சமந்தாவின் வாழ்க்கையை பறித்தாரா சோபிதா? பின் ஏன் இவ்வளவு வெறுப்பு?
நிராகரிப்பு என்றால் ஒன்றிரண்டல்ல; கிட்டத்தட்ட 1000 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன் என்று அவரே தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகள் குறித்து மனம்திறந்திருக்கிறார். இருப்பினும் விடாது முயற்சித்துவந்த நேரத்தில்தான் 2016ஆம் ஆண்டு ‘ராமன் ராகவ் 2.O’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கடந்த சில மாதங்களாகவே காரணமே இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துவரும் நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. நாக சைதன்யாவை சோபிதா திருமணம் செய்துகொள்ளப்போவதாக வெளியான அறிவிப்புதான் ரசிகர்களின் இந்த கொந்தளிப்புக்கு காரணம். நாக சைதன்யாவும் சோபிதாவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானதிலிருந்தே, சமந்தாவின் வாழ்க்கையை சோபிதா பறித்துவிட்டதாகவும், குடும்பத்தை உடைப்பவர் என்றும் சோபிதா மீது பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நிஜத்தில் சோபிதா மிகவும் எளிமையானவர் என்றும், சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளுக்குப் பிறகு இந்த இடத்தை அடைந்திருக்கிறார் எனவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவை போன்றே எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் காலடி எடுத்துவைத்த சோபிதாவிற்கு நடிகை என்ற அங்கீகாரமானது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. தற்போது டோலிவுட், பாலிவுட் மற்றும் மோலிவுட் என முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் சோபிதா துலிபாலா கடந்துவந்த பாதை குறித்தும், காதல் திருமணம் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.
சந்தித்த நிராகரிப்புகள்
ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட தெலுங்கு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சோபிதா துலிபாலாவின் தந்தை கடற்படையில் பணியாற்றி வந்தார். சோபிதாவின் 15 வயது வரை விசாகபட்டினத்தில் இருந்த குடும்பம் அதன்பிறகு மும்பைக்கு குடியேறியது. சிறுவயதிலிருந்தே நடனத்தின்மீது இருந்த அதீத ஆர்வத்தால் பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தார். மும்பையில் இருந்தாலும் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் விசாகபட்டினத்திலிருக்கும் தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றுவிடுவாராம். இப்படி குடும்பத்தின்மீது அதிக அன்பும் பாசமும் கொண்டிருந்தாலும் இவர் மாநிறமாக இருந்ததால் என்னவோ, உடனிருந்த நண்பர்களே அசிங்கமாக இருப்பதாகக் கூறி உருவக்கேலிக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களிடம் தன்னை நிரூபிக்கும் நோக்கத்தில் கடற்படை நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, ‘கடற்படை ராணி’ என்ற பட்டத்தைப் பெற்றார்.
சோபிதாவின் ‘மிஸ் எர்த்’ அழகிப்போட்டி தருணங்கள்
அதனைத் தொடர்ந்து தனக்குள் சிறிது தன்னம்பிக்கை அதிகரித்த காரணத்தால், 2013ஆம் ஆண்டு நடந்த ‘மிஸ் எர்த்’ போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டு, மிஸ் ஃபோட்டோஜெனிக், டேலண்ட், மிஸ் பியூட்டிஃபுல் மற்றும் மிஸ் பியூட்டி ஃபார் அ கேஸ் (gaze) போன்ற பட்டங்களை பெற்றார். இதன்மூலம் மாடலிங்கில் நுழைந்த இவர், ஓரிரு ஆண்டுகளில் சினிமாவிலும் வாய்ப்புத் தேடினார். ஆனால் அவருடைய உருவத்தையும் நிறத்தையும் காரணம்காட்டி பல படங்களில் அவரை நிராகரித்துவிட்டதாக கூறியுள்ளார். நிராகரிப்பு என்றால் ஒன்றிரண்டல்ல; கிட்டத்தட்ட 1000 முறை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன் என்று அவரே தான் சந்தித்த அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகள் குறித்து மனம்திறந்திருக்கிறார். இருப்பினும் விடாது முயற்சித்துவந்த நேரத்தில்தான் 2016ஆம் ஆண்டு ‘ராமன் ராகவ் 2.O’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் சுமாரான வசூலையே பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது.
குறுகிய காலத்தில் கிடைத்த புகழ்
தொடர்ந்து ‘காள கண்டி’ மற்றும் ‘செஃப்’ ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னதான் பாலிவுட்டில் நடித்தாலும் சோபிதாவிற்கு தனது தெலுங்கு தேசத்தின்மீதுதான் அதிக அன்பு உள்ளதாலேயே தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தேடினார். அந்த தேடுதலுக்கு பலனாக 2018ஆம் ஆண்டு ‘கூடாச்சாரி’ என்னும் படத்தின்மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் சோபிதாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்தது ‘மேட் இன் ஹெவன்’ வெப் தொடர். இந்த தொடரில் தனது சிறப்பான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார் சோபிதா. அதனைத் தொடர்ந்து Bard of blood', 'The Night Manager' போன்ற ஓடிடி தொடர்களில் நடித்துக்கொண்டே ‘மூத்தோன்’ படம்மூலம் மலையாளத்திலும் என்ட்ரி கொடுத்தார். அந்த படம் ஓரளவு வெற்றிபெற்றபோதிலும் சோபிதாவிற்கு அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கு மலையாள வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக சோபிதா
இந்தி படங்கள் மற்றும் வெப் தொடர் என பிஸியாக இருந்த சோபிதாவிற்கு தென்னிந்திய சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது ‘குருப்’ என்ற மலையாளப்படம். அந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இவர் காதல் மழையை பொழிந்த ‘பகலிறவுகள்’ என்ற மெலோடி பாடல் மிகவும் ஹிட்டடித்தது. இப்படி ஆண்டுக்கு ஒருபடம் என நடித்துவந்த சோபிதாவிற்கு கிடைத்தது ‘பொன்னியன் செல்வன்’ வாய்ப்பு. அருண்மொழி வர்மனுக்கு ஜோடியாக வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கண்ணசைவு மற்றும் உடல்மொழியால் இந்திய அளவில் ரசிகர்களை பெற்றார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ‘மங்கி மேன்’ படத்தின்மூலம் ஹாலிவுட் அறிமுகமும் கிடைத்தது. இப்படி அனைவருக்கும் நன்கு பரிச்சயபட்ட முகமாக சோபிதா மாறியிருந்தாலும் சமீபகாலமாக இவர்மீது வெறுப்புகள் கொட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது நாக சைதன்யாவுடனான காதல்.
