்பார்ப்பு மிக்க படங்களில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். ஆனால் தங்கலானுடன் ஒப்பிடும் போது அதெல்லாம் ஒன்றுமே இல்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய சிரமப்பட்டுதான் ஒவ்வொரு காட்சியிலும் நடித்துள்ளேன்.


'தங்கலான்' மேக்கிங் வீடியோ காட்சிகள்  

 இந்த படம் குறித்து ரஞ்சித் என்னிடம் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. நிச்சயம் இந்த படம் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் என நான் நம்பினேன். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் படம் முழுக்க முழுக்க செட்டுக்குள் எடுக்கப்படாமல் கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலுக்கே நேராக சென்று, அங்கையே தங்கி எடுத்துள்ளோம். தேள், பாம்பு என்று எல்லா ஜீவராசிகளும் மிகவும் சாதாரணமாக வந்துபோகும். கல் மற்றும் முள் நிறைந்த பகுதிகளில் எல்லாம் வெறும் காலில் நடந்து நடித்தேன். முதல் முறையாக ரெக்கார்டிங் இல்லாமல் லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன். அது இன்னும் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால் லைவ்வில் மிகச்சரியான டோனில் பேச வேண்டும். ரெஸ்ட்டே இல்லாமல் எத்தனை முறை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். நான் ரஞ்சித்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.


'தங்கலான்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம் 

உலக அரங்கில் சாதிக்குமா 'தங்கலான்'?

எந்த ஒரு கடினமான விஷயத்தையும் அசால்டாக செய்யும் சியான் விக்ரமையே மிரள வைத்துள்ள 'தங்கலான்' படத்தின் மேக்கிங், படத்தின் நாயகி பார்வதிக்கோ வேறு வித உணர்வினை கொடுத்துள்ளது. படம் குறித்து இன்ஸ்டாவில் உருக்கமாக பேசியிருந்த பார்வதி அதில், " எனது நெருங்கிய நண்பர் சமீபத்தில் எனக்கு ஒரு வாசகத்தை அனுப்பினார், 'தங்கலான்' படத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தை ஒரே வரியில் சிறப்பாக சொல்ல இதை விட ஒரு சிறப்பான வாசகம் இருக்க முடியாது. அது என்னவெனில் "காதல், பணம், புகழ் இதை தவிர எனக்கு உண்மையை தாருங்கள்" என்பது தான். அந்த வகையில் 'தங்கலான்' படத்தில் நான் நடித்த போது சென்ற இடங்கள், நான் தேர்ந்தெடுத்த விஷயங்கள் அனைத்தும் எனக்குள் நான் எழுப்பியிருந்த சுவரை சுக்குநூறாக உடைத்து கடைசியில் உண்மையை மட்டுமே எஞ்ச வைத்தது, இப்படம் எனக்கு நிச்சயம் மிக முக்கியமான திருப்பத்தை கொடுக்கும்" என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.


'தங்கலான்' பட டீசரில் இடம்பெற்ற காட்சிகள் 

இப்படி நடிகை பார்வதிக்கு ஏற்பட்ட இதே உணர்வுதான் இந்த படத்தினை பார்ப்பவர்களுக்கும் ஏற்படும் என்பதால், 'தங்கலான்' படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தயாரிப்பு நிறுவனமும், இயக்குனர் பா.ரஞ்சித்தும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், இப்படம் சொல்லும் அரசியல் எந்த நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் தானாம். மேலும் நடிகர் விக்ரம் இப்படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்துள்ளதாகவும், அதை வீணடிக்க கூடாது என்பதில் படக்குழு மிக கவனமாக இருக்கிறார்களாம். சமீபத்தில் பா.ரஞ்சித் இந்த படம் குறித்து கூறுகையில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் மற்றும் கலாசாரத்தை ஒட்டி இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது . அது திரையில் நிச்சயம் பிரதிபலிக்கும் என கூறியிருப்பார். அந்த வகையில், உலகில் எத்தனையோ பழங்குடியின மக்களின் வரலாறு தோண்டி புதைக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் 'தங்கலான்' நிச்சயம் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் என்று நாம் நம்பலாம்.

Tags:    

மேலும் செய்திகள்