"இளைய தளபதி" டூ "த.வெ.க. தலைவர்" - விஜய் 50வது பிறந்தநாள் ஸ்பெஷல்!

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில்தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் போடப்பட்டது.

Update:2024-06-22 15:03 IST

"நடிகரும்",  "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் தலைவருமான விஜய் இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குறித்த ஒரு ஸ்பெஷல் கட்டுரையை பார்ப்போம்.

சென்னை பையன் விஜய்

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி மகனாக பிறந்தவர்தான் ஜோசஃப் விஜய். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த விஜய், தனது பள்ளி படிப்பை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாத்திமா பள்ளியிலும், விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியிலும் பயின்றார். பின்னர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். மொத்தத்தில் பக்கா சென்னை பையனாகவே வளர்ந்தார். 


அம்மா, அப்பா, சகோதரியுடன் விஜய்

எப்படி தொடங்கியது திரைப்பயணம்?

குடும்பமே சினிமா குடும்பம் என்பதால், சிறு வயதிலேயே திரைத்துறையின் மீது விஜய்க்கு ஆர்வம் இருந்தது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இப்படித்தான் விஜய்யின் சினிமா பயணம் தொடங்கியது.

விஜய்யை ஹீரோவாக்கிய தந்தை

1992-ம் ஆண்டு “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஆனால் அந்த படத்தில் விஜய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது மகனை எப்படியாவது ஹீரோவாக நிலைநிறுத்த எஸ்.ஏ. சந்திரசேகர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுதான் ”செந்தூரப்பாண்டி” திரைப்படம். நடிகர் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து நடிக்க வைத்தது பலன் அளித்தது. எதிர்பார்த்தபடி விஜய் பிரபலமானார். தமிழக கிராம மக்களின் கவனத்தை பெற்றார் விஜய். தொடர்ந்து, தந்தையின் பட்டறையிலேயே பட்டை தீட்டப்பட்ட விஜய், எஸ்.ஏ.சி. இயக்கத்திலேயே “ரசிகன்”, “தேவா”, “விஷ்ணு” என அடுத்தடுத்த படங்களில் நடித்து, ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார்.


விஜயகாந்துடன் இணைந்து "செந்தூரப்பாண்டி" திரைப்படத்தில் நடித்தபோது 

"இளைய தளபதி"

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில்தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் போடப்பட்டது.

முதல் ப்ளாக்பஸ்டர் "பூவே உனக்காக"

சென்டிமெண்ட் இயக்குநர் விக்ரமன், விஜய்யை வைத்து இயக்கிய “பூவே உனக்காக” திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இதுதான். அதுவரை கமெர்ஷியல் ஃபார்முலா வளையத்திற்குள், சாதாரண ஹீரோ கதாபாத்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்த விஜய்யை சூப்பர் நடிகர் என அடையாளப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன். 

“பூவே உனக்காக” திரைப்படம்தான் விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கும் அச்சாரமிட்டது. இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம், “பூவே உனக்காக” படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகையாகி, அவரை பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்தார். ரசிகையாக அறிமுகமாகி, தோழியாகி, காதலியாகி, பின் விஜய்க்கு மனைவியும் ஆனார் சங்கீதா.


விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கு அச்சாரமிட்ட “பூவே உனக்காக” திரைப்படக்காட்சி - மனைவி சங்கீதா சொர்ணலிங்கத்துடன் விஜய்

"ஸ்டார் நடிகர் அந்தஸ்து"

ஃபாசில் இயக்கத்தில் 1998-ல், “காதலுக்கு மரியாதை” திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஷாலினி ஜோடி மக்களை பெரிதும் கவர்ந்தது. “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தைத் தொடர்ந்து, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான “லவ் டுடே” திரைப்படமும் ஹிட் அடித்ததால், ஸ்டார் நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார் விஜய். 

சங்கீதாவை கரம்பிடித்த விஜய்

தந்தை எஸ்.ஏ.சியின் கட்டுக்கோப்பான வளர்ப்பில் வளர்ந்த விஜய், அவரின் அறிவுறுத்தலின்படி திருமணமும் செய்துகொண்டார். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு சங்கீதாவின் கரம்பிடித்தார். திருமணம் ஆனவுடனேயே விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக மாறினார் மனைவி சங்கீதா. விஜய்-சங்கீதா தம்பதிக்கு மகன் சஞ்சய், மகள் திவ்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


"காதலுக்கு மரியாதை" மற்றும் "லவ் டுடே" திரைப்படங்களின் காட்சி

“மினிமம் கேரண்டி ஹீரோ”

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த விஜய், அதனை தக்கவைக்க தெளிவாக திட்டமிட்டார். “ நினைத்தேன் வந்தாய்”, “துள்ளாத மனமும் துள்ளும்” உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகன் ஆனார். எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த “குஷி” திரைப்படத்தின் மூலம் இளைய தலைமுறையினரை கவர்ந்தார். மேலும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் “மினிமம் கேரண்டி ஹீரோ” என்று பெயரெடுத்தார்.

