திருமண நாளன்றே விவாகரத்து பெற்ற நடிகை! - சினி டாக்ஸ்!

‘கோட்’ படத்தின் ப்ரீ புக்கிங்கானது ஓவர் சீஸில் மட்டும் முதல் நாளில் ரூ. 2.1 வசூல் செய்திருக்கிறது. ப்ரீ புக்கிங்கிலேயே தெறிக்கவிடும் விஜய்க்கு ஜாதகம் சரியில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

Update:2024-08-27 00:00 IST
Click the Play button to listen to article

இந்த வாரம் முழுக்க தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படுவது நடிகர் விஜய் குறித்த செய்திகள்தான். காரணம், கட்சிக் கொடி அறிமுக விழா ஒருபுறம், ரிலீஸுக்கு தயாராகிவரும் ‘கோட்’டின் புக்கிங் வசூல் சாதனை மறுபுறம் என விஜய்யின் கல்லா களைகட்ட தொடங்கியிருக்கிறது. இதுபோக, பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ரிலீஸான ‘தங்கலான்’, ‘ராயன்’ மற்றும் ‘மகாராஜா’ போன்ற படங்கள் இன்றும் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகின்றன.

கோடிகளில் எஸ்.ஜே சூர்யாவுக்கு வீடு கட்டிய ஷங்கர்!

ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பலமாக இருந்த நிலையில் படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளானது. படத்தில் பிரம்மாண்டம் மட்டுமே இருப்பதாகவும், கதையும், காட்சியாக்கப்பட்ட விதமும் நம்பத்தக்க வகையில் இல்லை என்றும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.


‘இந்தியன் - 2’ திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் வீடு செட்

இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவின் வீட்டின் செட் போட மட்டும் ரூ. 8 கோடியை செலவழித்தாராம் ஷங்கர். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ்.ஜே சூர்யா கூறிய நிலையில் ரசிகர்கள் வீடு செட்டிற்கே 8 கோடியா என அதிர்ச்சியில் வாய்பிளந்து வருகின்றனர். ‘இந்தியன் - 2’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், மூன்றாம் பாகம் மக்களுக்கு திருப்தி அளிக்கும் என படக்குழு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.

‘மகாராஜா’வாக இவரா?

விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ தற்போது ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தனுவைத்தான் அணுகியதாக படத்தின் இயக்குநர் நித்திலன் கூறியதையடுத்து, சாந்தனு அந்த வாய்ப்பை தவறவிட, அவருடைய அப்பா பாக்யராஜ்தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.

அதில், ‘மகாராஜா’ போன்ற ஒரு சிறந்த கதையில் நடிக்க என்னை முதலில் அணுகிய நித்திலன் சாமிநாதனுக்கு நன்றி எனவும், அந்த படத்தை மிஸ் செய்ததற்கு தனது அப்பாவோ, தானோ காரணம் இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இயக்குநர் தன்னிடம் கதை சொன்னது அப்பாவுக்கு தெரியாது என்றும், தயாரிப்பு நிறுவனம் ரிஸ்க் எடுக்க விரும்பாததால்தான் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விற்பனைக்கு வந்த சோனாக்‌ஷி சின்ஹா வீடு!

கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை பாந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கினார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. 4,200 சதுர அடியில் அமைந்திருக்கும் அந்த பெரிய வீட்டிலிருந்து பார்த்தால் மஹீம் கடற்கரை நன்றாக தெரியுமாம். அந்த வீட்டில் வைத்துதான் தனது காதலன் ஜாஹீர் இக்பாலை திருமணம் செய்துகொண்டார் சோனாக்‌ஷி. இந்நிலையில் தனக்கு திருமணமான இரண்டே மாதங்களில் அந்த வீட்டை விற்க முடிவெடுத்திருக்கிறார் இவர்.


தனது சொகுசு பங்களாவை விற்பனை செய்யும் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா 

வீட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மட்டும் சுமார் ரூ.5 கோடி செலவில் செய்யப்பட்டிருக்கும் அந்த வீட்டிற்கு விலை ரூ.25 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த வீட்டின் விற்பனை வீடியோவை சோனாக்‌ஷியின் கணவர் இக்பாலும் லைக் செய்திருக்கிறார். திருமணமான சில நாட்களிலேயே தான் ஆசையாக வாங்கிய வீட்டை விற்க காரணம் என்னவாக இருக்கும்? என கேள்வி எழுப்பி வருகின்றனர் சோனாக்‌ஷியின் ரசிகர்கள்.

