திரையுலகை அதிரவைத்த வரலட்சுமி சரத்குமார் திருமணம்! மொத்த செலவு எத்தனை கோடி தெரியுமா?

வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் ஜூலை 2-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு ஜூலை 3-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

Update:2024-07-09 00:00 IST
Click the Play button to listen to article

அண்மையில் நடந்து முடிந்த ஸ்டார் திருமணமும், அதன் வரவேற்பு நிகழ்ச்சியும் தமிழ் திரையுலகை அதிரவைத்ததுடன், சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ட்ரெண்டாகி, அனைத்து தரப்பினரின் பேசுப்பொருளாகவும் மாறியது. அதுதான் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம். இந்தத் திருமணத்திற்கு ஏராளமான கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் ஜூலை 2-ம் தேதி தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், திருமண வரவேற்பு ஜூலை 3-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாக்களின் கொண்டாட்டம் கடந்த வாரம் முடிந்தபோதும், அந்த கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்களும், புகைப்படங்களும் இன்னும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

கடந்த பிப்ரவரியில் நடந்த நிச்சயதார்த்தம் 

நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி தமிழில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானார். படம் ஓரளவுக்கு ஓடியபோதும், வரலட்சுமிக்கு அதன் பின்னர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வாய்ப்புகள் வந்தன. இதனால் தென்னிந்திய சினிமாவில் பெயர் சொல்லும் நடிகையாக அவர் மாறினார். இதனிடையே, ஹீரோயின்தான் என்றில்லாமல், நெகட்டிவ், குணச்சித்திரம் என நல்ல ரோல்கள் எது வந்தாலும், அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து, தன்னை நல்ல நடிகையாக நிரூபித்தார் வரலட்சுமி. இயக்குநர் பாலா இயக்கத்தில் வரலட்சுமி நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை படம், விஜய்யுடன் நடித்த சர்க்கார் திரைப்படம் உள்ளிட்டவை அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. 


நிச்சயதார்த்தத்தின்போது வரலட்சுமி - நிக்கோலாய்

திரை பயணம் இவ்வாறு சென்று கொண்டிருக்க, வரலட்சுமிக்கு நடிகர் விஷாலுடன் திருமணம் நடைபெறலாம் என்று தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்த செய்திகள் அப்படியே அடங்கிப்போயின. நடிகர் சங்க விவகாரம், சில தனிப்பட்ட பிரச்சினை போன்ற காரணங்களால், வரலட்சுமி-விஷால் இடையிலான உறவு முடிவுக்கு வந்ததாக பின்னர் செய்திகள் வெளியாகின.

இந்தநிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நிக்கோலாய் சச்தேவ் யார் தெரியுமா?

மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வருகிறார் 41 வயதாகும் நிக்கோலாய் சச்தேவ். ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜ் பருவத்தில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு காதல் மனைவிக்கும், இவருக்கும் இடையே உரசல் ஏற்பட அது விரிசலாகி விவாகரத்தில் முடிந்திருக்கிறது. இவரது முன்னாள் மனைவி பெயர் கவிதா. இவர் மாடல். அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வாங்கியிருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், கருத்து வேறுபாடு அதிகமானதால் நிக்கோலாயை விட்டு பிரிந்திருக்கிறார். மகள் கோசா. இவர், பவர் லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளிக் கொண்டிருக்கிறார்.


முன்னாள் மனைவி கவிதாவுடன்

நிக்கோலாய் சச்தேவ் நடத்தும் ஆர்ட் கேலரியை அவரது அப்பா அருண் சச்தேவ் தொடங்கினார். மும்பையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த ஆர்ட் கேலரிக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அடிக்கடி வந்துபோவது உண்டு. இதனால் நிக்கோலாய்க்கு பாலிவுட் நட்சத்திரங்களின் பழக்கம் அதிகம் உள்ளது. உடல் முழுக்க டாட்டூ. முறுக்கேற்றிய உடற்கட்டு. நீண்ட கூந்தல் என நிக்கோலாய் சச்தேவின் தோற்றம் இருக்கிறது.

வரலட்சுமி - நிக்கோலாய் திருமண கொண்டாட்டம்

பிப்ரவரியில் நிச்சயத்தார்த்தம் முடிந்த கையோடு, கல்யாண வேலைகளை சரத்குமாரின் குடும்பத்தினர் படு ஜோராக தொடங்கினர். சரத்குமாரின் மனைவி ராதிகா, முன்னாள் மனைவி சாயா தேவி ஆகியோர் சேர்ந்து கவனித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். சாதாரண ஆர்டிஸ்ட் தொடங்கி இந்தியப் பிரதமர் மோடி வரை திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் திருமண கொண்டாட்டம் ஜூன் மாதத்தின் இறுதி வாரத்திலிருந்தே களை கட்ட தொடங்கியது. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் சங்கீத் ஃபங்க்‌ஷன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த சங்கீத் விழாவில் நடிகை ராதிகா ஆடிய டான்ஸ், பலரையும் கவர்ந்தது. முதலில் சோலோவாக ஆடிய ராதிகா, பின்னர் நடிகர் சரத்குமார் உடன் சேர்ந்து ரெளடி பேபி பாடலுக்கு கலக்கல் ஆட்டம்போட்டார்.


