ஏன் சினிமாவை விட்டுவிட்டு சீரியலுக்கு வந்தேன்? - மனம் திறக்கும் நடிகை மீனா குமாரி

சினிமாவில் தனது முதல் படத்தில் விஜயகாந்தின் தங்கை சுமதியாக காலடி எடுத்து வைத்து இன்று கயல் அம்மா காமாட்சியாக வலம் வருபவர்தான் நடிகை மீனா குமாரி.

Update:2024-11-19 00:00 IST
Click the Play button to listen to article

சின்னத்திரை, பெரிய திரை என்றில்லாமல் அனைத்து தளங்களிலும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள்தான் தொடர்ந்து நீடித்து நிலைக்கிறார்கள். அந்தவகையில் சினிமாவில் தனது முதல் படத்தில் விஜயகாந்தின் தங்கை சுமதியாக காலடி எடுத்து வைத்து இன்று கயல் அம்மா காமாட்சியாக வலம் வருபவர்தான் நடிகை மீனா குமாரி. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை திரையில் நிலைநிறுத்தி மக்களை மகிழ்வித்து வரும் இவர் தன் திரை அனுபவங்கள் குறித்து ராணி நேயர்களுக்காக வழங்கிய நேர்காணலின் இரண்டாம் பாக தொடர்ச்சியை பார்க்கலாம்.

கதாநாயகியாக வேண்டாம் என்று முடிவெடுக்க என்ன காரணம்?

எல்லோரும் கதாநாயகி ஆகிவிட முடியாது. அவரவருக்கென்று சில தனித்துவமான விஷயங்கள் இருக்கிறன்றன. கதாநாயகியாக வெற்றி பெறவும், தங்களை தக்கவைத்து கொள்ளவுமே சில குவாலிட்டிஸ் தேவைப்படுவதாக நான் நினைக்கிறன். நாம் நினைப்பது மாதிரியான, நமக்கு தகுந்த கதாபாத்திரங்கள் வருவது என்பது கடினமான ஒன்று. இன்னொன்று நான் குடும்பப்பாங்கான வேடங்களில்தான் நடிப்பேன்; கிளாமராக நடிக்க மாட்டேன். இப்படியான கட்டுப்பாடுகளுடன் கதாநாயகியாக முயற்சி செய்தோம் என்றால் வரும் வாய்ப்புகளும் இல்லாமல் போய்விடும். அதேபோன்று, கதாநாயகியாக நாம் வெற்றிபெற முடியாமல் போனால் கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக கூட நம்மால் நடிக்க முடியாமல் போய்விடும். அதனால் எனக்கு படங்களில் ஹீரோயினாக நடிப்பது செட் ஆகாது என்ற மனநிலை வந்துவிட்டது. நான் படங்களில் ஹீரோயினாக நடிக்காவிட்டாலும், தொடக்க காலத்திலேயே சின்னத்திரையில் நாயகியாக நடித்து அதன் வெற்றியை சுவைத்துவிட்டேன். படங்கள் அனைத்தும் ஹீரோவை முன்னிறுத்தியே இருக்கும். சீரியல்கள் அனைத்தும் நாயகியை முன்னிறுத்தியே இருக்கும். எனவே படங்களை விட சீரியல்களில் பத்து மடங்கு வசனம் பேசி நடித்துவிட்டேன் என்பதே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். 


நிம்மதி தொடரின் மூலம் முதல் முறையாக கதையின் நாயகியாக அறிமுகமான மீனா குமாரி 

பெரிய திரையில் எப்படி பெரிய நட்சத்திர ஹீரோக்களின் படங்களில் அறிமுகமாகி நடித்தீர்களோ அதே போலத்தான் சின்னத்திரையிலும் முதல் தொடரிலேயே பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது.. அது எப்படி சாத்தியமானது?

ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் என்னை அழைத்து வாய்ப்பு தரும்போதெல்லாம் அது என்னுடைய வெற்றி என்றுதான் நினைப்பேன். சின்ன வேடமாக இருந்தாலும், பெரிய வேடமாக இருந்தாலும் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வாய்ப்பு வருகிறது என்றால் அதுதான் என்னுடைய பிளஸ். அப்படிதான் மர்ம தேசம் வாய்ப்பும் எனக்கு வந்தது. மர்ம தேசத்தில் நடிக்கும் பொழுது, நான் ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துக்கொண்டிருந்தேன். அதனால், தேதி கொடுப்பதில் பிரச்சினை வந்தது. இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை வேறு யாரையும் வைத்து எடுக்க வேண்டும் என்று நினைக்காமல் உன்னால் எப்படி வந்து நடித்து கொடுக்க முடியுமோ நடித்து கொடு என்று தயாரிப்பு நிறுவனமும் எனக்கான முக்கியத்துவத்தை கொடுத்து அதில் நடிக்க வைத்தார்கள். அபப்டித்தான் அதில், நடித்ததற்கான பெருமையும் எனக்கு கிடைத்தது.


