யாருக்கும் ‘வணங்கான்’ - இயக்குநர் பாலாவின் 25 ஆண்டுகால திரைப்பயணம் ஒரு பார்வை
இயக்குநர் பாலா தமிழ்த் திரையுலகில் தனது சிறந்த படைப்புகளாலும், தனித்துவமான கதை சொல்லும் முறையாலும் முக்கியமான இயக்குநராக திகழ்பவர்.
இயக்குநர் பாலா தமிழ்த் திரையுலகில் தனது சிறந்த படைப்புகளாலும், தனித்துவமான கதை சொல்லும் முறையாலும் முக்கியமான இயக்குநராக திகழ்பவர். அவரது முதற்படமான 'சேது' முதல் 'பிதாமகன்', 'நான் கடவுள்', 'பரதேசி' போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் புதிய பரிமாணங்களை உருவாக்கின. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்தும் அவரது பாணி, பிரபல நடிகர்களை புதிதாக அறிமுகம் செய்யும் திறன் மற்றும் சமூக அர்த்தமுள்ள கதைகள் என்பவை பாலாவின் படங்களின் முக்கிய சிறப்புகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு இயக்குநர் பாலாவின் பெருமை குறைவாகவே தெரிந்துள்ளது. அந்த வகையில், இந்த தொகுப்பில் அவரின் 25 ஆண்டு கால திரைப்பயணம் மற்றும் அதில் அவருடைய படைப்புகள் எவ்வாறு உலகம் முழுதும் கவனிக்கப்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து விரிவாக காண்போம்.
‘சேது’ ஏற்படுத்திய தாக்கம்
'சேது' திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் நடிகை அபிதா
இயக்குநர் பாலாவின் முதல் படமான ‘சேது’ (1999) இன்று வரை தமிழ் சினிமாவில் ஒரு மைல்கலாக திகழ்கிறது. இந்த படத்தின் உருவாக்கம் மற்றும் வெளியீடு பல சவால்களை எதிர் கொண்டாலும், பாலாவின் திரைக்கதை மற்றும் படைப்பாற்றலின் தனித்துவத்தை அப்போதே வெளிக்காட்டியது. ‘சேது’ படத்தின் கதைக்களம், அன்றைய சமூகத்தின் உண்மையான நிலையை பிரதிபலிக்கும் விதத்தில், பாலாவின் மனதில் உருவாகியது. ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட காதலனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு காதல், தியாகம் மற்றும் பல்வேறு உணர்வுகளை பிரதிபலித்த இந்த படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலாவின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவர் கொண்டிருந்த வித்யாசமான சிந்தனைகள் இந்த கதையின் அடித்தளமாக அமைந்து பலம் சேர்த்தது. எனினும், படத்தின் தயாரிப்பு ஆரம்பத்தில் பல தடைகளை சந்தித்தது. புதிய இயக்குநரின் புதுமையான கதைக்களம் என்பதால், ‘சேது’ படத்திற்கு தயாரிப்பாளரை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பல தயாரிப்பாளர்கள் இந்த கதையின் டார்க் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தன்மையை கண்டு அச்சமடைந்தனர். ஆனால், ஸ்ர்மதா புரொடக்சன்ஸ் நிறுவனம் மட்டும் இந்த கதையின் தனித்துவத்தையும் தாக்கத்தையும் உணர்ந்து, படத்தை தயாரிக்க முன் வந்தனர்.