காமெடியில் கலக்கிய விஜய்

பெரும்பாலான ஹீரோக்களுக்கு சிரமமான விஷயமான காமெடியும், நடனமும், விஜய்க்கு கை வந்த கலை. அந்த வகையில், சித்திக் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட ஃப்ரெண்ட்ஸ் படத்தில், சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார் விஜய். சச்சின், வசீகரா திரைப்படங்களில், வித்தியாசமான காமெடி சென்சை வெளிப்படுத்தியிருப்பார். அத்துடன் நல்ல குரல்வளத்திற்கு சொந்தக்காரரான விஜய், சினிமாவில் 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தனி முத்திரையை பதித்துள்ளார்.


நடிகர் விஜய்யின் அழகிய குடும்பம்

"பாக்ஸ் ஆஃபிஸ் கிங்" 

தொடர்ந்து “பிரியமானவளே”, “பத்ரி”, “ஷாஜகான்”, “யூத்” என அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்ட விஜய், ஆக்‌சன் ட்ராக்கிற்கு மாறி முதன் முதலில் நடித்த திரைப்படம்தான் “தமிழன்”. இதனைத்தொடர்ந்து திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இதில், “கில்லி“ திரைப்படத்தின் வசூல் "படையப்பா" திரைப்படத்தின் வசூலையே முறியடித்தது.

வெற்றிப் படங்களை வரிசையாக கொடுத்துவந்த விஜய்க்கு இடையில் சறுக்கல் ஏற்பட்டபோது, மீண்டும் அவரை தூக்கி நிறுத்திய படம்தான் "காவலன்". ஆக்சன் ஹீரோவாக மாறியிருந்த விஜய், காவலன் படத்தில் மீண்டும் அழகான காதலனாகவே மாறிப்போனார். காவலனைத் தொடர்ந்து வந்த வேலாயுதம் சுமார் என்றாலும், அதன்பின்னர் வந்த “நண்பன்”, “துப்பாக்கி”, “தலைவா”, “ஜில்லா”, “கத்தி”, “தெறி”, “மெர்சல்”, “சர்க்கார்”, “பிகில்”, “மாஸ்டர்”, “பீஸ்ட்”, “வாரிசு”, “லியோ” என அத்தனை படங்களும் விஜய்யை சூப்பர் ஸ்டார் நாற்காலியை நோக்கி நகர்த்தின என்றே சொல்லலாம். அத்துடன் "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"-காகவும் மாற்றின. 


இளைஞர்களை கவர்ந்த "குஷி" மற்றும் "ஃப்ரெண்ட்ஸ்" திரைப்படங்கள்

இயக்குநர்களால் மெறுகேறிய விஜய்

விஜய்யை பொறுத்தவரை, அனுபவ இயக்குநர், வெற்றி இயக்குநர் என்ற ட்ரெண்டை எல்லாம் உடைத்தெறிந்து, அனைத்துதரப்பட்ட இயக்குநர்களுடனும் பணியாற்றினார். அதற்கேற்ப இயக்குநர்களும் விஜய்யை சரியாக கையாண்டு, அவரை மெறுகேற்றினர் என்றே சொல்லலாம். இதனால் பல புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றிய விஜய் தொடர்ந்து அட்லி, ஆர்.டி.நேசன், ஏ.எல்.விஜய், லோகேஷ் கனகராஜ், நெல்சன் என இளம் திறமைகளுடன் கை கோர்த்து பட்டையை கிளப்பினார். இப்படி அனைத்து இயக்குநர்களும் சேர்ந்து செதுக்கியதே, விஜய்யின் திரை வெற்றிக்கு காரணம் என்று தந்தை எஸ்.ஏ.சி., நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தின் திரைக்கதை போன்றெல்லாம் இனி அமைய வாய்ப்பே இல்லை என்றும் எஸ்.ஏ.சி. கூறியுள்ளார். 

அரசியல் என்ட்ரி

2010-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களை மறைமுகமாக பேசி வந்தார் இளைய தளபதி விஜய். மெர்சல், சர்கார் போன்ற படங்களில் நேரடியாக அரசியல் பேசினார். அத்துடன், விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். விஜய்யின் சமூக பணிகள், அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் தூண்டின.


"தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் தலைவராக விஜய்

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது கட்சி பெயரை 02.02.2024 அன்று அறிவித்தார். "தமிழக வெற்றிக் கழகம்" என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய், கட்சியின் கோட்பாடாக "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வாசகத்தை வைத்தார். தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்தே தனது கட்சி செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக விஜய் 69 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

அரசியலில் ஜெயிப்பாரா?

இளைய தளபதி என இன்று அனைவராலும் கொண்டாடப்படும் விஜய்யைதான் ரசிக்க முடியவில்லை என ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்கள் விமர்சித்தன. இவருக்கெல்லாம் எதுக்கு சினிமா? ஹீரோவுக்கான தகுதியே இல்லை என்று தன் சினிமா என்ட்ரியின்போது தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு எல்லாம், தனது உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காவும் உயர்ந்து நெத்தியடி கொடுத்த விஜய், இதேபோல் அரசியல் களத்திலும் ஜெயிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்