விஜயகாந்த், ராவுத்தர் பிரிவுக்கு காரணம் என்ன? - மறக்க முடியாத நினைவுகளை பகிரும் ஆர்.கே. செல்வமணி

'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமாகி, தன் லட்சியத்தை அடைந்தவர்தான் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.

Update: 2024-12-30 18:30 GMT
Click the Play button to listen to article

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்து எல்லோராலும் விஜயராஜ் என்று அழைக்கப்பட்ட ஒருவர், சினிமா மீது கொண்ட மோகத்தால், தந்தையின் வார்த்தையையும் மீறி வாய்ப்பு தேடி சென்னை வந்து 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமாகி, தன் லட்சியத்தை அடைந்தவர்தான் மறைந்த கேப்டன் விஜயகாந்த். 1980-ஆம் ஆண்டு வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் இவர். அதிரடி நாயகனாக அறியப்பட்டது என்னவோ 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படத்தில் இருந்துதான். அதன் பிறகு, இவர் தொடாத உச்சங்கள் இல்லை; அடையாத வெற்றிகள் இல்லை; இவர் அறிமுகப்படுத்தாத இயக்குநர்கள் இல்லை. அதனாலேயே அவர் மறைந்தும் வாழும் கடவுளாக அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகை சார்ந்தவர்களாலும் பார்க்கப்படுகிறார். அந்த வகையில், அவரது முதலாம் ஆண்டு நினைவையொட்டி விஜயகாந்தால் இயக்குநராக அறிமுகம் பெற்று என்றுமே மறக்க முடியாதபடி பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவரும், ஃபெஃப்சி சம்மேளனத் தலைவருமான திரு.ஆர்.கே.செல்வமணி, விஜயகாந்துடனான நினைவுகள் குறித்து பேசியுள்ளார். அந்த நேர்காணலின் தொகுப்பை இங்கே காணலாம்.

விஜயகாந்துடன் பணியாற்றிய மறக்க முடியதா நினைவுகள் குறித்து பகிர்ந்து கொள்ள முடியுமா?

அவருடன் பணியாற்றிய நினைவுகள் குறித்து பேச வேண்டும் என்றால் ஒருவருடம் தேவைப்படும். அவரை முதன் முதலாக 1985-ஆம் ஆண்டு நான் உதவி இயக்குநராக பணியாற்றி கொண்டிருந்த போதுதான் சந்தித்தேன். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்திலேயே அவ்வளவு அன்பாக நடந்துகொண்ட ஒரு அற்புதமான மனிதர். அந்த அன்பு நான் இயக்குநராக, தயாரிப்பாளராக மாறிய பிறகும் அப்படியே இருந்தது. விஜயகாந்த் என்ற மனிதரின் மிகப்பெரிய குணம் என்ன என்றால் நீ பணக்காரனா, ஏழையா, அறிவாளியா, முட்டாளா இது எதையுமே பார்க்காமல் மனிதனை மனிதனாக, எல்லோரையும் சமமாக பார்த்து பழக்கூடிய ஒருவர். அவரை மாதிரி திரையுலகில் வேறு எந்த நடிகரையும் பார்க்க முடியாது. மனதால் எல்லோரையும் உண்மையாக நேசித்த ஒரு மனிதர் அவர். இது யாரையும் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. எவ்வளவு கோபப்பட்டாலும் அடுத்த அரைமணி நேரத்தில் தன் கோபத்தை மறந்துவிட்டு எதிரியாக இருந்தாலும் நேசிக்க கூடிய ஒரு மனிதர். மன்னிப்பு கேட்க யோசிக்க மாட்டார். தன் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து நடித்த ஒரே நடிகர் அவர் மட்டும்தான். துணை நடிகர்களால் கூட எனக்கு நிறைய பிரச்சினைகள் வந்து இருக்கிறது. ஆனால், விஜயகாந்த் சாரால் எனக்கு ஒரு பிரச்சினை கூட வந்தது கிடையாது. திரையுலகில் என்னுடைய தாயும், தந்தையும் விஜயகாந்த் தான். அவரை மாதிரியான ஒரு மனிதரை இந்த உலகத்தில் பார்க்கவே முடியாது.