பாலிவுட் நட்சத்திரங்களுடன் நிக்கோலாய் இருக்கும் பழைய புகைப்படம்

சங்கீத் விழாவில் நடிகைகள் திரிஷா, சங்கீதா, மீனா, விஜயகுமாரின் மகள் அனிதா, வனிதாவின் மகன் ஹரி, நடிகர்கள் பிரபுதேவா, பிரபு, சந்தீப் கிஷன், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

மிகப் பிரம்மாண்டமாய் நடந்த திருமணமும், வரவேற்பும்

கடந்த ஜூலை 2-ம் தேதி வரலட்சுமி-நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், ஜூலை 3-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெற்றது. தாய்லாந்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தங்கள் செலவிலேயே ஃப்ளைட்டை புக் செய்து அழைத்து சென்றுள்ளனர் சரத்குமார் குடும்பத்தினர். 

அத்துடன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்களுக்குக் கார் அனுப்பி வரவேற்றார்களாம். அதுவும் விதவிதமான வெளிநாட்டு கார்கள் அணிவகுத்து நின்றதாம். ஓட்டலுக்கு அழைத்து வருவதும், அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்வதும் என, இவ்வளவு கார்கள் எங்கிருந்து வந்தன என பிரபலங்களே ஆச்சரியப்பட்டார்களாம்.

சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியுடன் பங்கேற்ற நிலையில், ஏராளமான அரசியல் பிரமுகர்களும் வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து திரைப்படத் துறையிலிருந்தும் பல்வேறு பிரபலங்கள் விழாவில் பங்கேற்றனர்.


சென்னை நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண வரவேற்பின்போது

குறிப்பாக திருமண விழாவில், 80-களில் கொடிகட்டி பறந்த நடிகைகள் ஷோபனா, சுஹாசினி மணிரத்னம், அம்பிகா, ரேவதி, பாலிவுட் நடிகை பூனம் தில்லியா என பல ஹீரோயின்கள் கலந்து கொண்டு வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 80ஸ் ஹீரோயின்களின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், எவர்கீரீன் பியூட்டிஸ் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மொத்த செலவும் நிக்கோலாய்தான்!

சங்கீத், திருமணம், வரவேற்பு என கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்ட, வரவேற்பில் இடம்பெற்ற உணவு, அல்டிமேட் என்று சொல்லப்படுகிறது. இந்திய உணவு வகைகள் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளின் பிரபல உணவுகளும் பட்டியலில் இருந்ததாம். குறைந்தது ஒரு ஆள் சாப்பாட்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில், இந்தத் திருமணத்திற்கு கிட்டத்தட்ட 80 முதல் 85 கோடி வரை செலவாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், சங்கீத் நிகழ்ச்சி, தாய்லாந்து தீவில் நடைபெற்ற திருமண வைபவம், சென்னை 5 நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற திருமண வரேவற்பு என அனைத்து கல்யாண செலவுகளையும் மணமகன் நிக்கோலாய் சச்தேவ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.


நிக்கோலாயின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 900 கோடி இருக்கும் என தகவல்

நிக்கோலாய் சச்தேவின் சொத்து மதிப்பு!

சரத்குமாரின் மருமகனாகியுள்ள நிக்கோலாயின் சொத்து மதிப்பு சுமார் 900 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள அவரது ஆர்ட் கேலரியில், மாதத்திற்கு ஒரு ஓவியம் விற்றால்கூட  போதுமாம். காலை ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்கின்றனர் பிரபல பத்திரிகையாளர்கள். அப்படி பார்த்தால் பணத்தில் அவர் சரத்குமாரை விட பெரிய ஆள் என்றும் அவர்கள் சொல்கின்றனர். இதனிடையே திருமணம் முடிந்த கையோடு வரலட்சுமி தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

வரலட்சுமியின் நல்ல மனதிற்கு குவியும் வாழ்த்து!

வழக்கமாக விழாக்களில் மீந்து போகும் உணவுகளை, ஆதரவற்ற இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் வரலட்சுமியோ, தனது திருமண வரவேற்பில் மீந்து போகும் உணவுகளை முதியோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுவிட்டாராம். அதற்குப் பதிலாக வரவேற்பு விழா நடைபெற்ற ஸ்டார் ஓட்டலில், பிரபலங்களுக்கு பரிமாறப்பட்ட அனைத்து உணவுகளும், அதே சுவையுடன், சுடச்சுட தயாரிக்கப்பட்டு, ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். அவர் சொல்லியபடியே உணவுகளும் அனுப்பப்பட்டனவாம். இது மிகவும் வரவேற்கத் தக்க விஷயம் என்றும், பெரிய புண்ணியம் என்றும் பலரும், வரலட்சுமியை மனதார வாழ்த்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்