மன்மத லீலையை வென்றார் உண்டோ! - நடிகை ரதி
கரும்பு வேண்டாம் என்கிற எறும்பு உண்டா? ஆனால், எனக்கு மன்மதனே வேண்டாம் என்கிறார்,ரதி!
(20.01.1980 தேதியிட்ட ‘ராணி’ இதழில் வெளியானது)
கரும்பு வேண்டாம் என்கிற எறும்பு உண்டா? ஆனால், எனக்கு மன்மதனே வேண்டாம் என்கிறார், ரதி! ஏனாம்?
"புதிய வார்ப்புகள்” படத்தில் நடிக்கும் பொழுது, எனக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. ஒரு தமிழ்ப் படம்கூட நான் பார்த்தது இல்லை. முதல் படம் வெற்றி பெற்றால், தொடர்ந்து நடிப்பது; வரவேற்பு பெறாவிட்டால், நடிப்பதை விட்டு, "மாடல்" தொழிலுக்கே சென்றுவிடுவது என்று இருந்தேன். ஆனால், "புதிய வார்ப்புகள்" பெரும் வெற்றி பெற்றது. எனக்கு பேரும் புகழும் கிடைத்தது. பல படங்கள் என்னை தேடி வந்தன. அப்போதுகூட, தமிழ் படிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை ஏற்படவில்லை.
தவறான செய்தி
இருவேறு தோற்றங்களில் ரதி
ஆனால், எனக்கு தமிழ் தெரியாது என்பதை வைத்துக்கொண்டு, சில பத்திரிகைகளில் என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார்கள். ஓரிரு மாதத்துக்கு முன்னால்தான், இது எனக்கு தெரியவந்தது. என் மீது அக்கறை உள்ள ஒரு தமிழ் நண்பர், அவற்றைப் படித்து ஆங்கிலத்தில் எனக்குச் சொன்னார்! அவற்றைக் கேட்ட எங்கள் எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள்!
என்னைப் பற்றி மட்டுமா? என் அப்பாவையும் விடவில்லை. நான் கிராமத்துக்கு படப்பிடிப்புக்குச் சென்றாலும் "குளு குளு" அறை கேட்கிறேனாம்! என்னை நடிகை ஆக்கிய பாரதிராஜாவை குறைவாக பேசினேனாம். என் தந்தை எல்லோரையும் விரட்டுகிறாராம்! இப்படி இன்னும் எத்தனையோ செய்திகள்!
மன நிறைவு
யாரையும் மயக்கி, குலாவி வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை - நடிகை ரதி
ஆனால், இவற்றில் ஒன்றை நினைக்கும்போது எனக்கு மனநிறைவு ஏற்பட்டது.
என்னைப் பற்றி, அப்படி இப்படி என்று யாரோடும் தொடர்புபடுத்தி எழுதவில்லை.
ஒரு பெண்ணுக்கு அதுவும் ஒரு நடிகைக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கிறது! என்னைப் பற்றி, அப்படி எழுதவும் முடியாது. நான் அந்த பட்டியலைச் சேர்ந்தவள் அல்ல. யாரையும் மயக்கி, குலாவி வாய்ப்புப் பெற வேண்டும் என்ற நிலை எனக்கு இல்லை. திறமையில் நம்பிக்கையில்லாத நடிகைகள்தான் கட்டில் அறை காதலிகளாக - படுக்கை அறை பாவைகளாக - எடுப்பார் கைப்பிள்ளையாகப் படாதபாடு படவேண்டியிருக்கிறது! திரை உலகம் அப்படி. ரசிகர்கள் எப்படி?
காதல் கடிதம்
'ஏக் தூஜே கே லியே' திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை ரதி
பொல்லாத ரசிகர்கள்!
சில ரசிகர்கள் எழுதுகிறார்கள் —
"ரதி! உன் மன்மதன் நான்தான்! உன்னை காதலிக்கிறேன்! உன்னையே மணந்து கொள்ளுவேன்” என்று மலர்க்கணை தொடுக்கிறார்கள்!
காதல்!
கல்யாணம்!
“போர்"!
கேட்டுக் கேட்டு காது புளித்துப் போய்விட்டது!. நான் காதலிக்கப் போவது இல்லை! எந்த மன்மதனிடமும் மயங்கப்போவதும் இல்லை.
திருமணம்
திருமணம் குறித்து பேசிய நடிகை ரதி
என் மார்க்கெட் இன்னும் எத்தனை நாளைக்கு என்று சொல்லமுடியாது!
ஆனால், 22, 23 வயதில் எனக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று என் அம்மா விரும்புகிறார்கள். என் அம்மா யாரைக் காட்டுகிறார்களோ, அவருக்கே நான் கழுத்தை நீட்டுவேன்!. (மாமியாருக்கு - சோப்புப் போடத் தயார் ஆகுங்கள்!)