நடிகர் விஜயகாந்த் குறித்து மனம் திறந்து பேசிய ஆர்.கே.செல்வமணி 

விஜயகாந்த் சாப்பிடும்போது ஓட்டுநராக இருந்தாலும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிடலாம். இயக்குநராக இருந்தாலும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிடலாம். எல்லோருமே அவருக்கு ஒன்றுதான். அவர் தனியாக அமர்ந்து சாப்பிட்டு நான் பார்த்தது கிடையாது. சாப்பிடும் அவரை சுற்றி ஒரு பத்து பேர் இருக்க வேண்டும். சீக்கிரம் சாப்பிட்டு விட்டால் கூட எழுந்து எல்லாருக்கும் பரிமாற ஆரம்பித்து விடுவார். அதேபோல் படப்பிடிப்புக்கு கிளம்பி செல்லும்போது கூட, அந்த வழியாக செல்ல வேண்டியவர்கள் யாராவது இருந்தால், அவர்களையும் தன்னுடைய காரில் வம்படியாக ஏற்றி அமர வைத்து அழைத்து வருவார். 45 இயக்குநர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய ஒரே ஹீரோ அவர் மட்டும்தான். அதேபோன்று சாதாரண மனிதர்களையும் தயாரிப்பாளர்களாக அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது. ஆனாலும், கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வது மட்டுமின்றி முதன் முதலாக மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக பிரித்து நிறைய மாணவ - மாணவிகளை படிக்க வைத்தார்.


அரசியலுக்கு வருவதற்கு முன்பே பலருக்கும் உதவிக்கரம் நீட்டிய விஜயகாந்த் 

அவர் அடிக்கடி கூறுவார். நான் ஒரு சாதாரண ஆள் செல்வமணி. இன்னைக்கு கடவுள் என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்து இருக்கிறார். என்னை எவ்வளவு பேர் அவமானப்படுத்தி இருப்பார்கள். அந்த மாதிரி யாரும் என் வீட்டு வாசலில் வந்து நின்று விடக்கூடாது. ஆயிரம் பேருக்கு நம்மால் உதவி செய்ய முடியாது. ஆனால், அந்த ஆயிரம் பேரை அவமானப்படுத்தி விடக்கூடாது. உதவி செய்ய முடிந்தால் செய்யணும். இல்லை என்றால் என்னால் முடியாது என்று அனுப்பிவிட வேண்டும். யாரையும் அலைய வைக்கவோ, அவமானப்படுத்தவோ கூடாது என்று சொல்லுவார். அவர் அப்படியெல்லாம் யோசித்ததற்கு முக்கிய காரணம், தான் பட்ட கஷ்டங்களை வேறு யாரும் படக்கூடாது என்பதால்தான். அப்படியான ஒரு மனிதரை இனி பார்க்க முடியாது.

சாப்பிட போன தன்னை எழுப்பிவிட்டதன் வேகம் தானே அவரை எல்லோருக்கும் சமமான உணவு கொடுக்க வைத்தது?

நிச்சயமாக அதை யாராலும் மறுக்க முடியாது. இரண்டு வகையான அசைவ உணவுகளோடுதான் அவர் எல்லோருக்கும் சாப்பாடு வழங்குவார். ஃபலூடா, வெஜ் சூப், சிக்கன், மட்டன் சூப், இளநீர் இப்படி வகை வகையாக கொடுப்பார். இது ஹீரோவுக்கு மட்டும் இல்லை. கேட்கிற எல்லா கலைஞர்களுக்கும் கொடு. ஒருத்தருக்கு கொடுத்து இன்னொருத்தருக்கு இல்லை என்ற பேச்சே இங்கு இருக்கக்கூடாது என்று சொல்லுவார். ஒன்றா.. இரண்டா… இப்படி அவரை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது.

புலன் விசாரணை படம்தான் என் திருமணத்திற்கு நீங்கள் எனக்கு கொடுத்த பரிசு என்று விஜயகாந்த் கூறினாராமே? அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் சார்?


 'என் திருமணத்தில் தலை நிமிர்ந்து நிற்க நீதான் காரணம்' - செல்வமணியை பாராட்டிய விஜயகாந்த் 

