வாணி போஜன் எப்போதுமே செம ‘கூல்’!
விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படத்தில் விக்ரம் உடன் சில காட்சிகளில் நடித்திருந்தார் வாணி போஜன்.
குளு குளு ஊட்டியில் பிறந்ததாலோ என்னவோ வாணி போஜன் எப்போதுமே ‘கூல்’தான். சின்னத்திரையில் மிளிர்ந்தவர் இப்போது பெரிய திரையிலும் தடம் பதித்து வருகிறார். அதுமட்டுமின்றி இடையிடையே வெப் தொடர்களிலும் தோன்றுகிறார். அவரைப் பொறுத்தவரை களம் எதுவென்பது முக்கியமில்லை அதில் ‘தான்’ முக்கியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
வாணி போஜன்
பெரிய குடும்ப பின்னணி எதுவுமின்றி உதகையில் சாதாரண படுகா குடும்பத்தில் பிறந்தவர் வாணி போஜன். அவருடைய தந்தை வன உயிரினங்களைப் படம் பிடிக்கும் ஒரு புகைப்படக் கலைஞர். முதலில் ‘ஏர் ஹோஸ்டஸ்’ ஆகத்தான் தனது கேரியரை ஆரம்பித்தார் வாணி. அப்போது மாடலாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்று ஜவுளிக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு ‘ஓர் இரவு’, ‘அதிகாரம் 79’ போன்ற திரைப்படங்களில் அவருக்கு சிறு வேடங்கள் கிடைத்தன. இந்நிலையில் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வந்த அழைப்பை ஏற்று சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். ‘ஆஹா’, ‘மாயா’, ‘தெய்வமகள்’, ‘லட்சுமி வந்தாச்சு’ என ‘தொடர் நாயகியாக’ சின்னத்திரையில் முத்திரைப் பதித்தார் வாணி போஜன். இதற்காக தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார். சீரியல் மட்டுமின்றி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இயங்கி வந்தார்.
தெய்வ மகள் மற்றும் லட்சுமி வந்தாச்சு சீரியலில் வாணி போஜன்
இப்படியாக சின்னத்திரைக்குள் சுழன்று கொண்டிருந்த வாணி போஜன் ‘மீகு மாத்ரம் செப்தா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு பெரிய திரைக்குள் நுழைந்தார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இருந்தபோதும் தமிழ் திரையுலகில் நுழைவதற்கு அவர் சற்று சிரமப்படவே செய்தார். ஒரு சில படங்கள் போட்டோ செஷனோடு நின்றது. சில படங்களில் ஒப்பந்தமானதாக சொல்லப்பட்டது. ஆனால் அதில் அவர் நடிக்கவில்லை. இதுபற்றி சில மீம்ஸ்களும் உலா வந்தன. ஆனால் அவர் அதற்கெல்லாம் அலட்டிக்காமல் ‘கூலா’க தமது முயற்சியில் முனைப்போடு இருந்தார். இப்படியாக போராடி ஒரு வருடத்திறகு பிறகு “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையில் அறிமுகமானார் வாணி. இந்தப் படத்தில் அசோக் செல்வனின் பள்ளிக்கால ‘கிரஷ்’ ஆக ‘மீரா’ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த ‘மீரா அக்கா’ கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வனுடன் வாணி போஜன்
அதற்கடுத்து ‘லாக் அப்’, ‘மலேசியா டூ அம்னீசியா’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, என வரிசையாக சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அவை எதுவும் பெரிதாகப் பேசப்படவில்லை. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த ‘மகான்’ திரைப்படத்தில் விக்ரம் உடன் சில காட்சிகளில் நடித்திருந்தார் வாணி போஜன். ஆனால் அது படத்தில் இடம்பெறாது போய்விட்டது.
சினிமாவைத் தொடர்ந்து வெப் தொடர்களிலும் நடிக்கத் தொடங்கினார். இதுவரை அவர் ‘டிரிபிள்ஸ்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ மற்றும் ‘செங்களம்’ ஆகிய வெப் தொடர்களில் நடித்திருக்கிறார். இதில் அவர் அரசியல்வாதியாக நடித்திருந்த ‘செங்களம்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தமிழ் ராக்கர்ஸ் மற்றும் செங்களம் வெப் தொடர்களில் வாணி போஜன்
இப்படியாக சின்னத்திரை, பெரிய திரை, வெப் தொடர்கள் என எல்லா தளங்களிலும் இயங்கி வருகிறார் வாணி போஜன். தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் தனது தோற்றத்துக்கும் திறமைக்கும் மட்டும் முக்கியத்துவம் தந்து அலட்டிக் கொள்ளாமல் திரையில் வலம் வரும் வாணி போஜன் நிஜமாகவே ஒரு ‘கூல்’ பெண்தான்.