நாக சைதன்யாவுடனான காதலும் விமர்சனங்களும்
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக வலம்வந்த நாக சைதன்யாவும் சமந்தாவும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது விவாகரத்தை அறிவித்தபோதே, நிறையப்பேரின் ஆதரவு சமந்தாவிற்கு கிடைத்தது. நாக சைதன்யாவும் தனது அப்பாவைப் போன்றே இரண்டாம் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், சோபிதாவுடனான தனது காதலை வெளிப்படுத்தி அந்த வதந்தியை உண்மையாக்கினார் நாக சைதன்யா. ஏற்கனவே மயோசிட்டிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு சமந்தா அவதிப்படுவதற்கு நாக சைதன்யாவின் பிரிவுதான் காரணம் என்று அவருடைய ரசிகர்கள் சொல்லிவந்த நிலையில், சைதன்யா - சோபிதா காதல் குறித்து செய்திகள் வெளியானதிலிருந்தே, இந்த ஜோடி மீது வெறுப்பை காண்பிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சமந்தாவுடன் ஒப்பிட்டு சோபிதாவை மோசமான விமர்சனங்கள் மற்றும் உருவகேலிக்கு ஆளாக்கிவரும் நெட்டிசன்கள் அவரை, குடும்பத்தை பிரிப்பவர் என்றும், சமந்தாவின் வாழ்க்கையை பறித்தவர் என்றும் கடுமையாக சாடிவருகின்றனர்.
சோபிதா - நாக சைதன்யா டேட்டிங் புகைப்படங்கள்
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்துவந்த நிலையில், தங்களது சமூக ஊடகங்களில் ஒரே இடத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஹிண்ட் கொடுத்துவந்தனர். இதுகுறித்து பொதுவெளியில் வாய்திறக்காமல் தவிர்த்துவந்த இந்த ஜோடி, ஒரு கட்டத்தில் இவர்களுடைய வீட்டில் தங்களது காதல் குறித்து மனம்திறந்திருக்கின்றனர். நாகர்ஜூனா தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருப்பதாக பெரும் மகிழ்ச்சியில் அறிக்கை வெளியிட்டதுடன், நிச்சயதார்த்தம் குறித்தும், திருமணம் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவின் வீட்டில் வைத்து மிகவும் எளிமையாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் எப்போது என கேள்வி எழுப்பிவந்தனர். இதனிடையே திருமண சடங்குகள் நடைபெற்றது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டார் சோபிதா. அதனைத்தொடர்ந்து திருமணம் குறித்த செய்திகளும் வெளியாகியுள்ளன. அதன்படி வருகிற டிசம்பர் 4ஆம் தேதி இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்திலுள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடக்கிறது என குறிப்பிட்ட திருமண பத்திரிகை சமூக ஊடகங்களில் பரவி டிரெண்டானது. ஏற்கனவே தனது திருமணம் முழுக்க முழுக்க தெலுங்கு சாஸ்திர சம்பிரதாயங்களின்படிதான் நடக்கும் என சோபிதா தெரிவித்திருந்த நிலையில், அதேபோல் அந்த பத்திரிக்கையும் மிகவும் பாரம்பரிய முறைப்படி அச்சிடப்பட்டிருக்கிறது. இந்த திருமணத்தில் திரைத்துறையினரும் பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படும் நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தைப் போன்று இவர்களுடைய திருமணத்தையும் வெளியிடும் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.
தெலுங்கு பாரம்பரியப்படி நடந்த சோபிதா - சைதன்யா நிச்சயதார்த்தம்
சோபிதா குறித்து நாக சைதன்யா
தன்னை காதலித்ததற்காக மோசமாக விமர்சிக்கப்பட்ட சோபிதாவிற்கு ஆதரவாக முதன்முறை வாய் திறந்திருக்கிறார் நாக சைதன்யா. சோபிதா தன்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் எனவும், தனக்குள் இருக்கும் வெற்றிடத்தை அவர் நிரப்பிக்கொண்டிருப்பதாகவும், அவருடன் சேர்ந்து புது வாழ்க்கையை தொடங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த திருமணம் ஒரு அற்புதமான பயணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். தனது திருமண ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், அன்னபூர்ணா ஸ்டூடியோ முன்பு இருக்கும் தனது தாத்தாவின் சிலைக்கு முன்பு வைத்து திருமணத்தை நடத்தவேண்டுமென குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாகவும், அந்த இடத்துக்கும் தனக்கும் தனிப்பட்ட கனெக்ஷன் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். இதனிடையே நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்துடன் சேர்த்து அவருடைய தம்பி அகில் அக்கினேனி - ஜெய்னப் ராவ்த்ஜி திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நவம்பர் 26ஆம் தேதி இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் நிலையில் இருவருடைய திருமணத்தையும் ஒரே மேடையில் வைத்து நடத்துவதுதான் நாகர்ஜூனாவின் ப்ளான் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.