அந்த படத்தை விஜயகாந்த் சாரை வைத்து இயக்கும்போது இருவருக்கு இடையிலும் நிறைய மனஸ்தாபங்கள் இருந்தன. சொன்ன தேதியை தாண்டி படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய தருணங்களில் நிறைய நிகழ்வுகள் அவருக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும், முடியாது என்று சொல்லாமல் நடித்து கொடுத்துவிடுவார். ஜனவரி 14 படம் வெளியீடு. ஆனால், டிசம்பர் மாதம் வரை ஷூட்டிங், படத்தொகுப்பு வேலைகள் எல்லாம் முடியாமல் போய் கொண்டிருந்தது. வந்துட்டோம் முடுச்சுவோம் என்று அவர் முடித்து கொடுத்துவிட்டார். இப்படியான சிறு சிறு காரணங்களால் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே இருந்தோம். படத்தை எப்படியோ முட்டி மோதி முடித்து 14-ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்துவிட்டேன். படம் சூப்பர் டூப்பர் ஹிட். விஜயகாந்துக்கு ஜனவரி 31 மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளே சென்று வெளியில் வரமுடியாது. அந்த அளவுக்கு கூட்டம். அந்த கூட்டத்தில் என்னை யார் என்று கூட பலபேருக்கு தெரியாது. பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் கூட்டத்தில் உள்ளே செல்வதற்கு வரிசையில் நின்று தத்தளித்து கொண்டிருந்த என்னை விஜயகாந்த் பார்த்துவிட்டார். உடனே கையை நீட்டி என்னை அவர் இழுத்தபோது நான் கொண்டு சென்று இருந்த பரிசு கீழே விழுந்துவிட்டது. உடனே நான் பதறியதை பார்த்து அது என்னப்பா கிஃப்ட்? நீயே எனக்கு பெரிய கிஃப்ட்தான். நான் இன்னைக்கு திருமணத்தில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணமே நீதான் என்று சொல்லி என் தோள்மீது கைபோட்டு அவர் சொன்னது மறக்க முடியாது. அங்கு இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அவர் என்னை அப்படி அழைத்து பாராட்டியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். இது நான் இயக்குநராக வெற்றி பெற்ற பிறகு நடந்த நிகழ்வு என்றால் கூட, இந்த மாதிரியான நிகழ்வு புலன் விசாரணை முதல் நாள் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடக்கும் போதும் கூட நிகழ்ந்தது. அப்போதும் அவர் என்னை அப்படிதான் நடத்தினார். இப்படி அவருடனான நிறைய நிகழ்வுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

விஜயகாந்த் மற்றும் ராவுத்தரை அருகில் இருந்து பார்த்தவர் நீங்கள்… அவர்களின் நட்பு பற்றி கூற முடியுமா?


திரையுலகில் நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த விஜயகாந்த் - ராவுத்தர் 

அந்த மாதிரியான நட்பையும் சரி, கோவத்தையும் சரி இந்த உலகில் நான் பார்த்தது கிடையாது. விஜயகாந்த் முழுக்க முழுக்க ராவுத்தரை மட்டுமே நம்பி இருந்தார். விஜயகாந்த் தரப்பில் ஒரு 30 சதவிகிதம் தவறு இருக்கிறது என்றால், ராவுத்தர் தரப்பில் ஒரு 70 சதவிகிதம் தவறு இருக்கிறது. ராவுத்தர் அதை சரி செய்ய நிறைய முயற்சி செய்தார். ஆனால், விஜயகாந்த் மனதளவில் நிறைய காயப்பட்டு விட்டாதால், ராவுத்தருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார். மன்னிக்க முடியாத குற்றமாக அந்த நிகழ்வு இல்லாவிட்டாலும் நாம் பெரிதாக நம்பிய நண்பன் இப்படியா என்று சொல்ல முடியாத வேதனையாக அது மாறிவிட்டது. அதற்கு மேல் அதுபற்றி நான் விவரிக்க விரும்பவில்லை. அது மாதிரியான நட்பும் இல்லை; சோகமும் இல்லை. இறப்பதற்கு முன்னாடி எப்படியாவது தன் நண்பனிடம் மன்னிப்பு மட்டும் கேட்டுவிட வேண்டும் என்று ராவுத்தர் நினைத்தார். ஆனால், விஜயகாந்த் அவரை பார்க்க வரும் போது சுயநினைவை இழந்துவிட்டார். நான் விஜி வந்துருக்கேன்டா என்று எழுப்பும்போது கூட எழுந்திருக்கவில்லை. அப்போது விஜயகாந்த் சாரின் குரலை கேட்டு கோமாவில் இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்தது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால், ராவுத்தர் இறந்து போன அன்று விஜயகாந்த் ஒரு குழந்தைபோல் ஆகிவிட்டார். அந்த துக்கத்தில் இருந்து வெளிவர அவருக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. அதற்கு காரணம், அவன் நன்றாக இருக்கும் போதே ஒருமுறை சந்தித்து பேசி இருக்கலாமோ என்று தோன்றியிருக்கலாம்.