இயக்குநர் பாலாவின் 'சேது' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் விக்ரம்
படத்தின் தயாரிப்பு முடிந்த பிறகும், படத்தை வெளியிடுவதில் பல சவால்கள் இருந்தன. படத்தை பார்த்த பெரும்பாலான விநியோகஸ்தர்கள் அதை வெளியிட மறுத்தனர். படத்தின் கதை தமிழ் சினிமாவுக்கு புதியதாக இருந்ததால், அதை ஏற்றுக்கொள்ள பலருக்கும் கடினமாக இருந்தது. விக்ரம் தனது கதாபாத்திரத்திற்காக உடல் மற்றும் மனதளவில் பல மாற்றங்களை செய்து, அந்த கதாபாத்திரத்தை முழுமையாக வாழ்ந்து காட்டியிருந்தார். இளையராஜாவின் இசையும் படத்திற்கு ஒரு பெரிய பலமாக இருந்தது. ஆனாலும், இந்த இரண்டு காரணிகளும் படத்தின் வெளியீட்டின்போது பெரியளவில் பலனளிக்கவில்லை. முக்கியமான திரையரங்குகளும் கூட இப்படத்தை வெளியிட மறுத்துவிட்டன. இப்படி பல தடைகளையும், போராட்டங்களையும் கடந்து வெளியான இப்படத்தின் தரமான கதை மற்றும் விக்ரமின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு ஆகியவை படத்திற்கு மவுத் டு மவுத் பப்ளிசிட்டியை உருவாக்கின. இதனால் இப்படம் மெல்ல மெல்ல மக்களிடத்தில் பிரபலமாகத் தொடங்கியது. குறிப்பாக படத்தின் இறுதிப் பகுதியின் எமோஷனல் காட்சிகள் பலரின் மனதை தாக்கியது. இப்படத்தின் வெற்றியால் விக்ரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்தார். இயக்குநர் பாலா தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநராகப் பாராட்டப்பட்டார். இந்த படம், அவரின் உணர்ச்சிமிக்க கதைகள் மற்றும் நம்பகமான படைப்புகளின் அடையாளமாக இன்று வரை நிலைத்திருக்கிறது.
தேசிய அளவில் அங்கீகாரம்
'நந்தா' திரைப்படத்தில் நடிகர் சூர்யா
'சேது' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலா தனது இரண்டாவது படமான 'நந்தா'வை இயக்கினார். இந்தப் படத்தில் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சிறையில் வளர்ந்த ஒரு சிறுவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தப் படம், சூர்யாவின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது. அதுவரை இளம் காதல் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த சூர்யா, 'நந்தா' படத்தின் மூலம் ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெற்றி பெற்றார். இதன் மூலம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. 'நந்தா'வின் வெற்றிக்குப் பிறகு, பாலா தனது மூன்றாவது படமான 'பிதாமகன்'-ஐ இயக்கினார். இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒரு சிக்கலான மனோதத்துவ கதைக்களத்தைத் தாங்கிய இந்தப் படம், தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. விக்ரம் பேச தெரியாத கதாபாத்திரமான சித்தனாக நடித்த விதம், அவருக்கு தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு பிரமிக்க வைத்தது. இளையராஜாவின் இசை மற்றும் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது. குறிப்பாக படத்தின் முடிவில் வரும் சித்தனின் பழிவாங்கும் உச்சக்கட்ட உணர்வுகளும் அதிர்வும், படத்தை பார்த்த எல்லோரிடமும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
'பிதாமகன்' விக்ரம் மற்றும் 'நான் கடவுள்' ஆர்யா
‘பிதாமகன்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் இடைவெளி எடுத்த பாலா, 2009-ஆம் ஆண்டு ‘நான் கடவுள்’ என்ற அற்புதமான படத்தை இயக்கி, மீண்டும் இந்தியத் திரையுலகை அதிர வைத்தார். இதற்கு முன்பு, பாலாவின் ‘சேது’ திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படமாக பிராந்திய மொழிப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இயக்குநராக அவரது முதல் தேசிய விருது இப்படத்தின் மூலமே கிடைத்தது."அனைவரும் கடவுளே, ஒருவரின் கையாளுதல் மட்டுமே வேறுபாடு" என்ற ஆழமான கருத்தை மையமாகக் கொண்டு, மனித வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை வெளிச்சமிட்டுக் காட்டிய இப்படத்தில், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், அவர்களுக்குள் உள்ள மனிதாபிமானம் ஆகியவை அழுத்தமாகப் பதிவாகியிருந்தன. குறிப்பாக, அகோரிகளின் வாழ்க்கையை முதல் முறையாக திரையில் கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பாலா, அவற்றை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்ய பல துறவிகள் மற்றும் ஆன்மீக வாழ்வினருடன் நேரடியாக சந்தித்து ஆலோசித்தாராம். இதன் விளைவாக, படம் உண்மைக்குப் மிகவும் நெருக்கமாகவும், யதார்த்தமானதாகவும் தோன்றியது. கேரளா மற்றும் வாரணாசி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், படத்திற்கு இன்னும் அதிகமான செறிவும் நேர்த்தியும் ஏற்பட்டது. எனினும், பட தயாரிப்பில் பல சிக்கல்கள் இருந்ததால், வெளியீடு தாமதமானது. பல மாறுதல்களுக்குப் பிறகே, ஆர்யா மற்றும் பூஜா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து படம் வெளியானது. வணிக ரீதியாக படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், இந்திய சினிமாவின் பார்வையை தமிழ்த் திரையுலகின் தரம் மற்றும் கலைப்பண்புகளை நோக்கித் திருப்பிய ஒரு முக்கியமான படைப்பாக இது அமைந்தது.