மோடியை பின்னுக்கு தள்ளிய நடிகை

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்துக்கொள்வது இப்போது ட்ரெண்டாகிவிட்டது. அப்படி இந்தியாவை பொருத்தவரை 271 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், 91.8 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களுடன் பிரியங்கா சோப்ரா இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடி 91.3 கோடி ஃபாலோயர்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். இந்நிலையில் அவரை பின்னுக்குத் தள்ளி நடிகை ஸ்ரத்தா கபூர் 92.2 கோடி ஃபாலோயர்களை பெற்றிருக்கிறார்.


இந்திய அளவில் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நடிகை ஸ்ரத்தா கபூர் 

‘ஸ்ட்ரீ 2’ படம் வெளியாகி ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில் ஸ்ரத்தாவின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை மடமடவென அதிகரித்திருக்கிறது. இவர்களுக்கு அடுத்த நிலையில் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் இருக்கின்றனர். ஆனால் இன்றுவரை எக்ஸ் தள பக்கத்தில் 101.2 கோடி ஃபாலோயர்களுடன் நரேந்திர மோடி உலகளவில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு நேரம் சரியில்ல!

நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட தயாராகிவரும் நிலையில், அவரது கட்சிக் கொடியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். கட்சிக் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை மற்றும் வாகைப்பூ போன்றவற்றை ரசிகர்கள் கொண்டாடிவரும் வேளையில், ஜோதிடர் ஒருவர் விஜய்க்கு நேரம் சரியில்லை என்று ட்வீட் செய்திருக்கிறார். அதில், விஜய்யின் ஜாதகத்தையும், கிரகங்களின் நிலையையும் வைத்து மனைவியுடன் பிரச்சினை வரும் என்றும், கட்சி பிக்கப் ஆகாது என்றும், கட்சி தொடங்க இது சரியான நேரமில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விஜய்

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கொதித்தெழுந்திருக்கின்றனர். இந்த கணிப்பை நம்பமுடியாது எனவும், விஜய்க்கு என்றுமே உச்சம்தான் எனவும் கூறிவருகின்றனர். இது ஒருபுறமிருக்க, ‘தி கோட்’ படத்தின் ப்ரீ புக்கிங்கானது ஓவர் சீஸில் மட்டும் முதல் நாளில் ரூ. 2.1 கோடி வசூல் செய்திருக்கிறது. அதுபோக இந்தியாவில் எவ்வளவு கலெக்‌ஷன் ஆகும் என்ற விவரங்கள் விரைவில் தெரியவரும். ப்ரீ புக்கிங்கிலேயே தெறிக்கவிடும் விஜய்க்கு ஜாதகம் சரியில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

திருமண நாளில் விவாகரத்து கேட்ட ஹாலிவுட் நடிகை

நடிகை ஜெனிஃபர் லோபஸும், நடிகர் பென் அஃப்லெக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டுமுறை திருமணம் செய்துகொண்டனர். தற்போது திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது இரண்டாவது திருமண நாளன்று விவாகரத்துக் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஜெனிஃபர். திருமண நாளன்று விவாகரத்து கேட்கும் அளவிற்கு இவர்களுக்கிடையே என்ன பிரச்சினை நடந்தது என ரசிகர்கள் கேட்டுவரும் நிலையில், இந்த விவாகரத்தால் அஃப்லெக்கைவிட அதிகம் சம்பாதிக்கும் ஜெனிஃபர் அதிக சொத்துக்களை இழக்க நேரிடும் என்று சொல்லப்படுகிறது.


கணவர் பென் அஃப்லெக்குடன் நடிகை ஜெனிஃபர் லோபஸ்

இருப்பினும் அஃப்லெக்கிடம் இருந்து தனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறாராம். எப்படியாயினும், நடிகர் ஓஜாகி நோவா, டான்ஸ் மாஸ்டர் கிறிஸ் ஜட் மற்றும் பாடகர் மார்க் ஆண்டனி ஆகிய மூன்று பேரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்த ஜெனிஃபருக்கு அஃப்லெக் 4வது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்