விஜயகாந்த் எதிரிகளை கூட எளிதாக மன்னித்துவிடுவார். ஆனால், பெரிதாக நம்பியவர்கள் செய்த துரோகங்களை அவ்வளவு எளிதாக அவரால் மன்னிக்க முடியாது. கட்சி ஆரம்பித்து அவருடன் இருந்த நம்பிக்கையானவர்கள் நிறைய பேர் அவருக்கு துரோகம் செய்துவிட்டு போனபோது நொறுங்கியே போய்விட்டார். ஒருவேளை ராவுத்தர் அவருடன் இருந்திருந்தால் அந்த துரோகங்கள் நடைபெறாமல் தடுத்து இருப்பார். “நீ என் கூடவே இருந்து இருக்கலாமே” என்ற கோவமும் ராவுத்தர் மீது விஜயகாந்துக்கு கடைசிவரை இருந்து இருக்கலாம்.

விஜயகாந்த் - ராவுத்தர் இருவரின் பிரிவுக்கு காரணம் பிரேமலதா என்று சொல்லப்படுகிறதே! அது உண்மையா?


விஜயகாந்த் - ராவுத்தர் பிரிவுக்கு பிரேமலதா காரணம் கிடையாது - ஆர்.கே.செல்வமணி 

எனக்கு தெரிந்து அப்படி ஏதும் இல்லை. இப்போது விஜயகாந்த் குறித்து புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்காக பிரேமலதாவிடம் பேசும்போது இருவரின் பிரிவு குறித்தும் பேசியிருக்கிறேன். ஆனால், அதற்கு அவர்கள் காரணம் என்பது போல் எந்த நிகழ்வுகளும் இடம்பெறவில்லை. ஆனாலும் விஜயகாந்துக்கு மனைவி என்ற ஒருவர் வந்த பிறகு அவர்களுக்கு உரிய உரிமையை ராவுத்தர் கொடுத்து இருக்க வேண்டும். தெரிந்தவரை, அவர் அப்படி ஏதும் கொடுக்கவில்லை. விஜயகாந்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படியான நிகழ்வுகளும், பிரேமலதாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதுபற்றி நாம் கருத்து சொல்ல முடியாது.

கடைசியாக நீங்கள் விஜயகாந்தை சந்தித்து பேசிய தருணம் எது?

உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவருக்கு தொற்று ஏற்பட்டுவிடும் என்று பார்க்க அனுமதிக்கவில்லை. அதனால், பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டோம். அதன் பிறகு, 2023 ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி அன்று, நான், இயக்குநர் உதயகுமார் உள்ளிட்ட சிலர் சென்று சந்தித்தோம். அப்போது என் கையை அப்படியே பிடித்துக்கொண்டார். ஒரு அப்பா கையை, குழந்தை பிடித்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் அப்படியே என்னை கட்டி அணைத்துக் கொண்டார். அப்போது உதயகுமார் “அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே” பாட்டை பாடினார். எல்லோருடைய கண்ணில் இருந்தும் கண்ணீர் வந்தது. உடனே விஜயகாந்த் அழக்கூடாது என்று தலையை ஆட்டினார். அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்தது.


 விஜயகாந்தை இறுதியாக செல்வமணி சந்தித்த தருணம் 

அவரின் மறைவுக்கு வந்த கூட்டத்தை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

விஜயகாந்தின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை உலகிற்கு பறைசாற்றிய ஒரு நிகழ்வாதான் நான் அதை பார்த்தேன். அவருடைய தேமுதிக கட்சி பலவீனமாக இருந்த நேரம். அழைப்பாரில்லாமல் அவ்வளவு பெரிய கூட்டம் வந்து இருக்கிறது என்றால் தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நன்றி உள்ளவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அது. நல்லது செய்தால் நல்லதுதான் நடக்கும் என்பதற்கு அடையாளம்தான் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம். திரைப்பட கல்லூரியில் இருந்துவந்த என்னைப்போன்ற பலருக்கு அவர்தான் காட்ஃபாதர். அவர் இல்லையென்றால் நானோ மற்றவர்களோ இங்கு இல்லை. எங்களுக்கு ராஜபாட்டை அமைத்து கொடுத்தது அவர்தான்.

Tags:    

மேலும் செய்திகள்