தோற்றாலும் ராஜாதான்
'தாரை தப்பட்டை' திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் வரலட்சுமி
தமிழ் சினிமாவில் 'பிதாமகன்' மற்றும் 'நான் கடவுள்' போன்ற படங்கள் மூலம் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் பாலா, அடுத்து எந்தப் படத்தை இயக்கப் போகிறார்? அந்த படம் எவ்வாறு திரைத்துறையில் ஒரு புதிய உயரத்தைத் தொடும் என்பதற்கான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் நிலவியது. இருந்தும் அவரது அடுத்தடுத்த படங்கள் அவற்றை பூர்த்தி செய்ய தவறிய படங்களாகவே இருந்தன. 2011-ஆம் ஆண்டில் வெளிவந்த 'அவன் இவன்' படம் ஒரு கிராமத்தின் வாழ்க்கை, குடும்ப உறவுகள் மற்றும் அதிலுள்ள மோதல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார், மதுமிதா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தில், குறிப்பாக விஷாலின் "காயத்திரி கண்ணு" என்ற கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேவேளையில், படம் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை ஒருங்கிணைக்க முயன்ற போதும், கதை முழுமையாக பார்வையாளர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. பல கதாபாத்திரங்களின் முடிவுகள் சரிவர இல்லாமல் இருந்ததுடன், எதிர்பார்த்த வலுவான கிளைமாக்ஸ் இல்லாமை படத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்தது. அதேபோல, 2016-ஆம் ஆண்டில் வெளிவந்த 'தாரை தப்பட்டை' படம் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சமூக அரசியல் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டங்களை வெளிப்படுத்த முயற்சித்தது. சசிகுமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், கதைத் களத்தின் மந்தபோக்கு மற்றும் பாலாவின் படங்களுக்கு உகந்த ஆழமான உரையாடல்கள் இல்லாமை, படத்தை பார்த்தவர்களுக்கு கசப்பான அனுபவத்தையே தந்தது. மேலும், அதிகமான சோகம், வன்முறை மற்றும் திருப்தியற்ற முடிவு ஆகியவை படத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
‘பரதேசி’-யில் அதர்வா மற்றும் 'வர்மா' -வில் துருவ் விக்ரம்
இருப்பினும், இவ்விரு படங்களுக்கும் இடையே வெளிவந்த ‘பரதேசி’ திரைப்படம் மீண்டும் பாலாவின் திறமையை உலகறிய செய்தது. ஆதி கால இந்தியாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் அதர்வா ராசுவாகவும், வேதிகா அங்கம்மாவாகவும் நடித்தனர். அவர்கள், பலரையும் கலங்க வைக்கும் வகையில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் எளிய கிராம மக்களின் சோகமான வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக படம் பிடித்து காட்டிய இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், பிலிம் பார் விருதுகள் என பல விருதுகளை அள்ளிய இப்படம் விமர்சன ரீதியாகவும் பல பாராட்டுகளை பெற்றது. இதற்கு பிறகு, 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா ஒரு நேர்மையான மற்றும் கடினமான காவல்துறை அதிகாரியாக தோன்றி நடித்திருந்தார். இரண்டு சிறுவயது காதலர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விசாரணைகளை மையமாகக் கொண்டு வெளிவந்த இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு, அவரது முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதாக இருந்தாலும், சில விமர்சகர்களால் அவரது பாத்திரம் இயல்புக்கு பொருந்தாததாகவும், எரிச்சலூட்டும் வகையிலும் விமர்சிக்கப்பட்டது. இறுதியில், 2020 ஆம் ஆண்டு தெலுங்கு ஹிட் திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’யின் தமிழ் ரீமேக்காக உருவான ‘வர்மா’ திரைப்படம் பாலாவிற்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பின்பு, பாலாவின் மேக்கிங், தயாரிப்பு குழுவுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் பாலா மற்றும் விக்ரமிற்கு இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, பாலா படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு, ‘அதித்ய வர்மா’ என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படி தொடர் தோல்வி, அதிகப்படியான விமர்சனம் என இயக்குநர் பாலாவின் திரைப்பயணத்தில் பல தடுமாற்றங்கள் இருந்தாலும், பாலாவின் படங்களின் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கை குறையவில்லை. காரணம், பாலாவின் படங்களில் வழக்கமான கதைக்களங்களை தவிர்த்து, வாழ்க்கையின் மிக கடினமான மற்றும் உண்மை சார்ந்த பகுதிகளை வெளிப்படுத்தும் விதம் பலரால் அதிகளவில் ரசிக்கப்பட்டது.
சாதிக்குமா ‘வணங்கான்’?
இயக்குநர் பாலா, அருண் விஜய் கூட்டணியில் சாதிக்க காத்திருக்கும் 'வணங்கான்'
நான்கு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, நடிகர் அருண் விஜய்யை நாயகனாக வைத்து இயக்குநர் பாலா, "வணங்கான்" என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். "வணங்கான்" என்ற சொல்லின் பொருள் யாரையும் வணங்காதவன் அல்லது அடிபணியாதவன் என்பது. கிட்டத்தட்ட இயக்குநர் பாலாவுக்கு கனகச்சிதமாக பொருந்தக்கூடிய தலைப்பு பெற்றுள்ள இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அருண் விஜய்யுடன் ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், சாயா தேவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் மேக்கிங் வீடியோவுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில், ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக நடத்த முடிவு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி பார்வையாளர்களை பிரம்மிப்பூட்டியிருந்தார்.
‘வணங்கான்’ ஆடியோ வெளியீடு மற்றும் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூர்யா
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல நட்சத்திரங்களும் இயக்குநர் பாலா குறித்து மனமாரப் பேசியதோடு, பல அற்புதமான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக, பாலா தன் வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசிய விதம் பலரையும் நெகிழச் செய்தது. சொல்லப்போனால் "வணங்கான்" படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பும் தொடங்கியது. ஆனால், சில காரணங்களால் பாலா மற்றும் சூர்யா இடையே ஒத்துப் போகாமல் இருவரும் சேர்ந்து சுமூகமான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள், பின்னர் அந்த நிகழ்வு கைவிடப்பட்டது. அதற்கு பின், நடிகர் அருண் விஜய் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டுகால சினிமா பயண நிகழ்வில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு, பாலாவை ‘அண்ணா, அண்ணா’ என அழைத்து நெகிழ்ச்சியோடு பேசிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. என்னதான் இந்த நிகழ்வு படத்திற்கான ப்ரோமோஷனாக பார்க்கப்பட்டாலும், அங்கு பேசிய ஒவ்வொருவரின் வார்த்தையும் பாலா எப்படிப்பட்ட நபர் என்பதை இந்த உலகுக்கு பறைசாற்றும் விதமாகவே அமைந்திருந்தது. எது எப்படி இருந்தாலும், 25 ஆண்டுகளை கடந்தும் எதிர்பார்ப்புக்குரிய இயக்குநராக திகழ்ந்து வரும் பாலாவின் வெற்றிப்படங்கள் வரிசையில் இந்த 'வணங்கான்' திரைப்படமும் தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பெற வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.