'திருவிளையாடல்' திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக வரும் மீனா குமாரி

அந்தரங்கலு என்ற தெலுங்கு தொடரில் சரத்பாபுவுடன் நடித்தீர்கள்.. அந்த அனுபவம் பற்றி கூற முடியுமா?

ஆமாம். அந்தரங்கலுதான் தெலுங்கில் என்னுடைய முதல் தொடர். இந்த தொடரில் பிரியங்கா என்ற நெகடிவ்வான கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதாவது சரத்பாபு எங்கள் வீட்டு வேலைக்காரராக இருப்பார். என்னுடைய அப்பா அவர் பொறுப்பில் எங்களை விட்டுவிட்டு போவார். ஆனால், நான் அவரை மதிக்க மாட்டேன். என் கண்ணிற்கு அவர் எங்கள் வீட்டு வேலைக்காரனாகத்தான் தெரிவார். அதற்கு முன்புவரை தமிழில் நான் நடித்த அத்தனை வேடங்களும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள்தான். அதற்கு அப்படியே நேரெதிராக தெலுங்கில் நெகட்டிவான ரோலில் அறிமுகமானலும் அந்த தொடர் எனக்கு மிகப்பெரியதொரு வெற்றியை பெற்றுக்கொடுத்தது. என்னை எங்கு பார்த்தாலும் பிரியங்கா, பிரியங்கா என்று அந்த கதாபாத்திர பெயரோடு அழைக்க ஆரம்பித்தார்கள். இதன் பிறகு, தமிழ், தெலுங்கு இரண்டிலும் கதாநாயகியாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு முழுக்க முழுக்க பாசிட்டிவ்வான வேடங்கள் மட்டும்தான் இப்போது வரை நடித்துக்கொண்டிருக்கிறேன்.


'அந்தரங்கலு' என்ற தெலுங்கு தொடரில் நடிகர் சரத்பாபுவுடன் 

நிம்மதி என்ற தொடர்தான் நீங்கள் நாயகியாக வேடம் ஏற்ற முதல் தொடர்… அதுபற்றி கூற முடியுமா?

ஆம், ஏவிஎம் நிறுவன தயாரிப்பில் வெளிவந்த தொடர் அது. அதற்கு முன்பாக அவர்கள் தயாரிப்பில் தமிழில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற தொடரில் தெலுங்கு பதிப்பில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்தேன். அதன் பிறகுதான் ஏவிஎம் நிறுவனம் என்னை நாயகியாக போடலாம் என்று ‘நிம்மதி’ தொடர் வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள். இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியால் ‘மலர்கள்’ தொடர் தவிர அதே நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து ‘நாணயம்’, ‘வைர நெஞ்சம்’, ‘உறவுக்கு கை கொடுப்போம்’ என நான்கு, ஐந்து தொடர்கள் நாயகியாகவே நடித்து அதிலும் நல்ல வரவேற்பை பெற்றேன். இதுதவிர, மலையாளத்திலும் சுமார் 10 வருடங்கள் நாயகியாவே ஆறு, ஏழு தொடர்களில் நடித்தேன். இதனால் என்னை எல்லோரும் மலையாளி பொண்ணு என்றுதான் நினைத்தார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி தொடர்களிலும் மிகவும் பிசியாக இருந்ததால்தான் தெலுங்கு திரையுலகில் இருந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தும் என்னால் அவற்றில் நடிக்க முடியவில்லை. பலமுறை படங்களில் நடிக்க அழைப்பவர்கள் பேசாமல் சீரியலை விட்டு வந்து விடுங்கள் என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், படங்களை விட சீரியலில் நமக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். நேரம் இல்லாத அளவுக்கு, வேறு எதை பற்றியும் யோசிக்க முடியாத அளவுக்கு நிறைய வாய்ப்புகளை சீரியல்கள்தான் கொடுத்தன.


டிவி தொடர்களில் நாயகியாக அசத்திய மீனா குமாரி

படங்களை விட சீரியல்களில் நடிப்பதற்கு காலநேரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மூன்று மொழிகளிலும் எப்படி டைம் மேனேஜ்மென்ட் செய்தீர்கள்?

அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. பத்து நாட்கள் ஒரு சீரியலுக்காக ஒதுக்கி தேதி கொடுத்து விட்டோம் என்றால் அந்த பத்துநாட்கள் அவர்களுக்கானது. அதன் பிறகுதான் அடுத்த சீரியலுக்கு போவோம். அதனால், அதெல்லாம் பிரச்சினை இருக்காது. ஆனால், நமக்கான நேரம்தான் கிடைக்காது. நமது வீட்டிலேயே ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால் கூட கெஞ்சி அனுமதி பெற்றுதான் கலந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு மிகவும் பிசியாக இருக்கும் வேலை.

நீங்கள் நடித்த சீரியல்களிலேயே உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்றால் எதை சொல்லுவீர்கள்?

கதாநாயகியாக நடித்தவர்களுக்கு அவர்கள் நடித்த அத்தனை வேடங்களுமே மனதிற்கு நெருக்கமான ஒன்றாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவற்றில் நிறைய வித்தியாச வித்தியாசமான ரோல்கள் இடம்பெற்றிருக்கும். அதனால், இது எனக்கு பிடிக்கவில்லை என்று எதையுமே சொல்ல முடியாது. ஒவ்வொரு கதையிலும் நாயகியாக வரும் ஒரு பெண்ணுக்கு பின்னால் நிறைய எமோஷன்ஸ், பிரச்சினைகள் போன்றவை இருக்கும். இப்ப ஒரு சீரியலில் ஹீரோயின் வேடம் பெருசா, அம்மா வேடம் பெருசா என்று கேட்டால் இப்போதைக்கு நான் நடிக்கும் கேரக்டர்தான் எனக்கு பெரிதாக தெரியும். அதனால் நான் ஏற்ற வேடங்களில் இது பெருசு, இது சின்னது என்றெல்லாம் சொல்ல முடியாது.


ஏவிஎம்மின் 'வைரநெஞ்சம்' தொடரில் சக்தியாக...   

வைரநெஞ்சம் சக்தி கதாபாத்திரம் இன்றும் மறக்க முடியதா ஒன்றுதான்.. அதுபற்றி சொல்லுங்களேன்?

ஆமாம், வைரநெஞ்சம் சக்தி கதாபாத்திரம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்றைக்கு கயல் சீரியலில் கயலை எப்படி கொண்டாடுகிறார்களோ அப்படித்தான் அன்று வைரநெஞ்சம் சீரியலில் என்னை பார்த்தார்கள். எப்போது கோபப்பட வேண்டும், எப்போது விட்டு கொடுத்து போகவேண்டும், கணவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், இப்படி பல பரிமாணங்களை காட்டிய ஒரு தொடர். ஒரு வார இதழில் கூட ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் எம்ஜிஆர் நம்பியாரை சாட்டையால் அடிக்கும் காட்சியோடு இந்த தொடரில் எனது கதாபாத்திரத்தை ஒப்பிட்டு எழுதியிருந்தார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

வெளியில் செல்லும் பொழுது மக்கள் உங்களுக்கு கொடுக்கும் ஆதரவு எப்படி இருக்கும்?

என்னை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நான் அழுதால் அவர்களும் சேர்ந்து அழுவர்களாம். அதேபோன்று என் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சொல்லி நீங்கள் சரியாகத்தான் செய்து இருக்கிறீர்கள். அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பாசிட்டிவ் எனர்ஜியோடு பேசுவது உற்சாகமாக இருக்கும். அதையெல்லாம் கேட்கும் பொழுது என்னுடைய கதாபாத்திரத்தில் அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரியும். அண்ணி, அக்கா இப்படி எந்த வேடத்தில் நடித்திருந்தாலும் அதை அப்படியே அவர்களாகவே நடித்து சப்போர்ட் கொடுப்பார்கள். இப்பொழுது அம்மாவாக நடித்து கொண்டிருப்பதால் அம்மாக்கள் அனைவரும் சப்போர்ட் கொடுக்கிறார்கள்.


'கயல்' சீரியல் காமாட்சியாக மீனா குமாரி  

அம்மாவாக நீங்கள் முதலில் நடித்த சீரியல் ‘சந்திரலேகா’ தான். ஹீரோயினாக இருந்த உங்களை அம்மா வேடம் என்று அணுகும்போது எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியலில் ஹீரோயின் வேடங்களில் நடித்து முடித்துவிட்டேன். அடுத்த வாய்ப்புக்காக காத்திருந்த போதுதான் நிறைய புது முகங்கள் வர ஆரம்பித்தார்கள். நானும் மிகவும் யோசிக்கவில்லை. கதை சொல்ல வந்தவர்களும் நீங்கள்தான் எல்லாமே என்பது போல் பேசி ஒத்துக்கொள்ள வைத்துவிட்டார்கள். அப்படித்தான் கதையும் சென்றது. நானும் அப்படியே அதை ஏற்றுக்கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

Tags:    

மேலும் செய்திகள்